திருப்பத்தூர் பதித்த முத்திரை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 19, 2022

திருப்பத்தூர் பதித்த முத்திரை!

கடந்த 17.12.2022 சனிக்கிழமை மாலை வடாற்காடு திருப்பத்தூரில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழா என்பது முத்திரை பொறித்த மகத்தான நிகழ்ச்சி ஆகும். சுயமரியாதை  சுடர் ஒளி திருப்பத்தூர் மானமிகு ஏ.டி.கோபால் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவும், தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் 90ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவும், விடுதலை சந்தா வழங்கும் விழாவும் மிகவும் நேர்த்தியுடன் நடைபெற்றன. சாதாரணமாக ஒரு மாலை நேர பொதுக்கூட்டம் என்று கருதிய நிலையில் கழகத் தோழர்கள் ஒரு பெரும் மாநாடாக அதை நடத்திய பாங்கு பாராட்டத் தகுந்தது.

கலை குலுங்கும் எழில் வண்ண ஓவியமாக மிகப்பெரிய பந்தல் போடப்பட்டிருந்தது. சிறப்பான மேடையும் உரு வாக்கப்பட்டு - நடைபெறுவது பொதுக்கூட்டம் அல்ல. அது பெரும் மாநாடு என்று கருதத்தக்க வண்ணம் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு முன்  ஆசிரியர் எடைக்கு இரு மடங்கு விடுதலை சந்தா தொகை அளிக்கப்பட்டது. இப்பொழுது இரண்டாவது முறையாக விடுதலை சந்தாக்கள் வழங்கப்பட்டன. பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று அரும்பெரும் உரையாற்றினர். மூன்று நூல்கள் வெளியிடப் பட்டன. சிங்கப்பூர் மானமிகு இலியாஸ் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளியிடப்பட்ட "சிங்கப்பூரில் தமிழர் தலைவர் தொகுதி 2", "தந்தை பெரியார் பிறந்த நாள் விடுதலை மலர்", "நினைவுகளும் நிகழ்வுகளும் ஆசிரியர் கி.வீரமணி", ஆகிய மூன்று நூல்களையும் தமிழ்நாடு பொதுப் பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் மாண்புமிகு மானமிகு எ.வ. வேலு அவர்கள் வெளியிட்டார். ஏராளமான தோழர்கள் மேடைக்கு வந்து ரூபாய் 700 கொடுத்து நூல்களைப் பெற்றுக் கொண்டனர். இவ்வாறு மேடைகளில் நூல்கள் வெளியிடும் நிகழ்ச்சியும் - நூல்களை மேடையில் வந்து மக்கள் பெற்றுக் கொள்வதும் திராவிடர் கழகத்திற்கு உரிய தனி முத்திரையாகும். 

மறைந்த ஏ.டி. கோபால்  அவர்களின் நினைவைப் போற்றும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்ட ஒளிப்படக் கண்காட்சி மிகவும் அருமை! அருமை!! அதனை திமுக, துணைப் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி அவர்கள் திறந்து வைத்தார். தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான கழகத் தோழர்கள் குடும்பம் குடும்பமாக வருகை தந்தனர். பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்களும் ஏராளம் குவிந்தனர். பந்தலே வழிந்து வெளியிலும் மக்கள் நின்று கொண்டு நிகழ்ச்சியை கண்டு களித்தனர். நிகழ்ச்சியில் உரையாற்றிய அத்தனை பேரும் இந்த காலகட்டத்தில் தந்தை பெரியாரின் கொள்கைகள் எந்த அளவிற்கு தேவைப்படுகின்றன என்பதை வலுவாக எடுத்துக் கூறினர். 

ஒரே மதம், ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்று பேசுகின்ற ஒரு மதவாத சக்தி ஒன்றிய அரசாக இருக்கும் நிலையில் அதனை வீழ்த்த வேண்டியது - சமூக நீதியிலும், மதச்சார்பின்மையிலும் நம்பிக்கை உள்ள சக்திகள் ஒன்று திரள வேண்டியது - காலத்தின் கட்டாயமாகும் என்று எல்லோரும் எடுத்துக் கூறினர். 

