திருப்பத்தூர் முப்பெரும் விழாவில் தலைவர்கள் முழக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 19, 2022

திருப்பத்தூர் முப்பெரும் விழாவில் தலைவர்கள் முழக்கம்

  • 90 வயதிலும் உழைக்கும் இளைஞர் நமது ஆசிரியர்
  • அனைத்துத் தரப்பினரையும் இணைக்கும் மய்யப்புள்ளி ஆசிரியர்
  • 'திராவிட மாடல்' அரசுக்கு உறுதுணையாக இருப்பதும் ஆசிரியர்

ஆசிரியர் நீடு வாழ்ந்து நமக்கும், நாட்டுக்கும் 

வழிகாட்ட வேண்டும் என்றும் வாழ்த்துகிறோம்!

திருப்பத்தூர் முப்பெரும் விழாவில் தலைவர்கள் முழக்கம்

திருப்பத்தூர், டிச. 19- திருப்பத்தூரில் 17.12.2022 அன்று நடைபெற்ற முப்பெரும் விழாவில் தந்தை பெரியாருக்குப் பின் தமிழர் தலைவர் ஆற்றிவரும் பணியைப் பாராட்டி யும், அவர் தொண்டு தொடர நீடு வாழ வேண்டும் என்றும் தலைவர்கள் ஆற்றிய முக்கிய கருத்துகள் வருமாறு:

திராவிடர் இயக்க வரலாற்றில், பல முக்கிய நிகழ்வுகள் நடைபெற்ற திருப்பத்தூரில், மற்றுமொரு வரலாற்று நிகழ்வாக 17.12.2022 அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90ஆவது பிறந்தநாள் விழா, பெரியார் பெருந்தொண்டர் ஏ.டி.கோபால் அவர்களின் நூற்றாண்டு விழா, 60 ஆண்டு விடுதலையின் ஆசிரியர் பணியினைப் பாராட்டி விடுதலை சந்தா வழங்கும் விழா என்று முப்பெரும் நிகழ்வுகள் எழுச்சியுடன் நடைபெற்றன. 

இந்நிகழ்வில் திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் 

பெ. கலைவாணன் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை ஆற்றினார்.

நூறாண்டு கடந்த பெரியார் பெருந்தொண்டர்களுக்கு பாராட்டு

நூறாண்டு கடந்து, பெரியாரியலை ஏற்று, இன்றும் நலமுடன் கொள்கை வீரர்களாக வாழும் பெரியார் சுயமரி யாதை பிரச்சார நிறுவனத் தலைவர் பொத்தனூர் க.சண்முகம், பெங்களூரு வி.மு.வேலு, ஆத்தூர் ஏ.வி.தங்கவேலு ஆகிய மூவரும் ஆசிரியர் அவர்களால் பயனாடை அணிவித்து பாராட்டப்பட்டனர்.

தொடர்ந்து, ஏ.டி.கோபால் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு அடங்கிய கண்காட்சியை நாடாளுமன்ற உறுப் பினரும், திராவிட முன்னேற்றக் கழகத் துணை பொதுச் செயலாளருமான கவிஞர்.கனிமொழி எம்.பி.  திறந்து வைத்தார். பெரியார் பெருந்தொண்டர் ஏ.டி.கோபால் அவர் களின் படத்தை கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் திறந்து வைத்தார். ஏ.டி.கோபால் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் உடனிருந்தனர்.

திருப்பத்தூர் மண் பெருமை அடைகிறது!

நிகழ்வில், முப்பெரும் விழா திருப்பத்தூர் மண்ணில் நடைபெற வேண்டும் என்ற உறுதியுடன், சிறப்பான ஏற்பாடுகளை செய்த திருப்பத்தூர்  மாவட்ட கழகத் தலைவர் கே.சி.எழிலரசன் அவர்கள் தனது தலைமை உரையில்: திராவிடர் இயக்க வரலாற்றில் திருப்பத்தூருக்கு என்று தனி இடம் உண்டு என்றும், திருப்பத்தூரின் பெருமையை உணர்த் தியவர் ஏ.டி.கோபால் என்றார். தொடர்ந்து, ஏ.டி.கோபால், மேனாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களின் பெற்றோரின் திருமணத்தில் ஆற்றிய பங்கினையும் விளக்கி, இயக்கத்திலும், தந்தை பெரியாரின் கொள்கையிலும், எப்படி தடம் மாறா கொள்கை யாளராக வாழ்ந்தார் என்பதை விவரித்தார். பெரியாரின் மரணத்தின் போது வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் பெரியாருடன் இருந்த நால்வரில் ஏ.டி கோபால் அவர்களும் ஒருவர் என்ற வரலாற்றுக் குறிப்பினை எடுத்துரைத்து, திராவிடர் இயக்கத்தின் மூத்த தலைவர்,என்றும் இளைஞராக வாழும் ஆசிரியர் அவர்கள் இந்த சமுதாயத்திற்கும் , இனத்திற்கும்,திராவிட இயக்கத்திற்கும் என்றும் காப்பு அரணாக இருக்கிறார் என்றார். 88 ஆண்டுகள் விடுதலை இதழின் 60 ஆண்டுகள் ஆசிரியர் என்பது கின்னஸ் சாதனை என்றும், இந்த நிகழ்வை திருப்பத்தூரில் கொண்டாடுவதால், திருப்பத்தூர் மண் பெருமை அடைகிறது என்றும் கூறி தனது தலைமை உரையை நிறைவு செய்தார்.

