தாயுமானவரே வாழ்க! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 2, 2022

தாயுமானவரே வாழ்க!

இரா.ஜெயக்குமார் 

பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்.


"திராவிடர் கழகம் என்பது ஒரு கருத்துப்பரப்பல் இயக்கம். நாதசுரக் குழாயாக இருந்தால் ஊதியாக வேண்டும். தவிலாயிருந்தால் அடிப்பட்டுத் தானாக வேண்டும் என்பது போல் எனக்குத் தொண்டையில் குரல் உள்ளவரையில் பேசியாக வேண்டும்; பிரசங்கம் செய்தாக வேண்டும்" என்றார் தந்தை பெரியார். அத்தகைய தந்தையின் சூளுரையை தன் வாழ்நாள் பணியாக்கிச் செய்து வரும் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒப்பற்ற தலைவராக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பீடு நடைபோடுகிறார்.

நாட்டின் திசையெங்கும் 90 வயதிலும் 9 வயதில் மேடையேறியபோது எந்த வீரியத்தோடு முழங்கினாரோ அதே வீரியத்துடன் முழங்கி வருகிறார். நாட்டில் நச்சுக் கருத்துகளைத் திணிக்கத் துடிக்கும் நாசகாரக் கும்பலை நாட்டு மக்களிடையே அம்பலப்படுத்தி வருகிறார். சமூக நீதியை விழுங்க வரும் கட்டுவிரியன்களை நாளும் பெரியார் தடி கொண்டு தாக்கி வருகிறார். இன்றல்ல, நேற்றல்ல; 9இல் இருந்து 90லும் இத்தனையாண்டு பொதுவாழ்வில் எத்தனை ஏச்சுகள், பேச்சுகள், ஏளனங்கள், பாராட்டு மாலைகள், விருதுகளைக் குவித்திருப்பார் என்பதைக் கணக்கெடுத்தால் கணினி கூடத் தோற்றுப் போகக் கூடும்.

தமிழருக்காய் நாளும் நாளும் உழைத்த நம் பெரியாரைத் தந்தை என்று அழைத்தோம், தந்தை பெரியாரால் தமிழருக்குக் கிடைத்த நன்கொடையான தமிழர் தலைவர் ஆசிரியரை நாட்டின் தலைவர்கள் எல்லாம் எங்கள் தலைவர் வீரமணி என்றும், எங்கள் வழிகாட்டி என்றும், எங்களை வழிநடத்தும் தலைவர் என்றும் போற்றுகின்றனர். இவை அவரின் அதிகாரத்தால் வந்தவை அல்ல. நாட்டை வழிநடத்தும் அனுபவத்தால் வந்த புகழ்மாலைகள்.

தந்தை பெரியாருக்குப் பின்...

தந்தை பெரியார் அவர்கள் மறைந்தபோது, திராவிடர் கழகம் இனியும் என்னவாகுமோ என்ற நினைப்பு ஒரு சிலருக்கு ஏற்பட்டது உண்டு. அவர்களுக்கெல்லாம் பதிலளிக்கும் வகையில், "தந்தை பெரியாரின் கொள்கை கோட்பாடுகளை, இலட்சியத்தை, பகுத்தறிவுப் பிரச்சாரத்தை சமுதாய எழுச்சிக்காகவும், மேம்பாட்டுக்காகவும் உயர்த்திப் பிடித்து அதை அவனியெங்கும் பரப்புகின்ற பணியில் அயராது தொண்டாற்றி வரும் தமிழர் தலைவர் இளவல் வீரமணி" என்று முத்தமிழறிஞர் கலைஞர் பாராட்டிப் போற்றினாரே - இதை விட வேறு சிறப்பு உண்டா?

தொண்டால் பொழுதளந்த தலைவர்

"பகுத்தறிவுப் பார்வையுடன். திராவிட இன, மொழி உணர்வு குன்றாமல், தொண்டறத்தால், பொழுதளந்து மானுட விடுதலைக்காக அயராது பாடுபடும் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வழிகாட்டலில் அவர் நோக்கத்தை மனதில் தேக்கி உறுதியுடன் ஒருங்கிணைந்து பாடுபடுவோம்" என்றாரே தமிழ்நாட்டின் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். இத்தகைய பெரும்பேறு யாருக்கு உண்டு - நம் தலைவரை விடுத்து.

பெரியாரின் கொள்கை முரசு!

"கடல் கடந்த நாடுகளில் உள்ளவர்களும் பாராட்டிப் பெருமை சேர்க்கும் பெரியாரின் கொள்கை முரசு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆயிரம் பிறைகண்டு நூறாண்டுக்கு மேல் நல்ல உடல் நலத்துடன் வாழ்வாங்கு வாழ்ந்து தமிழினம் காக்கும் தூய பணியை தொய்வின்றித் தொடர வேண்டும்" என்றாரே புரட்சிப் புயல் வைகோ.

தமிழ்நாட்டின் தலைவர்கள் எல்லாம் தலைவராக ஏற்றிப் போற்றிக் கொண்டாடும் “எங்கள் தாயுமானவரே” தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களே, வாழ்க வாழ்க  - எங்கள் தலைமுறை வாழ!


No comments:

Post a Comment