இன்றைய பாரதிய ஜனதா கட்சி ஜன சங்கமாக இருந்த பொழுது அதனுடைய 1952 தேர்தல் அறிக்கையில் மாநிலங்களே கூடாது என்று கூறப்பட்டுள்ளது. அந்த ஜன சங்கம்தான் இப்பொழுது பாரதிய ஜனதா கட்சியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே அதன் கொள்கையின் அடிப்படையில் மாநிலங்களே கூடாது - ஒரே நாடாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவர்களுடைய திட்டத்தை - ஆட்சி அதிகாரம் கையில் இருக்கின்ற காரணத்தினால் நிறைவேற்றத் துடிக்கிறார்கள். மாநிலங்கள் அழிக்கப்பட்டால் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநில மக்களின் மொழி, பண்பாடு, உரிமை முற்றிலும் அழிக்கப்பட்டுவிடும். இந்தியா முழுமையும் ஹிந்துத்துவா ராஜ்ஜியமாக மாற்றப்பட்டுவிடும். மதம், ஜாதி இவை நிலை நிறுத்தப்பட்டால் தான் பார்ப்பன ஆதிக்க மேலாண்மை உறுதிப்படுத்தப்படும். சமூக நீதி முற்றிலும் அழிக்கப்பட்டு விடும். மீண்டும் கல்வி உத்தியோகங்களில் பார்ப்பன ஆதிக்கம் தலை விரித்து ஆடும். வர்ணாசிரமம்  நிலை நிறுத்தப்படும்.

 இதுதான் ஆர்.எஸ்.எசைத் தாயகமாகக் கொண்ட பாரதிய ஜனதாவின் விழுமிய நோக்கமாகும். இதனை நாம் அனுமதிக்கலாமா? அனுமதித்தால் அதன் பாரதூர விளைவுகள் எவ்வளவு ஆபத்தாக முடியும் என்பதை மாநாட்டில் பேசியவர்கள் அழுத்தம் திருத்தமாக எடுத்துக் கூறினர்.  

இந்த நிலையில் தந்தை பெரியார் அவர்களால் உருவாக்கப்பட்ட திராவிடர் கழகம்,  அதனுடைய கொள்கைகள் நாடு தழுவிய அளவில் சென்றாக வேண்டும். இளைஞர்கள் வீறு கொண்டு எழ வேண்டும். இந்தப் பாசறையின் பக்கம் வந்து சேர வேண்டும். இளைஞர்கள் மத்தியில் உணர்ச்சியை ஏற்படுத்திட வேண்டும். மீண்டும் மனுதர்மம் கோலோச்சுவதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளக் கூடாது  என்ற உறுதியை இந்த மாநாடு  பிரகடனப்படுத்தியது.

மாநாட்டின் ஏற்புரையில் திராவிட கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு வீரமணி அவர்கள் 2023 பிப்ரவரி முதல் தேதி முதல் தமிழ்நாடு எங்கும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டு  - இன்றைக்கு சமூக நீதிக்கு ஏற்பட்டிருக்கின்ற ஆபத்திலிருந்து நாட்டை மீட்பதற்கான பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெறும் என்று பிரகடனப்படுத்தினார். அந்தப் பிரகடனத்தை ஏற்கும் வகையில் மக்கள் கடல்   கர ஒலி எழுப்பியது. 

சமூக நீதியை நேரடியாக ஒழித்தால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை மக்களான பெரும்பாலான மக்கள்  உண்மையை உணர்ந்து கொள்வார்கள் என்ற நிலையில் -   தந்திரமாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கும் ஒரு வேலையில் இன்றைய பி.ஜே.பி. ஒன்றிய அரசு ஈடுபட்டிருக்கிறது. பொருளாதாரத்தில் நலிவுற்ற உயர் ஜாதி மக்களுக்கு பத்து சதவீத இட ஒதுக்கீடு என்பது அந்த வகையான தந்திரமே ஆகும். இட ஒதுக்கீடு என்பது ஏழ்மையை ஒழிக்கும் திட்டமல்ல - மாறாக ஏற்கெனவே ஜாதியின் பெயரால் கல்வி வேலை வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்களுக்கு வாய்ப்புக் கொடுப்பதே ஆகும். சமூக நீதி என்பதே இட ஒதுக்கீட்டின் நோக்கமாகும். பொருளாதார அடிப்படை என்பது வேறு  - சமூக ரீதியான  ஒதுக்கீடு என்பது வேறு.