90 வயதில், 80 ஆண்டு பொதுவாழ்வு!

கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தொடக்க உரை நிகழ்த்தினார். அவரது உரையில்: ஏராளமான வரலாறுகள் அடங்கிய திருப்பத்தூர், புதிய வரலாற்றை இன்று படைக்கிறது என்றும், மாநில மாநாடோ என்று கருதும் நிகழ்வாக இவ்விழா அமைந்திருக்கிறது என்று கூறி தனது உரையை தொடங்கினார். 

"சுயமரியாதை சுடரொளிகள்" என்ற புத்தகம் தொகுக் கப்பட்ட போது, பெரியார் பெருந்தொண்டர் ஏ.டி.கோபால் அவர்களிடத்தில், தான் எடுத்த பேட்டியையும் அவருக்கு 12 குழந்தைகள் இருப்பதையும், அந்த 12 குழந்தைகளுக்கும் எப்படி கொள்கை முறைப்படி, தாலி மறுத்து திருமணம் செய்தார் என்பதையும் விளக்கி, ஏ.டி.கோபால் என்றால் இந்த ஊருக்கு சிறப்பு என்றார். 

ஆசிரியரின் பிறந்தநாள் நிகழ்வில், அவருக்குள்ள சிறப்பு என்பது 90 வயதில் 80 ஆண்டுகள் பொது வாழ்க்கை என்ற விகிதாச்சாரம் இவரைத் தவிர யாருக்கும் இல்லை என்றார். ஆசிரியரின் கொள்கைப் பிடிப்புக்கு சான்றாக, 1949ஆம் ஆண்டு திமுக பிரிந்த நிலையில், 16 வயதில் "எனது தலைவர் பெரியார் தான் என்றும், எனது கழகம் திராவிடர் கழகம் தான்" என்றும் அவர் எடுத்த முடிவினை வரலாற்று குறிப்புகளோடு விளக்கினார். 69% இட ஒதுக்கீடு சட்டமாகக் காரணம் ஆசிரியர் என்றும், மூன்று பார்ப்பனர்களை பயன்படுத்தி 76ஆவது சட்டத் திருத்தத்தை ஒன்பதாவது அட்டவணையில் நிலை நிறுத்திய பெருமையும், 27% சதவீத இட ஒதுக்கீடு இந்தியா முழுமையும் அனுபவிக்கக் காரணமாக அமைந்தவர் ஆசிரியர் என்றும் எடுத்துரைத்தார்.

உணவுப் பழக்கமோ, உடற்பயிற்சி வழக்கமோ அல்ல; அவர் ஏற்றுக்கொண்ட பெரியாரின் கொள்கை முழக்கமே!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர். ஷாநவாஸ் தனது வாழ்த்துரையில்: 

