Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
பிற ஏட்டிலிருந்து
December 20, 2022 • Viduthalai

எப்படி இருந்தது இந்தியப் பொருளாதாரம்?

உலகின் பொருளாதார வளர்ச்சி விகிதம், 2022இன் தொடக்கத்தில் 5.9விழுக்காடுஆக இருந்தது. ஆண் டின் முடிவில், 4.4 விழுக்காடு ஆகவும், 2023இல் 3.8 விழுக்காடுஆகவும் அது குறையும் என பன்னாட்டு நாணய நிதியம் (IMF) மதிப்பீடு செய்தது.

அதேபோல், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம், 2020-2021இல் 9.0 விழுக்காட்டிலிருந்து, 7.1 விழுக்காடுஆகக் குறையும் என்றும் அய்எம்எஃப் கணித்திருந்தது. 2021இல், பொருளாதாரத் தேவையில் பெரும்பங்கு வகிக்கும் தனியார் நுகர்வு-செலவு, பெருந்தொற்றுக் காலத்தைக் காட்டிலும் குறைவாக இருந்தது. அதேசமயம், அரசின் பொதுச் செலவு இரண்டு இலக்க விகிதத்தில் அதிகரித்திருந்தது. நிலை யான மூலதன அதிகரிப்புக்கான வாய்ப்புகள் இருந்தன. இது பொருளாதார மீட்சிக்கான நம்பிக்கையை அளித்தது.

மக்களின் நுகர்வு - செலவு பெரும் தொய்வாக இருந்தமைக்குக் காரணம், வேளாண்மைக்கு எதிரான வாணிப வீதம். வேளாண்மைப் பண்டங்களின் விலை 5.2 விழுக்காடு ஆக அதிகரித்திருந்தது. அதேசமயம், வேளாண்மை அல்லாத பண்டங்களின் விலையோ 11.4விழுக்காடுஆக உயர்ந்திருந்தது. இதன் பொருள், வேளாண்மைத் துறையில் உருவான வருமானத்தை வேளாண்மை அல்லாத துறைகள் விழுங்கிவிட்டன என்பதே. இதன் காரணமாக, கிராமப்புற மக்களின் தேவைகள் போதுமான அளவு நிறைவேறவில்லை.

வேளாண்மைத் துறைகளின் வருமானத்துக்கும், கார்ப்பரேட் லாப விகிதங்களுக்கும் பெருத்த இடை வெளி இருந்தது. தானியங்கி வாகன விற்பனை - குறிப்பாக இருசக்கர வாகனங்கள் விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டது. கிராமப்புறத் தேவை குறைவு, தொழில் துறை உற்பத்தி மற்றும் சேவை உற்பத்தி யையும் பாதித்தது. இத்தகைய சூழ்நிலையில் 2022இல், இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுத்துச் செல்வது சவால்மிக்கதாக அமைந்தது. இதனைச் சரிசெய்ய, கிராமப்புற வருவாயையும், வேலைவாய்ப்பையும் உயர்த்தி, மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க வேண்டும். சிறு, குறு, நடுத்தரத் தொழில்களின் வளர்ச் சிக்கு முன்னுரிமை அளிப்பது போன்றவையும் பொருளாதார வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்கும்.

2022இன் பொருளாதார நிலையைப் பகுப்பாயும் போது, உலக வங்கி, இந்திய ரிசர்வ் வங்கி, அய்நாவின் வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு ஆகி யவை மேற்கொண்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) கணிப்புகள் சற்றேறக்குறைய ஒன்றாகவே உள்ளன. மூன்றும் இந்தியாவின் ஜிடிபி முன்கணிப்பைக் குறைத்துக்கொண்டே வந்தன. இந்திய ஜிடிபி வளர்ச்சி விகிதம், 8.7விழுக்காடுஆக இருக்கும் என முதலில் கூறிய உலக வங்கி, அதை 8விழுக்காடு, 7.5விழுக்காடு என குறைத்துக்கொண்டே வந்தது. இறுதியில், 6.5 விழுக்காடுதான் எனக் கூறியுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி, 7.2 விழுக்காட்டிலிருந்து 7.0விழுக்காடுஆகக் குறைத்துள்ளது.

