''மியூசிக் அகாடமி'' தமிழ் இசைக்கு ஆதரவு தரவேண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 16, 2022

''மியூசிக் அகாடமி'' தமிழ் இசைக்கு ஆதரவு தரவேண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை,டிச.16- தமிழ் இலக்கியத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான தமிழ் பாடல்கள் மியூசிக் அகாடமி போன்ற இசை மன்றங்களில் ஒலிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். 

சென்னை மியூசிக் அகாடமியின் 96 ஆவது ஆண்டு மாநாடு மற்றும் இசை விழா தொடக்க நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (15.12.2022) பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில், மியூசிக் அகாடமியின் தலைவர் முரளி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மு.பெ.சாமிநாதன், அரசு செயலாளர் சந்தரமோகன் மற்றும் இசைக்கலைஞர்கள் கலந்துகொண்டனர். 

இந்நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: 

மியூசிக் அகாடமி எனப்படும் இசைக் கலை மன்றத்தின் 96 ஆவது ஆண்டு விழாவில் கலந்து கொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இசை ஆர்வலன், இசை ரசிகன் என்ற அடிப்படையில்தான் நானும் வருகை தந்திருக்கிறேன்.

என்னுடைய தாத்தா முத்துவேலர் ஒரு இசைவாணர். பாடல்கள் எழுதுவதில் மட்டுமல்ல, பாடல்கள் பாடுவதிலும் வல்லவராக இருந்திருக்கிறார். இசை ஞானம் அதிகம் கொண்டவராக முத்தமிழறிஞர் கலைஞர் இருந்தார். ஆண்டு தோறும் மார்கழி மாதம், அதாவது டிசம்பர் மாதத்தில் இந்தியாவில் இருந்து மட்டுமல்ல - உலகம் முழுவதும் உள்ள இசைப் பறவைகளை சென்னையை நோக்கி வரவழைக்கக் கூடிய ஒரு வேடந்தாங்கலாக மியூசிக் அகாடமி இன்று செயல்பட்டு வருகிறது. எழுத்து ஒலிகளின் பிறப்பையே காற்றில் இருந்து எழும் இசையாகக் கருதும் அளவுக்கு தமிழர் இசை அறிவு இருந்தது. அந்த வகையில் தமிழர்களின் இசை மரபு என்பது பழைமையானது, செழுமையானது. சிலப்பதி காரம் என்ற தமிழ்க் காப்பியமே இசைக்காப்பியம்தான். சங்க காலம், காப்பிய காலம், பக்திக் காலம் முதல் இசையானது நமது தமிழ் மண்ணில் புதுப் புது பொலிவோடு சிறந்து விளங்கியது.

தேவாரமும், திருவாச கமும், நாலாயிர திவ்வியப் பிரபந்தமும், பெரிய புராண மும், பதினெண் கீழ்க்கணக்கு நூல்களும் படித்தால் தமி ழுக்கும் இசைக்கும் உள்ள தொடர்பை முழுமையாக அறியலாம். 

இசைக் கலைஞர்களுக்கு கோரிக்கை

பொதுவாக முதலமைச்சரிடம்தான் கோரிக்கை வைப் பார்கள். ஆனால் நான் இங்கே உங்களுக்கு, இசைக் கலைஞர் களுக்கு கோரிக்கை வைப்பது காலத்தின் தேவை என்று நான் கருதுகிறேன். மியூசிக் அகாடமி போன்ற இசைக்கலை அமைப்புகளும், மன்றங்களும் தமிழிசைக்கு, தமிழ்ப்பாடல் களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். தமிழ் இலக்கியத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் பாடல்கள் இருக்கின்றன. அந்தப் பாடல்களும் இதுபோன்ற இசை மன்றங்களில் தவறாது ஒலிக்க வேண்டும். பக்தி இசையாக இருந்தாலும், திரையிசையாக இருந்தாலும் மெல்லிசையாக இருந்தாலும், பாப் இசையாக இருந்தாலும், ராக் இசையாக இருந்தாலும் - தமிழிசையாக இருக்கவேண்டும் என்பதே எனது வேண்டு கோள் என்று இங்கே கேட்டுக்கொள்கிறேன்.

- இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

No comments:

Post a Comment