ஆசிரியருக்கு 90 வயதாகிவிட்டது என்றால் யாரும் ஏற்க மாட்டார்கள் என்றும், அவரின் வயதில் பாதியைக் கூட எட்டாத எம்மைப் போன்றவர்கள் எல்லாம் ஒரு நிகழ்ச்சிக்கு, ஒரு ஊருக்கு சென்றால், அடுத்த நாள் ஓய்வெடுக்க வேண்டும் என்ற களைப்பு ஏற்படும். ஆனால், கடந்த 2022 - நீட் எதிர்ப்பு பிரச்சாரத்தின் போது நாகப்பட்டினம் வருகை தந்திருந்த ஆசிரியர் அவர்கள் தொடர்ந்து எப்படிப் பயணம் செய்தார் என்றும்,90 வயதில் இந்த அளவிற்கு ஒருவர் உழைக்க முடியும் என்றால், அதற்குக் காரணம் அவரின் உணவுப் பழக்கம், உடற்பயிற்சி வழக்கம் என்று நாம் சொல்லலாம். ஆனால் காரணம் அது அல்ல, அவர் ஏற்றுக் கொண்ட கொள்கை முழக்கமே என்றார். இன்றைக்கு நம்மை சூழ்ந் திருக்கும் மிகப்பெரிய ஆபத்தை எதிர்த்து நிற்க அரசியல் களத்தில் அனைவரும் ஓரணியாகத் திரள வேண்டிய கட்டாயம் ஏன் இருக்கிறது என்பதை விவரித்து, இந்தியாவிலும் இங்கு இருக்கக்கூடிய அதே கட்சிகள் தான் இருக்கிறது. எனினும், அவர்கள் அங்கு ஒருங்கிணைய முடியாமல், ஓரணியாக திரளாமல் நிற்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் தளபதி தலைமையில் அரசியல் அணி திரட்டல் நடந்திருக் கிறது என்றும், இதனை அரசியல் கட்சிகள் நிகழ்த்த முடியாது. அரசியலுக்கு அப்பாற்பட்டு இயங்கும் இயக்கம் தான் ஏற்படுத்த முடியும். அதை ஏற்படுத்தியவர் ஆசிரியர் என்றார். இதனை இந்தியா முழுவதும் எடுத்துச் செல்ல ஆசிரியர் வேண்டும் என்றார். தொடர்ந்து, 69% இட ஒதுக்கீட்டுக்கும், 27% இட ஒதுக்கீட்டுக்கும் ஆசிரியர் எப்படிப்பட்ட பய ணத்தை, உழைப்பை மேற்கொண்டார் என்பதை விவரித்தார். 

தந்தை பெரியார் இருந்த காலகட்டத்தை விட, இன்று நாம் சந்திக்கும் பிரச்சினைகள் அதிகம் என்றும், அது சாதாரணமானதல்ல என்பதை எடுத்துக் கூறி, நாம் போராடிப் பெற்ற இட ஒதுக்கீட்டை, எவ்வித போராட்டமும் இன்றி பார்ப்பனர்கள் 10 சதவீத இட ஒதுக்கீடை பெற்ற செய்திகளை குறிப்பிட்டு, இன்றைக்கு அடிப்படைக்கு ஆபத்து வந்துள்ளது. நீதிமன்றமோ, அரசியல் அமைப்புகளோ நம்மை காப்பாற்ற முடியாது. நாம்தான் போராட வேண்டிய நிலை இருக்கின்றது என்றும், அப்படி நம்மை காப்பாற்றிக் கொள்ள ஆசிரியரின் பயணம் மிக அவசியம் என்று கூறி நிறைவு செய்தார்.

ஆசிரியரின் வார்த்தையைதான்  நித்தம் நினைத்துக் கொள்கிறேன்!

திராவிட முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலா ளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கவிஞர் கனிமொழி எம்.பி. தனது வாழ்த்துரையில்: இந்நிகழ்வில் தந்தையின் வீட்டிற்கு வந்த மகிழ்வோடு நின்று கொண்டிருக்கிறேன் என்று தொடங்கி, கலைஞர் கூறியது போல் எப்போதும் தனது வழிகாட்டியாகவும், ஆலோசகராகவும், தனது வாழ்வில் திரும்பிப் பார்க்கும் போது அந்த இடத்தில் ஆசிரியரைத் தான் எப்படி வரித்துக் கொண்டு இருக்கிறார் என்றும், கலைஞர் அவர்கள் ஏதாவது ஒன்றை விவாதிக்கும் போது பேராசிரியர் அவர்களை எப்படி கேட்பாரோ, அது போல் ஆசிரியரிடம் கேட்பார் என்றும், அவர்களுக்குள் இருந்த உறவு, நட்பு என்பது கொள்கை அடிப்படையிலான நட்பு, அதனால் தான் இறுதிவரை உறுதியாக இருந்தது என்றார். 

எந்த செய்தியை எடுத்துப் பேசினாலும் அதில் எப்படிப்பட்ட ஆழமான கருத்தை, விளக்கத்தை ஆசிரியர் கொடுப்பார் என்பதை விவரித்தார். தனது வாழ்க்கை முழுவதையும் பெரியார் கொள்கையை முன்னெடுக்க தகவமைத்துக்கொண்ட ஆசிரியர் அவர்கள், தனக்கு வாழ்வில் மிக முக்கியமான ஒரு கருத்தை சொல்லிக் கொடுத்திருக்கிறார் என்றும், திராவிட முன்னேற்ற கழகம் தொடர்ந்து தோல்வியை சந்தித்தபோது பள்ளிச் சிறுமியாக இருந்த நான், அதற்காக வருத்தப்பட்டதையும் அப்போது ஆசிரியர் அவர்கள்,  'தந்தை பெரியார் சொன்ன கருத்தை நினைவுப்படுத்தி, "பொது வாழ் விற்கு வந்த பிறகு தனிப்பட்ட மானம் என்ற ஒன்று இல்லை யென்றும், அரசியலில்  வெற்றி, தோல்வி என்பது நம்மை நிர்ணயிக்காது.  பொதுவாழ்வில் நாம் என்ன சிந்தனையோடு உழைக்கிறோம் என்பதே முக்கியம்" என்ற வார்த்தையை இன்றும் அரசியலில் பல சவால்களை சந்திக்கும்போதும் நித்தம் நினைத்துக் கொள்கிறேன் என்றார். 