ஜிடிபி வளர்ச்சி விகிதம் குறைவாக இருந்தபோதும், உலக வங்கியின் சமீபத்திய அறிக்கை சற்று நம்பிக்கை அளிக்கிறது: “உலகளாவிய பணக் கொள்கைக் கட்டுப் பாடுகள், அதிகரித்துவரும் பணவீக்கம் எல்லாம் சேர்ந்து இந்தியப் பொருளாதாரத்தை 2022-2023ஆம் ஆண்டில் பின்னடையச் செய்திருந்தாலும், வளர்ந்து வரும் நாடுகளில் முதன்மை நாடாக வளர வாய்ப்புள்ளது.

பன்னாட்டு வர்த்தகச் சூழல் இந்தியாவுக்குச் சாதக மாக இல்லையென்றாலும், அதன் பேரியல் பொருளா தாரக் கட்டமைப்புகள், வளர்ந்துவரும் நாடுகளோடு ஒப்பிடும்போது வலுவான நிலையில் உள்ளது. அதன் தனித்துவமான உள்நாட்டுச் சந்தைக் கட்டமைப்பு, "பன்னாட்டு வாணிபப் போக்குகளில் பெரிய பாதிப் புகள் உருவாகாமல் தடுக்கும்” என இந்தியாவுக்கான உலக வங்கி இயக்குநர் அகஸ்டே டானோ குவாமே அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

அமெரிக்கப் பொருளாதாரத்தில் 1விழுக்காடு பாதிப்பு ஏற்பட்டால், அது இந்தியப் பொருளாதாரத்தில் 0.4விழுக்காடு பாதிப்பையே உருவாக்கும். மற்ற வளரும் நாடுகளில், அது 1.5விழுக்காடு பாதிப்பை உருவாக்கும். 2020இல் 642.4 பில்லியன் டாலராக இருந்த நாட்டின் வெளிநாட்டுச் செலாவணிக் கையிருப்பு, இப்போது 528.37 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. இவ்வாறு வெளிநாட்டுச் செலாவணி பற்றாக்குறை அதிகரித்திருந்தாலும், அது அந்நிய நேரடி மூலதன வருகையின் மூலம் சரிசெய்யப்படுகிறது.

டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, கடந்த ஆண்டைக் காட்டிலும் 10விழுக்காடு குறைந்து, ஒரு டாலருக்கு 83ரூபாயாக அதிகரித்தது. இதனைத் தடுக்க, இந்திய அரசு எடுத்த முயற்சிகள் பலனளிக்க வில்லை. இதன் காரணமாக, நமது இறக்குமதிப் பண்டங்களின் விலை அதிகரித்துள்ளது. ஏற்றுமதி வருவாய் குறைத்துள்ளது. இது அந்நியச் செலாவணி கையிருப்பை மேலும் குறைந்துள்ளது. பன்னாட்டுச் சந்தையில் பெட்ரோலியப் பொருட்களின் விலையில் நிச்சயமற்ற தன்மை நீடிக்கிறது. இதன் காரணமாக, 2022 மார்ச் மாதம் 1.5விழுக்காடுஆக இருந்த வர்த்தகப் பற்றாக்குறை, அக்டோபர் மாதத்தில் 2.8விழுக்காடு ஆக உயர்ந்துள்ளது.

2022 ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில், வேலை கேட்டு விண்ணப்பித்தவர் களின் 1.5 கோடி மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. பெருந் தொற்றுக் காலத்தில் வேலையிழந்த 2.1 கோடிப் பேர், இன்னும் மீள வேலைகளைத் தேடிக்கொள்ள முடிய வில்லை. பெருந்தொற்றுக் காலத்தில் உலகம் முழுவ தும் வேலையிழந்த 7 கோடிப் பேரில், இந்தியர்கள் மட்டும் 5.6 கோடிப் பேர்.