பார்ப்பனர்கள் ஏற்கெனவே கல்வி வேலைவாய்ப்பில் அவர்களுடைய சதவீதத்திற்கு அதிகமாக பல மடங்கு அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் அவர்களுக்கு மேலும் 10 சதவீதம் இட ஒதுக்கீடு என்பது ஆபத்தான ஒன்றாகும். பொருளாதாரத்தில் நலிந்தவர்கள் பார்ப்பனர்கள் மட்டும் தானா? தாழ்த்தப்பட்டவர்களில் பிற்படுத்தப்பட்டவர்களில் பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள் கிடையாதா? 1951இல் முதல் சட்ட திருத்தம் கொண்டு வந்த பொழுது சமூக ரீதியாகவும் -  கல்வி ரீதியாகவும் பின் தள்ளப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு என்று தான் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அப்பொழுது பொருளாதார அடிப்படை யையும் சேர்க்க வேண்டும் என்ற திருத்தம் கொண்டுவரப்பட்ட பொழுது அதற்கு ஆதரவாக அய்ந்து வாக்குகளும் எதிராக 243 வாக்குகளும் நாடாளுமன்றத்தில் கிடைத்தன அதற்குப் பின்பும்கூட  பல காலகட்டங்களில் பொருளாதார அடிப்படை என்பதை  நுழைக்க முயற்சி செய்தனர். 

பி.வி. நரசிம்மராவ்  பிரதமராக இருந்த பொழுது பொருளாதார அடிப்படையில் 10 விழுக்காடு என்று இட ஒதுக்கீடு சட்டத்தைக் கொண்டு வந்த பொழுது உச்ச நீதிமன்றம் செல்லாது என்று திட்டவட்டமாக தீர்ப்பு கூறிவிட்டது. இன்று இருக்கின்ற பிரதமர் மோடி அவர்கள் குஜராத் முதலமைச்சராக இருந்த பொழுது பொருளாதார அடிப்படையில் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு ஆணை பிறப்பித்த பொழுது உயர் நீதிமன்றம் செல்லாது என்று தீர்ப்பு கூறிவிட்டது. 

அதேபோல மத்தியப் பிரதேசத்திலும் பிஜேபி ஆட்சியில் இருந்த பொழுது 15 விழுக்காடு பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதனையும் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இப்படி பல்வேறு காலகட்டங்களில் பொருளாதார அடிப்படையை நீதிமன்றங்கள் நிராகரித்த நிலையில் இப்பொழுது சட்ட விரோதமாக பொருளாதாரத்தில் நலிவுற்ற  உயர்ஜாதிக்காரர்களுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு சட்டம் என்பது - திட்டவட்டமான அரசமைப்புச் சட்ட மீறலாகும். இதைப் பற்றி எல்லாம் திருப்பத்தூர் விழாவில் பேசிய தலைவர்கள் விரிவாக  எடுத்துக் கூறினர். 

எப்பொழுதெல்லாம் சமூக நீதிக்கு ஆபத்து வருகிறதோ அப்பொழுதெல்லாம் திராவிடர் கழகம்   களத்தில் நின்று போராடி வெற்றி   பெற்ற   வரலாறு உண்டு. இப்பொழுது ஏற்பட்டிருக்கின்ற சமூகநீதிக்கு எதிரான போக்கையும், அநீதியான சட்டங்களையும் மக்கள் மத்தியில் கொண்டு சென்று தெளிவுபடுத்தி போராடி   திராவிடர் கழகம்  களத்தில் நின்று வெற்றி பெறும் என்பது உறுதி!  

குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் திருப்பத்தூர்  மாநாடு திருப்பம் தரும் மாநாடாகும்!

No comments:

Post a Comment