தமிழர் தலைவரின் பிறந்த நாள் விழாவில் பேராசிரியர் கே.எம்.காதர்மொய்தீன் வாழ்த்துரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 16, 2022

தமிழர் தலைவரின் பிறந்த நாள் விழாவில் பேராசிரியர் கே.எம்.காதர்மொய்தீன் வாழ்த்துரை

 இன்றைக்கு நாட்டில் இட ஒதுக்கீடுப் பிரச்சினைதான் மிகப்பெரிய பிரச்சினை:

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியரிடமிருந்துதான் அதற்கான தீர்வினை பெற முடியும்!

சென்னை, டிச.16 இன்றைக்கும் இட ஒதுக்கீடுப் பிரச்சினைதான் மிகப்பெரிய பிரச்சினையாக விளங்கிக் கொண்டிருக்கின்றது.இதற்கெல்லாம் அரசியல் கட்சிகளிடமிருந்து ஒரு பெரிய மாற்றத்தை, திருத்தத்தை பெற்றுவிட முடியும் என்று  யாரும்  நம்பிவிடக் கூடாது. இதற்குரிய மாற்றத்தைத் திருத்தத்தை, அதற்குரிய தீர்வினை, திராவிடர் கழகத் தலைவர்களிடம்தான் பெற முடியும் என்பது எங்களுடைய நம்பிக்கை, இதுதான் வரலாறு என்றார் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர்மொய்தீன் அவர்கள்.

தமிழர் தலைவர் ஆசிரியரின் 

90 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா

கடந்த 2.12.2022 அன்று  மாலை சென்னை கலைவாணர் அரங்கில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர்மொய்தீன் கருத்துரையாற்றினார்.

அவரது கருத்துரை வருமாறு:

பேரபின்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு வீரமணி அய்யா அவர்களுடைய 90 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவிற்குத் தலைமையேற்று நடத்திக் கொண்டிருக்கின்ற அருமைச் சகோதரருக்கும், இங்கே வாழ்த்துரை வழங்கி, விழாவிற்குப் பெருமைச் சேர்த்திருக்கின்ற அருமைத் தலைவர்களுக்கும், திரளாகப் பங்கேற்று இருக்கிற தமிழ்நாட்டில் உள்ளவர்களும், வெளிநாட்டிலிருந்து வந்து விழாவை சிறப்பித்துக் கொண்டிருக்கின்ற அன்பிற்கும், மரியாதைக்கும் உரிய அருமை சகோதர, சகோரிகளுக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அய்யா வீரமணி அவர்களுடைய பிறந்த நாளான இன்று 90 வயதை அவர்கள் எட்டியுள்ளார். காலமெல்லாம் சிறந்த வாழ்வை வாழவேண்டுமென்று வாழ்த்துவதற்காகத்தான் இங்கே நாம் கூடியிருக்கின்றோம்.

ஆசிரியர் அய்யாவை வாழ்த்துவது 

என்னுடைய கடமை

வாழுகின்ற காலமெல்லாம் அவர் நலமாக வாழவேண்டும் என்று சொல்வது நம்முடைய வழக்கம். அந்த வழக்கத்தின்படி, அய்யா அவர்கள் வாழவேண்டும் என்று, இதயக் கதவைத் திறந்து, இதயத்தின் மற்ற மற்ற பணிகளை கொஞ்சநேரம் மறந்து, இதயத்தைத் திறந்து அவர்களுக்கு வாழ்த்துச் சொல்வது என்னுடைய கடமை என்று நான் நினைக்கின்றேன். அதே கடமையை நீங்களும் செய்யவேண்டும் என்று பணிவன்போடு உங்களுக்கு வேண்டுகோள் வைக்கிறேன்.

