தந்தை பெரியார் நினைவு நாள் சூளுரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 24, 2022

தந்தை பெரியார் நினைவு நாள் சூளுரை

தந்தை பெரியார் நினைவு நாள் 1973 டிசம்பர் 24ஆம் நாள்; தந்தை பெரியார் மறைந்த நான்கு நாள்களுக்கு முன்பு சென்னை தியாகராயர் நகரில் தனது இறுதி உரையை வழங்கினார். 

அந்த முழக்கத்தை ஒரு முறை ஒலி நாடாவில் கேட்டுப் பாருங்கள் - மரண சாசனம் என்று வெளி வந்துள்ள நூலைப் படித்துப் பாருங்கள். நம் மக்களுக்கு தந்தை பெரியார் கூறிய அறிவுரையை  கொஞ்சம் கவனமாக படித்துப் பாருங்கள். அவருடைய தொண்டு என்ன? அவர் எதற்காக பாடுபட்டார்? 

"இந்த நாட்டின் பெரும்பாலான மக்களாகிய பார்ப்பனர் அல்லாதார் சாஸ்திரப்படி, சட்டப்படி சூத்திரர்களாக ஆக்கப் பட்டு இருக்கிறார்களே. சூத்திரர்கள் என்றால் வைப்பாட்டி மக்கள் என்று பொருள் அல்லவா, இதை கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால், சாஸ்திர சம்பிரதாயங்களின் பெயரால் ஆணி அடித்து வைத்திருக்கிறார்களே, அதைவிட பெருங் கொடுமை என்னவென்றால் சுதந்திர நாடு என்று சொல்லப் படுகின்ற இந்தியாவின் அரசியல் சட்டத்திலேயே மதப் பாதுகாப்பு என்ற பிரிவில் ஜாதியை கெட்டியாக பாதுகாத்து வைத்திருக்கிறார்களே? அப்படி என்றால் இதனுடைய பொருள் என்ன? 

சுதந்திர இந்தியாவில் வாழும்  பெரும்பாலான மக்களாகிய நாம் சூத்திரர்கள் தான் - பார்ப்பனர்களின் வைப்பாட்டி மக்கள் தான் எனும் இழிவு இன்னும் தொடர்கிறதே! இதைப் பற்றி யாருக்கும் வெட்கம் இல்லையா? இந்த இழிவை எப்பொழுது ஒழிக்க போகின்றோம்? ஜாதியைப் பாதுகாக்கின்ற வேதங்களை சாஸ்திரங்களை புராணங்களை கடவுள்களை போட்டு உடைத்து இருக்கின்றோம்; ஜாதியை பாதுகாக்கின்ற இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பகுதியை கொளுத்தி இருக்கிறோம் - கடும் சிறை வாசம் சென்றிருக்கிறோம்.

இவையெல்லாம் எதற்காக? நம்முடைய இழிவை போக்கு வதற்காகத் தானே!" தந்தை பெரியார் அவர்கள் மரண சாசனம் போல கூறினாரே - உங்களை எல்லாம் சூத்திரனாக விட்டுவிட்டு சாகப் போகின்றேனே என்று வேதனைப்பட்டாரே! 

"உங்கள் கடமை என்றால் உங்கள் ஒருவரைப் பொறுத்தது அல்ல - தமிழர் என்று சொல்லுகிற நம் இத்தனைக் கோடி மக்களையும் பொறுத்தது பிறகு  நாம் வட்டியும் முதலுமாய் உயரலாம். ஒன்றும் தேங்கிப் போகாது; நம் நாட்டு முன்னேற்றம் என்று உங்களை  வணக்கத்தோடு எல்லாம் கேட்டுகிட்டு இந்த ஏற்பாடு பண்ணி  இவ்வளவு பொறுமையா இருந்ததற்கெல்லாம் காது கொடுத்து கேட்டதற்கு எனது மனப் பூர்த்தியான நன்றியறிதலைத் தெரிவித்துக் கொண்டு என் பேச்சை முடித்துக் கொள்கிறேன்"

