ஸ்டேட் பாங்கு, இரயில்வே துறைகளில் நடைபெற்றுள்ள இட ஒதுக்கீட்டுக்கு எதிரான பயங்கரப் 'படுகொலை'யை பாரீர்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 29, 2022

ஸ்டேட் பாங்கு, இரயில்வே துறைகளில் நடைபெற்றுள்ள இட ஒதுக்கீட்டுக்கு எதிரான பயங்கரப் 'படுகொலை'யை பாரீர்!

பழங்குடியினரைவிட குறைந்த மதிப்பெண் பெற்ற உயர்ஜாதியினர்- பார்ப்பனர்களுக்கு தனி சலுகையா?

ஒடுக்கப்பட்டோரின் எதிர்ப்பைப் பதிவு செய்ய ஒன்றிய அரசின் அறிவிப்பைக் கொளுத்துவோம்!

உயர்ஜாதி 'ஏழை' பார்ப்பனர் உள்ளிட்டோர் - பழங் குடியினர் பெறும் மதிப்பெண்களைவிட குறைந்த அளவு மதிப்பெண் பெற்று அதிக இடங்களைச் சுருட்டிக் கொண்ட - இட ஒதுக்கீட்டின் மீதான 'பச்சைப் படுகொலை'யைத் தடுத்து நிறுத்திட, மக்கள் மத்தியில் விழிப்புணர்வு தேவை; ஒடுக்கப்பட்டோரின் எதிர்ப்பைப் பதிவு செய்ய அந்த அரசு அறிவிப்பைக் கொளுத்துவோம்  என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

உயர்ஜாதி  'ஏழைகளுக்கு' 10 விழுக்காடு இட ஒதுக்கீடு என்பது சமூகநீதி வழங்குவதின் நோக்கத்தையே குழிவெட்டிப் புதைப்பது என்று தொடக்கம்முதல் சொல்லி வந்திருக்கின்றோம்.

இட ஒதுக்கீட்டின் நோக்கம்!

சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின் தள்ளப் பட்டவர்களுக்கு வாய்ப்பு அளிக்கவேண்டும் என்பது தான்  இட ஒதுக்கீட்டின் நோக்கமாகும்.

உயர்ஜாதியினரான பார்ப்பனர்கள் சமூக ரீதியா கவோ, கல்வி ரீதியாகவோ பின்தங்கியவர்கள் அல்லர்.

இதைக் கவனத்தில் கொண்டுதான் சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் பார்ப்பனர்கள் சேர்க்கப்படவில்லை.

தொடக்கம் முதலே பார்ப்பனர்கள்

இந்த இட ஒதுக்கீட்டை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற நோக்கத்தில்தான்,  தொடக்கம் முதலே பார்ப் பனர்கள் குறுக்கு வழியில் பொருளாதார அளவுகோலை யும் இதற்குள் நுழைத்து, இறுதியில் இட ஒதுக்கீட்டையே ஒழிக்கவேண்டும் என்ற உள்நோக்கத்துடன் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.

ஒவ்வொரு முறையும் நீதிமன்றம் அந்த முயற்சியைத் தள்ளுபடி செய்து வந்திருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ்.  கொள்கை 

செயல்பாட்டுக்கு வந்துள்ளது

இட ஒதுக்கீட்டுக்கு எதிரான கொள்கை உடையது ஆர்.எஸ்.எஸ். என்பதாகும். அதன் அரசியல் பிரிவான பி.ஜே.பி. தலைமையில் ஒன்றிய அரசு அமைந்துவிட்ட நிலையில், ஒன்றிய அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தி, உயர்ஜாதியினர் - பார்ப்பனர்களுக்குப் பயன்படும் வகையில் ஒரு சட்டத் திருத்தத்தை (103 ஆவது) அவசரக் கோலத்தில் நிறைவேற்றிக் கொண்டு விட்டது.

இதன் பலன் யாருக்கு?

இதன் பலன் என்ன? உயர்ஜாதி ஏழைகள் என்ற போர்வையில் - பழங்குடியின மக்களைவிடக் குறைந்த மதிப்பெண் பெறும் பார்ப்பனர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் அதிக இடங்கள் கிடைத்து வருகின்றன.