வீரமணி அய்யா அவர்களுடைய வாழ்வைப்பற்றி, வரலாற்றைப்பற்றி, ஆற்றியிருக்கின்ற சாதனைகளைப்பற்றி, அவர் ஏற்படுத்தியிருக்கின்ற மாற்றங்களைப்பற்றி, உருவாக்கியிருக்கிற புதிய எழுச்சியைப்பற்றி, தமிழ்நாட்டில் ஏறத்தாழ 80 ஆண்டுகாலமாக இன்றுவரை வரலாற்றிலே நீங்காத இடத்தைப் பெற்றிருக்கக்கூடிய அனைத்தையும் அவர் செய்துகொண்டிருக்கின்றார்.

பெரியார் போட்டுக் கொடுத்த பாதையில் சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்!

பெரியார் அவர்களோடு நீண்ட காலம் தொடர்பு கொண்டு வாழ்ந்து, அவருடைய வழியில் நின்று, உறுதிமொழி எடுத்து, தந்தை பெரியார் அவர்கள் விட்டுச் சென்ற பணிகளை, அவர் போட்டுக் கொடுத்த பாதையில், எவ்வித சபலங்களுக்கும் ஆட்படாமல் செய்து முடிக்க உறுதி கொள்வதாக அவர் சொன்னார்.

இதுதான் அவர் ஏற்றுக்கொண்ட உறுதிமொழி. அந்த உறுதிமொழியில் பிசகாமல், எந்தவிதமான தவறுகளும் நிகழ்ந்துவிடாமல், இவ்வளவு காலமாகத் தொடர்ந்து தன்னுடைய பணிகளை மிகச் சிறப்பாக செய்துகொண்டிருக்கின்றார்.

உலக அளவிலே ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கியவர் ஆசிரியர் அய்யா

பெரியார் காட்டிய வழியில், பேரறிஞர் அண்ணா அவர்கள், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், அவருடைய வாரிசாக இன்றைக்கு தமிழ்நாட்டில் நடைபெறக்கூடிய ‘திராவிட மாடல்’ ஆட்சியை செய்துகொண்டிருக்கின்றார் தளபதி அவர்கள். இன்னும் தமிழ்நாட்டில், தமிழ்நாடு கடந்த பல்வேறு மாநிலங்களில் வாழக்கூடிய தமிழ் இனத்தவர்கள் அத்துணை பேரும், தமிழ் மொழியின் பெருமை, தமிழ்நாட்டினுடைய பெருமை, திராவிடத்தினுடைய பெருமை, திராவிட வரலாற்றினுடைய பெருமைகளை உணர்ந்திடும் வகையில் நாள்தோறும் எழுதி, பேசி, பரப்புரை செய்து, தமிழ்நாட்டிற்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கு மட்டுமல்லாமல், உலக அளவிலே ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கிய பெருமை ஆசிரியர் அய்யா அவர்களைச் சாரும்.

சமூகநீதிக் காவலர் என்று அவரைப் பாராட்டுவதுதான் சரியான பாராட்டு!

பாராட்டவேண்டும் என்பதற்காக இதை நான் சொல்லவில்லை. அவருடைய வாழ்வில், நெருங்கி ஆராயும்பொழுது, கடலூரில் பிறந்து, பெரியார் திடலூரில் வளர்ந்து, விடுதலை மடலூரில் திகழ்ந்து, பார் முழுவதும் பெரியாரின் கொள்கையைப் பரப்பிக் கொண்டிருக்கின்ற ஒரு மிகப்பெரிய சாதனையாளர், சமூகநீதிக் காவலர் என்று அவரைப் பாராட்டுவதுதான் சரியான பாராட்டுதலாக இருக்கும்.

இங்கே அருமைச் சகோதரர் பல்வேறு கருத்துகளை இங்கே சொல்லியிருக்கிறார்.

இன்றைய வரலாற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் - சமூகநீதி, இட ஒதுக்கீடு இவற்றைத் தொடங்கி வைத்தது அகில இந்திய முஸ்லீம் லீக் என்பதை உலகமறியும்.

