இனிமேல் நாங்கள் அனாதைகள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 24, 2022

இனிமேல் நாங்கள் அனாதைகள்!

ஆயிரங் கால இருளினை அகற்றிய

அறிவுப் பரிதியே அணைந்தா போனாய்?

நூறுநூ றாண்டு நோற்ற தவத்தின்

பேறே! எங்களைப் பிரிந்தா போனாய்?


அன்பு விளக்கே! அணைந்தா போனாய்?

அய்யா! எங்களைத் துறந்தா போனாய்?

பொட்டுப் பூச்சியாய்ப் புன்மைத் தேரையாய்ப்

புழுதி மண்ணிலே புரண்டிருந் தோமே!


ஈரோடு அதனில் எழுந்தஎம் கதிரே

இங்குநீ பிறந்ததால் இனமே நிமிர்ந்தது!

நீயா இறந்தாய்? இல்லவே இல்லை!

நாங்களும் எங்களின் நாடும் இறந்தன!


கொடிமரம் அற்ற கோட்டைகள் ஆனோம்!

குளிர்மலர் சூடாக் கோதையர் ஆனோம்!

இசையை இழந்த வீணைகள் ஆனோம்!

இனிமேல் நாங்கள் அனாதைகள் ஆனோம்!


பிறக்கும் எங்களின் பிள்ளைக்கு எல்லாம்

‘பெரியார்’ என்றே பெயரினை வைப்போம்!

ஏற்றிய தீபம் கைகளில் ஏந்தி

ஏகி நடப்போம் நின்வழி மீதில்!

- வில்லவன் கோதை 

(‘மாலை மலர்’ - 25.12.1973 - பக்கம் 3)

No comments:

Post a Comment