உலக பசிபிக் குறியீட்டில் 121 நாடுகளில் இந்தி யாவின் இடம் 107. மனித வள மேம்பாட்டுக் குறியீட்டில் 191 நாடுகளில் 132ஆவது நாடாகத் தொடர்ந்து மிகவும் பின்தங்கியுள்ளோம். ஒட்டுமொத்தப் பணவீக்க விகிதம் 7.4விழுக்காடு என்றாலும், தானியங்களின் விலைவாசி உயர்வு 11.53 விழுக்காடு. மசாலாப் பொருட்களின் விலை ஏற்றம் 16.5விழுக்காடு. காய்கறி கள் விலை உயர்வு 16.86விழுக்காடு போன்றவை கவனத்தில் கொள்ளத்தக்கவை. பல்வேறு உணவு தானியங்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை மிகக் குறைவாகவே உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு அரசு எடுத்த முயற்சிகள், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தை மீட்டெடுக்க வில்லை. தனியார் நுகர்வு-செலவு 7.9 விழுக்காட்டி லிருந்து, 6.7விழுக்காடு ஆகக் குறைந்துள்ளது. அரசின் பொதுச் செலவுகள் 2.6விழுக்காட்டிலிருந்து 5.1 விழுக்காடு என இருமடங்கு அதிகரித்துள்ளது. மொத்த நிலையான மூலதன ஆக்கம் 15.8விழுக்காட்டிலிருந்து சரிபாதியாகக் (8.2விழுக்காடு) குறைந்துள்ளது. நாட்டின் ஏற்றுமதி, இறக்குமதி இரண்டும் மூன்று மடங்கு வீழ்ச்சி யடைந்துள்ளன. ஏற்றுமதி 24.3 விழுக்காட்டிலிருந்து வெறும் 9 விழுக்காட்டுக்கும், இறக்குமதி 35.5 விழுக் காட்டிலிருந்து 10.2 விழுக்காட்டுக்கும் வீழ்ந்துள்ளன. வேளாண் துறையில் சற்று ஏற்றம் இருந்தாலும் (3 விழுக்காட்டிலிருந்து 3.6 விழுக்காடு ஆக), தொழில் துறை வளர்ச்சியும் (10.3விழுக்காட்டிலிருந்து 5.8 விழுக் காடு ஆக) பாதியாகக் குறைந்துள்ளது.

இந்த ஆண்டின் வளர்ச்சியை வேகப்படுத்துவதில் இவ்வளவு சிக்கல்கள் இருந்தாலும் ஒட்டுமொத்த நிதிக் கொள்கையின் வெளிப்படைத்தன்மை, நம்பகத் தன் மையை மேம்படுத்தியுள்ளது. அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்ய தளங்களை விரிவடையச் செய்துள் ளது. எதிர்வரும் காலங்களில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள் மூலம் கூடுதல் பலனை எதிர்பார்க் கலாம் என்கிறது உலக வங்கி அறிக்கை.

“உலகளாவிய வர்த்தகச் சூழ்நிலைக்குத் தக்கவாறு உருவாக்கப்பட்ட கொள்கைகள் உலகப் பொருளாதாரச் சவால்களைச் சந்திப்பதற்கு ஏதுவாக இருக்கின்றன. அத்தோடு உள்நாட்டுச் சவால்களைச் சந்திக்கவும் அது போதுமானதாக இருக்கிறது” என உலக வங்கியின் மூத்த பொருளாதார நிபுணர் துருவ் சர்மா கூறுகிறார்; பொறுத்திருந்து பார்ப்போம்! டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, கடந்த ஆண்டைக் காட்டி லும் 10 விழுக்காடு குறைந்து, ஒரு டாலருக்கு 83 ரூபாயாக அதிகரித்தது. இதனைத் தடுக்க, இந்திய அரசு எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.

 - நா.மணி பொருளாதாரத் துறைத் தலைவர் ஈரோடு கலை அறிவியல் கல்லூரி, 

தொடர்புக்கு: tnsfnmani@gmail.com

நன்றி:இந்து தமிழ் திசை, 20.12.2022

Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
காந்தியாரின் 76 ஆவது நினைவு நாள் இன்று!
January 30, 2023 • Viduthalai
Image
முதலமைச்சர் மோடியைப் பார்த்து, பிரதமர் வாஜ்பேயி ''ராஜதர்மத்தைக் காப்பாற்றுங்கள்'' என்று சொல்லவேண்டிய அவசியம் என்ன?
January 27, 2023 • Viduthalai
Image
அதானி நிறுவன ஊழல்
January 28, 2023 • Viduthalai
பதிலடிப் பக்கம்
January 27, 2023 • Viduthalai
Image
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை உடனே செயல்படுத்த வலியுறுத்திய மதுரை திறந்தவெளி மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்!
January 28, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn