இதுதான் திராவிட மாடல் ஆட்சி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 13, 2022

இதுதான் திராவிட மாடல் ஆட்சி!

1972-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பிச்சைக் காரர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்காக மறுவாழ்வுத் திட்டத்தை மறைந்த முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் கலைஞர்  கொண்டு வந்தார். இதன் மூலம் பிச்சைக்காரர்கள் மீட்கப்பட்டு, அவர்கள் தகுதிக்கு ஏற்ப சுயதொழில் வேலைவாய்ப்புகளை அரசு உருவாக்கிக் கொடுத்தது.

இரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வழிபாட்டுத்தலங்கள் என்று மக்கள் கூடுகிற இடங்களில் பிச்சை எடுப்பவர்களை, வாகனங்களில் வந்து பிடித்துப் போவார்கள். அரசு வாகனங்கள் வருவதை கண்டாலே போதும் - தங்களைப் பிடிக்க வருகிறார்கள் என்று பிச்சைக்காரர்கள் ஓடி ஒளிந்தார்கள். 

* அவ்வாறு பிடித்துப் போனவர்களில் நோயாளிகளாக இருந்தால் அரசு மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்படும். 

* மன நோயாளிகளாக இருந்தால் மனநலக் காப்பகத்தில் சேர்க்கப்படுவர். 

* மாற்றுத்திறனாளிகளாக இருந்தால் அவர்களின் தகுதிக்கு ஏற்ப சுயதொழில்கள் செய்ய ஏற்பாடுகள் செய்யப்படும். 

* நிர்ப்பந்தங்களால் பிச்சை எடுக்க வந்தவர்களாய் இருந்தால் உறவினர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களிடம் ஒப்படைக்கப்படுவார்கள். 

* இதற்காகத் தமிழ்நாட்டில் பல இடங்களில் மறுவாழ்வு இல்லங்கள்  ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. இது ஓர்  உன்னத மான சமூகநலத் திட்டம். இதை ஒழுங்காக நடை முறைப் படுத்தி இருந்தால் பிச்சைக்காரர்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்தி இருக்க முடியும்.

பிச்சை எடுத்து உண்ணுவது அவமானம். உழைத்து உண்பதே தன்மானம்' என்பது அந்தத் திட்டத்தின் நோக்கமாக அமைந்தது. கலைஞர் ஆட்சிக்குப் பிறகு வந்த ஆட்சியாளர்களால் கலைஞரால் கொண்டு வரப்பட்ட பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத் திட்டமும் கிடப்பில் போடப் பட்டது. 

இதனால்  பேருந்து, இரயில் நிலையங்கள், போக்கு வரத்து சிக்னல்கள், வழிபாட்டுத்தலங்கள் போன்ற இடங்கள் மீண்டும் பிச்சைக்காரர்களின் புகலிடமாக மாறிப் போயின. குழந்தைகளின் வயிற்றுப் பசியை போக்குவதற்காக ஆதரவற்ற முதியோர் பிச்சை எடுக்கும் நிலைக்கு ஆளாகின்றனர். அதே நேரம், உழைக்காமல் கையை நீட்டினாலே பணம் கிடைப்பதால் பிச்சை எடுப்பதைத் தொழிலாக பலர் செய்யவும் துணிகிறார்கள்.

தற்போது தமிழ்நாட்டில் பிச்சைக்காரர்களை கட்டுப்படுத்தவும், அவர்களுக்கு மறுவாழ்வு கொடுக் கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  வெளி மாநிலங்களைச் சேர்ந்த சிலரும் தமிழ்நாட்டில் பிச்சை எடுப்பதை தொழிலாகச் செய்து வருகிறார்கள். போக்கு வரத்து அதிகமாக இருக்கும் 'சிக்னல்' பகுதிகளில் அவர்களை குழந்தை குட்டிகளுடன் காணமுடிகிறது. 

இந்த நிலையில் 'ஆபரேஷன் மறுவாழ்வு' என்ற அதிரடி நடவடிக்கையை தமிழ்நாடு காவல்துறை கையில் எடுத்துள்ளது. இதன் மூலம் கடந்த 3-ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் பிச்சைக்காரர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். மீட்கப்படும் பிச்சைக் காரர்கள் அரசுக் காப்பகங்கள், மறுவாழ்வு மய்யங்கள், என்பதோடு குடும்பத்தினரிடமும் ஒப்படைக்கப் படுகிறார்கள். பெண்கள், குழந்தைகளை பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தும் நபர்கள்மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு கடும் எச்சரிக்கையையும் விடுத்துள்ளார். இதில் கண்துடைப்பு இல்லாமல் உணர்வுப்  பூர்வமான நடவடிக்கைகள் இருக்கும் என்றால் பிச்சை எடுப்பவர்கள் கட்டுப்படுத்தப்படுவதுடன் மறு வாழ்வும் பெறுவார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

"இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து 

கெடுக உலகுஇயற்றியான்" (1062) 

என்றார் திருவள்ளுவர்.

பசிக்குறியீட்டில் உலகில் இந்தியாவின் இடம் 104.  இதுதான் நாட்டைத் தலைகீழாக மாற்றிக் காட்டுவோம் என்று மார்தட்டும் பிஜேபி ஆட்சியின் சாதனை.

'திராவிட மாடல்' என்றால் கிண்டலடிக்கும் திரி நூலர்கள் 'திராவிட மாடலின்' இந்தப் பிச்சைக்காரர்கள் ஒழிப்பு என்ற மனிதாபிமான திட்டத்தைப் பற்றி என்ன சொல்கிறார்கள்?

பிச்சை எடுப்பது என்பது அவரவர்களின் தலை யெழுத்து - கர்மபலன் - என்று சொல்வார்களோ!

No comments:

Post a Comment