இன்றைக்கு நடைபெறும் திராவிட மாடல் ஆட்சி அனைவ ரின் வளர்ச்சியையும் உள்ளடக்கிய மாடலாக இருக்கிறது என் றும், அய்அய்டியிலும், மருத்துவக் கல்லூரிகளிலும் பார்ப்பனர் அல்லாத மக்களின் சமூக நீதி எப்படி பறிக்கப்படுகிறது என்பதையும் விளக்கி, ‘ஒரு மாணவன் இருந்தாலும் பள்ளி நடக்க வேண்டும் என்பது திராவிட மாடல்'; பள்ளிகளை மூடி மாணவர்களின் கல்வியை சீரழிப்பது புதிய கல்விக் கொள்கை என்னும் அவர்களின் சித்தாந்தம் என்பதை எடுத்துரைத்தார். 

மனிதநேயத்தை உடைத்து அழிக்க நினைக்கும் சித்தாந்தம் உடையவர்களை எதிர்த்து நிற்க வேண்டும் என்றும், நம்முடைய இன்றைய வெற்றி அரசியல் வெற்றி மட்டுமல்ல என்றார். எதிர் சித்தாந்தத்தில் இருப்பவர்கள் எப்படி ஒவ்வொரு கோவிலாக சென்று தங்கள் கருத்துகளை எடுத்துச் சொல்கிறார்களோ, அப்படி வீடு வீடாக நம்முடைய வரலாற்றை, விடுதலையை எடுத்துச் செல்ல வேண்டும் என்றார். இந்த வயதிலும் அயராது உழைத்து, பெரியார் எப்படி உங்களை இப்படியே விட்டு செல்ல மாட்டேன் என்று உழைத்தாரோ, அப்படி ஆசிரியர்  இந்த மண்ணின் விடுதலை, மனித விடுதலையை தினம் தினம் பேசியும், எழுதியும், பயணித்து வருகிறார். இம் மண் ணின் விடுதலையை, மனித விடுதலையை, பகுத்தறிவை தமிழினம் முழுவதும் பரப்பி விட்டோம் என்ற பெருமையை ஆசிரியர் அவரது காலத்தில் பார்க்க வேண்டும் என்று நிறைவு செய்தார்.

நம்மை வழிநடத்த ஆசிரியர் இருக்கிறார்!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் மய்ய ஆய்வு செயலாளர் பொறியாளர்.செந்திலதிபன் தனது வாழ்த்துரையில்,

இந்த ஆண்டு மட்டும் ஆசிரியர் அவர்கள் பங்கேற்ற பெரியார் பெருந்தொண்டர்களின் நூற்றாண்டு விழாவினை பட்டியலிட்டார். சுயமரியாதை இயக்கம் தொடங்கி, பெரியா ரோடு பயணித்த தொண்டர்களின் நூற்றாண்டு விழாவுக்கு அவர் செல்கிறார் என்றால், எந்தப் பாதையில் நாம் வந்தோம், எவ்வாறு இளைஞர்கள் அதனைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பயணித்துக் கொண்டிருக்கிறார் என்றும், பத்து வயதில் தமிழன் முன்னேற்றம் என்ற தலைப்பிலும் 11 வயதில் போர்க்களம் நோக்கி என்றும் பேசிய ஆசிரியர் அவர்கள், 90 வயதிலும் தமிழன் முன்னேற்றத்திற்காக போர்க்களத்தில் நிற்கிறார் என்றார்.

தொடர்ந்து, வயது வாரியாக ஆசிரியர் பங்கேற்ற நிகழ்வுகளையும், வகித்த பொறுப்புகளையும் பட்டியலிட்டார். அறிவும், உணர்ச்சியும், துணிவும் இருக்கும் யார் வேண்டு மானாலும் தனக்கு பிறகு தலைமைக்கு வரலாம் என்று பெரியார் சொன்னதையும், அந்த அறிவும், உணர்ச்சியும், துணிவும் பெற்ற இளவல் வீரமணி இன்றைக்கு இந்த இடத்தில் இருக்கிறார் என்று கலைஞர் குறிப்பிட்டதை சுட்டிக்காட்டினார்.இந்த இனத்திற்கு தலைமை தாங்கும் மகத்தான தலைவர் ஆசிரியர் என்றும், எப்படி 69% இட ஒதுக்கீட்டுக்கு ஆசிரியர் போராடினாரோ, அதேபோல் 103ஆவது சட்டத் திருத்தத்தை மாற்றியமைக்கும் காலமும் ஆசிரியர் காலத்தில் வரவேண்டும் என்றார். 