 என்று இறுதியாக பேசினாரே - என் பேச்சை முடித்துக் கொள்கிறேன் என்று கூறியிருந்தாலும் அவருடைய பேச்சு  அதுதான் இறுதியாக அமைந்துவிட்டது.  தந்தை பெரியார் குறிப்பிடுகிறார். "இந்தப் பிரச்சினையிலே நாங்கள் 'கடவுள் இல்லை' என்று சொல்லவில்லை, கடவுள் இருக்குதுன்னு என்றும் சொல்லல - கடவுள்னா என்னன்னு சொல்லுங்க  என்று கேட்கிறோம் அவ்வளவுதான்; ஒன்றுமே இல்லாமல் எந்த முட்டாளாவது சொன்னான் என்றால் நினைத்ததெல்லாம் 'அரசமரம் கடவுள்', 'வேப்பமரம் கடவுள்', 'ஓணான் கடவுள்', 'பாம்பு கடவுள்' 'அப்புறம் நினைச்சதெல்லாம் கடவுள்'  அது முட்டாள்தனம்  - எவ்வளவு நாசமாகிறது?  இந்தப் பைத்தியக் காரத்தனத்துக்கு பணம், நம் அறிவு எவ்வளவு நாசமாகிறது - இவ்வளவு பண்ணியும் தேவடியாள் மகன் பட்டமல்லவா தலை மேலே இருக்கிறது" என்று தந்தை பெரியார் கேட்ட கேள்விக்கு இன்று வரை எவராவது யோக்கியமாக பதில் சொல்ல முடிகிறதா? இனி தான் பதிலும் சொல்லுவார்களா? 

தந்தை பெரியார் இறுதியாக நடத்திய மாநாடு கூட தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாடு தான். அந்த மாநாட்டு தீர்மானம் கூட என்ன சொல்கிறது? இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள 17 ஆவது பிரிவில் உள்ள தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்பதற்கு பதிலாக ஜாதி ஒழிக்கப்படுகிறது என்று திருத்தப்பட வேண்டும் என்று கேட்டாரே - நியாயமாக இந்த கருத்தை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு நல்ல முடிவுக்கு வந்திருக்க வேண்டாமா? இது ஒரு கட்சி பிரச்சினையா  - இல்லை அரசியல் பிரச்சினையா, இல்லையே! மனித உரிமைப் பிரச்சினை தானே - மனிதனுக்கு மனிதன் பேதம் எங்கே இருக்கிறது? அப்படிப் பேதம் இருக்கிறது என்று கருதினால் அதைவிட முட்டாள் தனமும், போக்கிரித்தனமும், ஜாதி ஆதிக்கக் கொழுப்பும் வேறு எதுவாக இருக்க முடியும்? தந்தை பெரியாருடைய கொள்கை என்பது    பேதமற்ற இடம்தான் மேலான  திருப்தியான  இடம் என்பதாகும்.

மனிதன் பகுத்தறிவு பெற்று இருக்கிறான் என்பதற்கு அடையாளம் மனிதநேயம் தானே! கடவுளை எதிர்த்ததற்கும், மதம், வேதம் சாஸ்த்திரக் குப்பைகளை எரித்ததற்கும், சமூகநீதிக்காகப் போராடியதற்கும் ஜாதி ஒழிப்புக்காகவும் பெண்ணடிமை ஒழிப்புக்காகவும் பாடுபட்டது மனிதத் தன்மை, சமத்துவ அடிப்படையில் தானே!

மதவாதம் தலைதூக்கி நிற்கும் இந்தக் கால கட்டத்தில் தந்தை பெரியார்தான் மாமருந்தாகும் - பேராயுதமாகும்.

தந்தை பெரியார் காண விரும்பிய புத்துலகைப் படைக்க அவர் போட்டுத் தந்த பாதையில் பயணிக்க, அவர்தம் நினைவு நாளில் சூளுரைப்போம்!


No comments:

Post a Comment