வாழ்க இனமானப் பேராசிரியரின் தொண்டு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 19, 2022

வாழ்க இனமானப் பேராசிரியரின் தொண்டு!

 இனமானமும் - சுயமரியாதையும் ஊட்டிய இனமானப் பேராசிரியரின் வாழ்வு நமக்குக் கலங்கரை வெளிச்சமாகும்!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

இனமானமும் - சுயமரியாதையும் ஊட்டிய இனமானப் பேராசிரியரின் வாழ்வு நமக்குக் கலங்கரை வெளிச்சமாகும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நம் இனமானப் பேராசிரியர் மானமிகு க.அன்பழகன் அவர்களது நூற்றாண்டு நிறைவு நாள் (19.12.2022) இன்று!

டிசம்பர் 19 ஆம் தேதிதான் தந்தை பெரியார் தனது முழக்கத்தை முடித்துக்கொண்டு, நமக்கு வரலாறாகிய நாள்.

அந்த நாள்தான் இனமானப் பேராசிரியர் பிறந்த நாள்!

கொள்கை லட்சியங்கள் - அதனை உருவாக்கி அதற் காகவே வாழ்வை அர்ப்பணித்து உழைக்கும் தலைமை!

அத்தலைவர் தந்த இலட்சியப் பாதை -

அவற்றைக் கட்டுப்பாட்டுடன் காக்கும் கட்டுப்பாடாக செயல்படும் அமைப்பின் இயக்கம்.

இம்மூன்றும்தான் மிக முக்கியம்.

தமிழன் - திராவிடன் என்றால் என்ன?

நமது இனமானப் பேராசிரியர் இம்மூன்றையும் அவர் நேசித்த ‘முத்தமிழாக'வே கருதி செயலுருக் கொடுக்க தனது மாணவப் பருவம் தொடங்கி, முதுமை - முதிர்ச்சி என்னும் முதுமைப் பருவம் வரை கடினமாக உழைத்த பகுத்தறிவுச் செம்மல்; சுயமரியாதைப் பேரொளி.

தமிழரா? திராவிடரா? என்ற விவாதத்திற்கு ஆணியடித்ததுபோல, பதிலுரையை ‘நச்'சென்று தந்து தெளிய வைத்தவர் நம் இனமானப் பேராசிரியர் ஆவார்.

‘‘தமிழன் என்றால் மொழி உணர்வு வரும் என்றும், திராவிடன் என்றால் மானமும், ரோஷமும் கூடுதலாக இருக்கும்'' என்றும் பெரியார் திடல் நிகழ்ச்சியில் வெட்டு ஒன்று - துண்டு இரண்டாக அழுத்தமாகச் சொன்னவர் நமது இனமானப் பேராசிரியர்.

முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் - 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அவரது மணிவிழாவினை 40 ஆண்டுகளுக்குமுன் முத்தமிழறிஞர் கலைஞர் எந்தப் பெரியார் திடலில் நடத்தி மகிழ்ந்தாரோ, அதன் தொடர்ச்சிபோலவே, அவரது மைந்தரும் ஒப்பற்ற ‘திராவிட மாடல்' ஆட்சியின் முதலமைச்சருமான மாண்புமிகு மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்களும் 99 ஊர்களில் தமிழ் நாடெங் கும் பொதுக் கூட்டங்களை நடத்தி, 100 ஆவது நிறைவு விழா கூட்டத்தை பெரியார் திடலில் கொள்கைப் பிரச் சாரத் திருவிழாவாக நடத்தியது மிகவும் பாராட்டத்தக்கது!

இனமானக் கொள்கை வெள்ளம் நாடெல்லாம் பாய்ந்திடச் செய்தது மிகப் பொருத்தம்!

மதவாத சக்திகளும், ஜனநாயகத்தின் இடத்தில் பாசிசத்தை அரியணை ஏற்றிட முயற்சிக்கும் சனாதனக் கும்பலும் தலை துள்ளி ஆடும் இன்றைய காலகட்டத்தில், இனமானப் பேராசிரியரின் நூற்றாண்டு - அதற்கான சரியான தடுப்பூசி போன்ற கொள்கைவயப்பட்ட அருமையான ஏற்பாடு.

இதனைச் சிறப்புடன் நடத்தி, இனமானக் கொள்கை வெள்ளம் நாடெல்லாம் பாய்ந்திடச் செய்தது மிகப் பொருத்தம்!

முன்பு தேவைப்பட்டதைவிட இப்போதுதான் தத்துவ ரீதியாக இனமானப் பேராசிரியரின் தன்மான முழக்கங்கள் தகத்தகாய ஒளியுடன் பாயவேண்டிய நேரம்!

நமக்குக் கலங்கரை வெளிச்சமாய் வழிகாட்டட்டும்!

பேதமிலா பெருவாழ்வினை பேசு சுயமரியாதைக் கொள்கைமூலம் பரப்ப - இனமானப் பேராசிரியரின் படமும், வாழ்வும் அவர் தந்த கருத்தியல் விளக்கங்களும் நமக்குக் கலங்கரை வெளிச்சமாய் வழிகாட்டட்டும்!

வாழ்க பெரியார்!

வாழ்க இனமானப் பேராசிரியரின் தொண்டு!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
19.12.2022

No comments:

Post a Comment