ஒரு செங்கல் தான்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 16, 2022

ஒரு செங்கல் தான்!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும் என்று நாடாளுமன்றத்தில் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார். நாடாளுமன்ற மக்களவையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;- "மதுரை எய்ம்ஸ் கட்டடம் கட்டும் பணி விரைவில் தொடங்கும். கட்டட வடிவமைப்பில் செய்யப்பட்ட மாறுதல் காரணமாக சற்று தாமதம் ஏற்பட்டு விட்டது. அதனால், திட்ட செலவு ரூ.1,200 கோடியில் இருந்து ரூ.1,900 கோடியாக உயர்ந்துவிட்டது. மதுரை எய்ம்ஸ் மூலமாக தமிழ்நாட்டு மக்களுக்குச் சேவை செய்ய ஒன்றிய அரசு உறுதி பூண்டுள்ளது. எனவே, கவலை வேண்டாம். கட்டுமானப் பணியை திட்டமிட்டபடி முடிப்போம். மதுரையில், நல்ல, தரமான எய்ம்ஸ் அமையும்" என்று  கூறினார்.

தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என கடந்த 2014ஆம் ஆண்டு ஒன்றிய அரசு அறிவித்தது. அதைத் தொடர்ந்து, மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் அமைப்பதற்கான இடம் கடந்த 2018இல் தேர்வு செய்யப்பட்டது. பின்னர், 2019ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஆனால் அதன் பிறகு மருத்துவமனை கட்டுவதற்கான எந்த பணியையும் ஒன்றிய அரசு மேற்கொள்ளவில்லை. மதுரை எய்ம்ஸ் அறிவிப்புக்குப் பிறகு வேறு சில வடமாநிலங்களில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகள் தற்போது கட்டப்பட்டு திறக்கப்பட்டும் விட்டன. 

கடந்த செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டிற்கு வந்த பா.ஜ.க. அகில இந்திய தலைவர் ஜே.பி. நட்டா பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும் போது, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிக்கான பூர்வாங்க நடவடிக்கைகள் 95 சதவீதம் முடிந்துவிட்டன - விரைவில் திறக்கப்படும் என்றார். 

ஆனால் தற்போது நாடாளுமன்றத்தில் கட்டுமானப் பணி கூட துவங்கவில்லை என்று ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளது. எந்த அடிப்படையில்? 

உண்மையைப் பேசுவதே இல்லை என்று - அவர்கள் மொழியில் சொல்ல வேண்டும் என்றால் 'சத்தியம்' செய்து கொண்டு - கிளம்பியி ருக்கின்றனர் என்றே கருத வேண்டியுள்ளது. 

புதன்கிழமை அமைச்சராக ஆளுநர் மாளிகையில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டுள்ள - தி.மு.க. இளைஞரணி செயலாளர் மாண்புமிகு மானமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் எல்லாம்  ஒரு செங்கல்லை எடுத்துக் கொண்டு (அதில் AIMS என்று எழுதப்பட்டு இருந்தது) இதுதான் மதுரையில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் கட்டடத்தின் அடிக்கல். அந்த நிலையில்தான் அப்படியே இருக்கிறது என்பதைப் பொது மக்களிடம் அந்தச் செங்கல்லைத் தூக்கிக் காட்டியபோது, பொது மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பலத்த கைதட்டலும் கேலியும் கலந்த உணர்வைப் பொது மக்களிடமிருந்து அறிய முடிந்தது.

ஒரு செங்கல்லால் மக்களிடம் உணர்ச்சியைத் தட்டி  எழுப்பித் தேர்தலில் மக்கள் வாக்குகளை வசீகரித்த ஒருவர்தான் இப்பொழுது அமைச்சர் ஆகியிருக்கிறார். இதிலிருந்து அமைச்சர் உதயநிதி அவர்களின் யூகத்திறனும், சாதுரியமும் எத்தகையது என்பது விளங்கும் - மதுரையில் 'எய்ம்ஸ்' வருமா? எங்கே பார்ப்போம்.

No comments:

Post a Comment