1951இல் முதல் அரசியல் சட்டத் திருத்தம் எப்படி பெரியாரால் ஏற்பட்டது என்றும், இன்று 2019-இல் கொண்டு வரப்பட்ட 10சதவீத பொருளாதார அளவிலான இட ஒதுக்கீடு இவர்களால் எப்படி நிறைவேறியது என்றும், அடுத்தடுத்து காஷ்மீரை துண்டாக்கியது, பொது சிவில் சட்டம் என்று அவர்களுடைய ஆபத்தினை எடுத்துரைத்து, நாம் பேசிய சமூக நீதி, மாநில உரிமை, கல்வி உரிமை, மொழி உரிமை, அதற்காக கொடுத்த தியாகம் அனைத்தும் வீண் போய்விடக் கூடாது. நம்மை வழிநடத்த ஆசிரியர் இருக்கிறார். அவர் தலைமையில், என்றும் நாம் அணி திரள வேண்டும் என்றார். 

இங்கு இருப்பது இரண்டு அணிதான் - பிஜேபி ஆதரவு அணி, பிஜேபி எதிர்ப்பு அணி - இதைத் தவிர வேறு எந்த அணிகளும் இல்லை. யார் பக்கம் நிற்கிறோம் என்பதைத் தான் உறுதி செய்ய வேண்டும் என்றும், நூற்றாண்டு கடந்தும் ஆசிரியர் வாழ வேண்டும் என்றும் கூறி  நிறைவு செய்தார்.

இந்த துணிச்சலுக்குக் காரணம்  தமிழர் தலைவர் ஆசிரியருடன் பழகுவதே!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேனாள் தலைவர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் தனது வாழ்த்துரையில்; பல நேரங்களில், பல கோணங்களில் பயணம் செய்தாலும் இன்றைக்கு தேவை மதச்சார்பற்ற அணியின் வெற்றியே என்று தனது உரையை தொடங்கி, இன்றும் பெரியார் தமிழர்களிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால், அது ஆசிரியரின் வாயிலாகத் தான் என்ற வகையில், தான் பார்ப்பதாகவும், தன்னுடைய தாத்தா தந்தை பெரியார் என்ற உருவத்தோடு தான் எப்போதும் நிறுத்தி விட நினைத்ததில்லை என்றும், அனைவரின் இதயத்திலும் மிகப்பெரிய பிம்பமாக பெரியார் இருக்கிறார் என்றார். 

அமைச்சராக பொறுப்பேற்று இருக்கும் உதயநிதி அவர்களை வாரிசு அரசியல் என்கிறார்கள். அது வாரிசு அரசியல் அல்ல; கொள்கை வாரிசு என்றும், அவர் கொடுத்த பேட்டியில் கடவுள் இல்லை என்று சொன்னதையும் விளக்கி, மனதில் பட்டதை கூட சொல்ல முடியாமல், இன்றைக்கு மதவெறி வல்லூறுகள் எப்படி நம்மை சுற்றி வருகின்றன என்பதை விளக்கினார்.

தமிழ்நாட்டை, தமிழ்நாட்டு மக்களை எப்படியாவது அடிமைப்படுத்த வேண்டும் என்று துடிக்கும் நாசகார சக்தி தான் பிஜேபி என்றும், அதனிடமிருந்து மக்களைக் காப்பாற்ற இன்றைய தமிழ்நாடு அரசு வேண்டும் என்றார். இந்தியாவி லேயே, இந்த ஆட்சி தான் நம்பர்.1 என்கிறது ஆய்வுகள்.

பூணூலைப் போற்றும் பத்திரிகைகள் கூட தமிழ்நாடு தான் நம்பர் ஒன் என்பதை தெரிவிப்பதையும் விளக்கி, இந்த நிலையில் ஒரு வீரமணி அல்ல, ஆயிரம் வீரமணிகள் நமக்கு தேவை என்றும், அந்த ஆயிரம் வீரமணிகள் செய்ய வேண்டியதை அவர் ஒருவராக இருந்து சமாளிக்கிறார் என்றால், அவர் பெரியாராக இருக்கிறார் என்றார்.