இட ஒதுக்கீட்டை அடிப்படையாகக் கொண்டுதான் இயங்கிக் கொண்டிருக்கின்றன

அதற்குப் பிறகுதான், தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு பிரச்சினையே எழுந்தது. அதற்காகத்தான் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் வந்தது. அதற்குப் பிறகுதான், திராவிடர் கழகம் தோன்றியது. அதை வைத்துத்தான் சுயமரியாதை இயக்கம் வந்தது; அதை வைத்துத்தான் திராவிட முன்னேற்றக் கழகம் வந்தது. தமிழ்நாட்டில் நிகழ்ந்த அத்துணை நிகழ்வுகளும், வரலாற்றுச் சம்பவங்களும், இட ஒதுக்கீட்டை அடிப்படையாகக் கொண்டுதான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இன்றும் அப்படித்தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

இன்றைக்கும் அந்த இட ஒதுக்கீடுப் பிரச்சினைதான் மிகப்பெரிய பிரச்சினையாக விளங்கிக் கொண்டிருக்கின்றது.

இதற்கெல்லாம் அரசியல் கட்சிகளிடமிருந்து ஒரு பெரிய மாற்றத்தை, திருத்தத்தை பெற்றுவிட முடியும் என்று  யாரும்  நம்பிவிடக் கூடாது.

இதற்குரிய மாற்றத்தைத் திருத்தத்தை, அதற்குரிய தீர்வினை, திராவிடர் கழகத் தலைவர்களிடம்தான் பெற முடியும் என்பது  எங்களுடைய நம்பிக்கை. இதுதான் வரலாறு. இந்திய வரலாறும் அதுதான் - இந்தியன் வரலாறும் அதுதான்.

ஆக, அய்யா ஆசிரியர் அவர்களுடைய வழிகாட்டுதலின்படி, மிகப்பெரிய மாற்றங்களைத் தமிழ்நாட்டில் செய்யவேண்டும் என்று - இதற்குமுன்பு செய்த அத்துணை மாற்றங்களையும் அவர்களை வைத்துத்தான் செய்திருக்கின்றோம். இப்பொழுதும் அப்படி செய்வதற்குத்தான்  முயன்று கொண்டிருக்கின்றோம். 

அய்யா வீரமணி அவர்களுடைய வாழிகாட்டுதலில்தான்!

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய அரசியலிலேயே இப்படிப்பட்ட மாற்றங்களை செய்யவேண்டுமானால், தமிழர் தலைவர் திராவிடர் கழகத்தின் அன்புத் தலைவர் அய்யா வீரமணி அவர்களுடைய வாழிகாட்டுதலில்தான் அது நடக்க முடியும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

ஒவ்வொருமுறையும் இட ஒதுக்கீடு பிரச்சினை வரும்பொழுது, அவர் ஆற்றியிருக்கின்ற பணிகளின் பெருமை, அதற்காக நடத்தியிருக்கின்ற போராட்டங்கள், விடாமல் அவர் பேசியது, எழுதியது, அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து, அவர்களையெல்லாம் ஒருங் கிணைத்து, மாற்றங்களை உருவாக்கியது சரித்திரத்தில் இடம்பெற்றிருக்கிறது.

அப்படிப்பட்ட அற்புதங்களை செய்துகொண்டி ருக்கும் அய்யா ஆசிரியர் அவர்கள், நீண்ட காலம் வாழ்ந்து, நமக்கெல்லாம் வழிகாட்டியாக இருக்க வேண்டும்.

 நாம் அத்துணை பேரும் ஆசிரியர் அய்யா அவர்களுக்குப் பக்கபலமாக இருக்கவேண்டும்

ஆசிரியர் அய்யா அவர்கள் இன்னும் பல்லாண்டு, பல்லாண்டு வாழ்ந்து அவர் காட்டிய இந்த நெறியை, இந்த வழியை, பெரியாருடைய அந்தப் பாரம்பரியத்தைத் தொடரவேண்டும். அதற்கு நாம் அத்துணை பேரும் ஆசிரியர் அய்யா அவர்களுக்குப் பக்கபலமாக இருக்கவேண்டும் என்பதைத் தெரிவித்து என்னுரையை நிறைவு செய்கிறேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் வாழ்த்துரையாற்றினார்.

No comments:

Post a Comment