நான் காங்கிரஸ்காரன், நான் இந்தியன் என்றாலும் அதைவிட நான் தமிழன், நான் மதச்சார்பற்ற தமிழ்நாடு தேவை என்று பேசுபவன் என்பதையே விரும்புகிறேன். சமூகநீதியைப் பற்றி பேசாதே உனக்கு அமைச்சர் பதவி தருகிறேன் என்று சொன்னால், உனது அமைச்சர் பதவியும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம் என்று சமூகநீதியைப் பற்றி பேசுவேன் என்றார். 

இந்த துணிச்சலுக்கு காரணம், தமிழர் தலைவர் ஆசிரிய ரோடு கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக நெருங்கி பழகியது என்றும்,  பார்க்கும் போதெல்லாம் ஏதாவது புத்தகத்தை கொடுத்துவிட்டு, மறுமுறை பார்க்கும்போது படித்து விட்டோமா என்று கேட்பார். அப்படி உடல், சிந்தனை, தியாகம் என்று அவரோடு எப்போதும் போட்டி போட்டு விட முடியாது. அவரை பெரிதும் ரசிக்கிறேன் என்றும், பெரியாரோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு மிகக் குறைவாகவே அமைந்தது என்றும், தந்தை பெரியாரோடு தனது வாழ்வில் நடந்த நிகழ்வுகளை எடுத்துரைத்து, இன்று ஆசிரியரோடு பழகும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன் என்றார். சமூகத்திற்கு செய்ய வேண்டிய கடமைகள் செய்தாக வேண்டும் என்ற எண்ணம் அதிகம் இருக்கிறது, உடல்நிலை சரியில்லாத போதும் இன்னும் இது போன்ற நிகழ்வுகளில் நிச்சயம் கலந்து கொள்வேன் என்று கூறி நிறைவு செய்தார்.

நீங்கள் ஓய்வெடுங்கள் என்று  ஒருபோதும் என்னால் சொல்ல முடியாது!

திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் பொதுச் செயலா ளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தனது வாழ்த்துரையில்; அனைவரும் தங்கள் மேம்பாட்டுக்கும், வழிகாட்டுதலுக்கும், பெருமைக்கும் ஆசிரியர் காரணம் என்றார்கள். எனக்கும் அப்படித்தான். ஆனால் மற்றவர்களை விட எனக்கு ஒன்று மட்டும் வித்தியாசம். நான் திட்டு வாங்குவதற்கும் ஆசிரியர் தான் காரணம் என்றும், ஆசிரியரை வசை பாடுபவர்கள் என்னையும் சேர்த்து வசை பாடுவார்கள். ஆனால், அதைவிட பெருமை எனக்கு எதுவும் இல்லை என்று உரையைத் தொடங்கினார்.

தனது தொடர் பயணங்களின் போது, அவரை ஓய்வெடுக் கச் சொல்லி அவர் குடும்ப உறுப்பினர்கள் கூறினால், ஆசிரியரின் வயது 90. அவர் பயணம் செய்யும்போது, நான் எப்படி ஓய்வெடுப்பது? ஆசிரியரை ஓய்வெடுக்கச் சொல் லுங்கள்; நான் ஓய்வெடுத்துக் கொள்கிறேன், நாம் அனைவரும் ஆசிரியர் எப்போது ஓய்வெடுப்பார் என்று சிந்தித்தால், நாம் அனைவரும் களத்திற்கு வரும்போது, ஆசிரியருக்கு சற்று ஓய்வு கிடைக்கும். ஆசிரியரின் வயதை தான் எப்படி கணக் கிடுகிறார் என்றால், எதிரிகள் அவரை எப்படி விமர்சிக் கிறார்கள், அவரைக் கண்டு பயப்படுகிறார்கள் என்பதை வைத்துத்தான்.

அவர் வயது 90 என்று கணக்கிடுவது தவறு, 90 வயது ஆசிரியரையும் பார்த்து பயப்படுகிறார்கள்; 45 வயது உதயநிதியையும் பார்த்து பயப்படுகிறார்கள்; அதைவிட பெரியார் மறைந்து, சிலையாக இருக்கிறார், சிலையை பார்த்தும் பயப்படுகிறார்கள்.

போர்க்களத்தில் மாவீரன் நெப்போலியன் சொன்ன குறிப்பை எடுத்துரைத்து, "போரில் ஆயிரம் சிங்கம் வந்தாலும் நான் பயப்பட மாட்டேன்; ஆயிரம் சிங்கத்திற்கு தலைமையாக ஒரு நரி வந்தாலும் பயப்பட மாட்டேன்; ஆனால் ஆயிரம் நரிகளுக்கு தலைமையாக ஒரு சிங்கம் வந்தால் நான் அச்சப் படுவேன்" என்று சொன்னது போல், ஏன் எதிரிகள் ஆசிரியரை பார்த்து அச்சப்படுகிறார்கள் என்பதை இதன் மூலம் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அந்த காலகட்டத்தில் இருந்த எதிரிகள் வேறு, இப்போது இருக்கும் எதிரிகள் மிக மோசமானவர்கள், அவர்களுடைய பலத்தை வைத்து இதனை தான் குறிப்பிடவில்லை, 

அவர்களிடம் இருக்கும் அரசியல், பண பலத்தை வைத்து நாம் சிந்திக்க வேண்டும்.பாபர் மசூதி இடிப்பு, காஷ்மீர் சிதைப்பு,  10 சதவீத இட ஒதுக்கீடு என்று அவர்களின் அனைத்து திட்டத்தை யும் சாதித்து விட்டார்கள். அடுத்து இரண்டு திட்டங்களாக அவர்கள் கையில் இருப்பது; ஒன்று பொது சிவில் சட்டம், மற்றொன்று சமஸ்கிருதத்தை ராஷ்ட்ரா பாஷையாக கொண்டு வருவது, இந்த இரண்டையும் தனிநபர் சட்ட மசோதாவாக தாக்கல் செய்ய இருக்கிறார்கள் என்பதையும் கூறி, அதில் இருக்கும் ஆபத்தையும் விளக்கினார். 

கடந்த மூன்று ஆண்டுகளில் மொழிக்கு ஒதுக்கப்பட்ட ஒன்றிய அரசின் நிதிகளை புள்ளி விவரத்தோடு விளக்கி, எப்படி தமிழ் மொழி விரோத போக்கை கையாள்கிறார்கள் என்பதையும் விளக்கினார். இவர்களது நோக்கம் முதலில் ஆங்கிலத்தை ஒழிப்பது, அதன் மூலமாக தாய் மொழிகளை ஒழிப்பது, இரண்டாவது சிறுபான்மையினரை முதலில் ஒழிப்பது, இறுதியாக இந்துக்களையும் ஒழிப்பது என்பதை யெல்லாம் விவரித்து, இன்று நாம் ஆங்கிலத்தைக் காப்பாற்ற வேண்டும்; சிறுபான்மையினரையும் காப்பாற்ற வேண்டும் என்றும் கூறி இரண்டையும் காப்பாற்ற ஆசிரியரின் தலைமை எங்களுக்கு வேண்டும் என்றும், மன்னித்துவிடுங்கள்! நீங்கள் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் என்று ஒருபோதும் என்னால் சொல்ல முடியாது என்று நிறைவு செய்தார்.

தமிழ்நாட்டிற்கும், முதலமைச்சருக்கும் உந்து சக்தி ஆசிரியர்!

பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மானமிகு எ.வ.வேலு தனது வாழ்த்துரையில்,

தாய் கழகத்தின் முப்பெரும் விழா என்று தொடங்கி, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை பக்கத்தில் உட்கார்ந்து பார்த்து தான் எப்படிப் பரவசம் அடைந்தார் என்பதையும், 90 வயதில் அறுபது வயது போல் இருக்கிறார். இன்னும் 30 ஆண்டுகள் இந்த சமூகத்திற்கு வேலை செய்வார் என்றார்.

இந்த இளைஞருக்கு 90ஆவது பிறந்த நாள் எடுக்கிறோம், இந்த கூட்டம் பகுத்தறிவு பாசறை மாநாடு. இந்த பகுத்தறிவு பாசறை மாநாட்டில், பகுத்தறிவு பற்றி பேசினால் கொல்லன் தெருவில் ஊசி விற்பதாக ஆகிவிடும், எல்லா நேரத்திலும் தான் பகுத்தறிவு பற்றி தான் அனைத்து மேடைகளிலும் பேசுகிறேன் என்பதைக் கூறி, பெரியார் விட்டுச் சென்ற பணியை ஆசிரியர் எப்படி மேற்கொண்டு வருகிறார் என்றும், வயது வாரியாக ஆசிரியரின் பணிகளை விவரித்து, ஆசிரியரின் பன்முக ஆற்றலை, பன்முக தன்மையை பட்டியலிட்டார். 

ஆசிரியரின் பத்தாவது வயதில் அறிஞர் அண்ணா ஆசிரி யரை பாராட்டிய விதத்தை எடுத்துரைத்து, சிக்கனத்திற்கு பெயர் போன தந்தை பெரியாரே ஆசிரியருக்கு தங்கம் வழங்கினார் என்றால், ஆசிரியரின் உழைப்பு எப்படிப்பட்டது என்பதை விவரித்தார். 

ஈரோடு, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கும் எப்படிப்பட்ட உறவு இருக்கிறது என்பதை எடுத்துரைத்து, எங்கள் வீட்டு மாப்பிள்ளை ஆசிரியர் என்றும், ஆசிரியர் எப்படி அந்த காலகட்டத்திலேயே ஜாதி மறுப்பு, பகுத்தறிவு திருமணத்தை, தந்தை பெரியார் தலைமையில் செய்து கொண்டார் என்பதை விளக்கி, திருமணத்திற்கு வந்து செல்பவர்களுக்கு புத்தகம் கொடுத்து அனுப்ப வேண்டும் என்ற முறையை தமிழ்நாட்டில் முதன் முதலில் ஏற்படுத்தியவர் ஆசிரியர். அன்று தொடங்கிய புத்தகம், இன்றும் ஆசிரியர் வாழ்வில் புத்தகம்! புத்தகம்! புத்தகம்! என்று தொடர்கிறது. 

தனது வாழ்வில் இரண்டு பேரை பார்த்தால் தனக்கு பதைப்பதைக்கும். ஒருவர் கலைஞர்; மற்றொருவர் ஆசிரியர். காரணம், கலைஞர் சந்தித்த உடனே கேட்கும் கேள்வி, முரசொலி படித்தாயா? அதுபோல் ஆசிரியர் சந்தித்தவுடன் கேட்கும் கேள்வி அன்று கொடுத்த புத்தகத்தை படித்தீர்களா? என்று கூறி பல வரலாற்று நிகழ்வுகளோடு அதனை விளக்கி, பெரியாரின் அன்பை அதிகமாக ஆட்கொண்ட ஒருவர்  இளவல் வீரமணி என்று கலைஞர் குறிப்பிட்டதை நினைவு படுத்தி, பெரியாரை யாராலும் ஆட்கொள்ள முடியவில்லை; காரணம், அவர் நெருப்பு. யாராலும் நெருங்க முடியாத தந்தை பெரியாரின் அன்பை ஒருவர் ஆட்கொண்டு இருக்கிறார் என்றால் ஆசிரியர் எப்படிப்பட்டவர் என்பதை விளக்கினார். 

உண்மையை எல்லா இடத்திலும் ஓங்கி சொல்பவராக ஆசிரியர் இருக்கிறார் என்றும், இந்த திராவிட மாடல் ஆட்சியை எண்ணி யார் மகிழ்கிறார்களோ இல்லையோ, திராவிடர் கழகம் பெரிதும் மகிழும் என்றார். 

பெரியார் ,அண்ணா, கலைஞர், சமூக நீதி, சகோதரத்துவம், சமூக நல்லிணக்கணம் ஆகியவற்றை உள்ளடக்கிய திராவிட மாடல் ஆட்சியை தமிழர் தலைவர் ஆசிரியரும்,திராவிடர் கழகமும் எப்படி போற்றி மகிழ்கிறது என்பதை விளக்கினார். தொடர்ந்து 1919 ஆம் ஆண்டில் எப்படி பார்ப்பனர்களின் ஆதிக்கம் இருந்தது என்றும் இன்று அந்த நிலை மாறி அனைத்து துறைகளிலும் பார்ப்பனர் அல்லாத மக்கள் வந்திருக்கிறார்கள் என்றால், அதற்கு காரணம் இந்த பகுத்தறிவு இயக்கத்தின் உழைப்பு என்பதையும் விளக்கினார்.

கடந்த ஆட்சியில் திராவிடம் என்ற சொல்லை  அவர்கள் பயன்படுத்தியிருப்பார்களா? டில்லியின் அடிமையாக இருந்தார்கள். ஆனால், இன்றைக்கு இந்த திராவிட மாடல் இருக்கிறது. இந்த ஆட்சிக்கு அரணாக ஆசிரியர் இருக்கிறார். நல்ல திட்டங்களை இந்த ஆட்சி கொண்டு வரும்போது, முதலில் பாராட்டும் அழைப்பு ஆசிரியரிடமிருந்து தான் வரும் என்றும், தமிழ்நாட்டின் முதலமைச்சருக்கும் உந்து சக்தி ஆசிரியர் என்றார். தொடர்ந்து, "இந்தியா டுடே" பத்திரிகையில் இந்தியாவில் தமிழ்நாடு தான் முதல் மாநிலம் என்ற செய்தியை விளக்கி ஆசிரியரின் வழியில் என்றும் இருப்போம் என்று நிறைவு செய்தார்.

நிகழ்வின் இறுதியில், திருப்பத்தூர் மாவட்ட கழக அமைப் பாளர் வி.ஜி.இளங்கோ வருகை தந்த அனை வருக்கும் நன்றி தெரிவித்தார்.

- தொகுப்பு: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி


No comments:

Post a Comment