இவர்கள் இதற்கு முன்பே அத்துறைகளில் ஏகபோக மாக உத்தியோகங்களை அனுபவித்துக் கொண்டு வருபவர்கள்.

இதில் மிகப்பெரிய கொடுமை என்னவென்றால், மாதம் 66 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கின்ற, பெறுகின்ற பார்ப்பன உயர்ஜாதி வட்டாரங்கள் ஏழைகளாம். வருக்கத்திலும் வர்ணம் - என்னே வினோதம்!

எடுத்துக்காட்டுக்கு இதோ ஆதாரம்!

எடுத்துக்காட்டாக 2020 இல் நடைபெற்ற - பாரத ஸ்டேட் வங்கி எழுத்தர்கள் (Clerks) தேர்வு முடிவுகள் என்ன கூறுகின்றன? 

எஸ்.சி.,க்குக் கட் ஆஃப் மார்க் 61.25

எஸ்.டி.,க்குக் கட் ஆஃப் மார்க் 53.75

ஓ.பி.சி.க்குக் கட் ஆஃப் மார்க் 61.25

உயர்ஜாதி ஏழை பார்ப்பனர்களுக்கு (EWS) கட் ஆஃப் மார்க் வெறும் 28.5 தான்!

2021-2022 ஆம் ஆண்டில் நடைபெற்ற பாரத ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா எழுத்தர் தேர்வின் நிலை என்ன?

எஸ்.சி.,க்குக் கட் ஆஃப் மார்க் 61.75

பழங்குடியினருக்குக் கட் ஆஃப் மார்க் 57.25

ஓ.பி.சி.க்குக் கட் ஆஃப் மார்க் 61.95

பொதுப் பிரிவினருக்குக் கட் ஆஃப் மார்க் 61.75

உயர்ஜாதி ஏழை பார்ப்பனர்களுக்கு   கட் ஆஃப் மார்க் 47.75

ஏற்கெனவே இவர்கள் கல்வியில் குறைந்த இடம்பெற்றவர்களா?

உத்தியோகங்களில் குறைந்த இடம் பெற்றவர்களா?

மேலே சொல்லப்பட்ட மற்ற பிரிவினர்களுடைய இடங்களையும் இவர்கள்தானே கொள்ளையடித்துக் கொண்டுள்ளார்கள்.

2020 ஆம் ஆண்டு தேர்விலும் சரி, 2021-2022 ஆம் ஆண்டு தேர்விலும் சரி பழங்குடியினரைவிட உயர்ஜாதி ஏழை என்று சொல்லப்படுபவர்கள் பெற்ற மதிப்பெண் குறைவு என்பதைக் கவனிக்கத் தவறக்கூடாது.

இரயில்வே துறைத் தேர்விலும்...

இப்பொழுது இரயில்வேயில் குரூப் 'D'  தேர்வுகள்மூலம் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 769 (1,03,769) காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான தேர்வு கள் கடந்த ஆகஸ்டு மற்றும் அக்டோபர் மாதங்களில் நடந்து முடிந்துள்ளன.

இந்தத் தேர்வுகளிலும் எஸ்.சி., / எஸ்.டி., பிரிவின ரைவிட EWS-க்குக் குறைந்த கட் ஆஃப் மதிப்பெண் களை ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ளது என்பது பெரும் அதிர்ச்சிக்கு உரியது. 

இது நியாயந்தானா? 

இதைவிடப் பெரிய சமூக அநீதி உண்டா?

அதன் விவரம் வருமாறு:

பொதுப் பிரிவினருக்குக் கட் ஆஃப் மார்க் 60.95

எஸ்.சி.,க்குக் கட் ஆஃப் மார்க் 49.85

எஸ்.டி.,க்குக் கட் ஆஃப் மார்க் 41.58

ஓ.பி.சி.க்குக் கட் ஆஃப் மார்க் 55.65

உயர்ஜாதி ஏழை பார்ப்பனர்களுக்கு கட் ஆஃப் மார்க் வெறும் 40 தான்!

இந்த மூன்று தேர்வுகளையும் ஒப்பிட்டுப் பாருங்கள். பழங்குடியின மக்களுக்கு நிர்ணயிக்கப்படும்  மதிப் பெண்களைவிட, உயர்ஜாதி ஏழைகளுக்கு நிர்ண யிக்கப்பட்ட மதிப்பெண் குறைவு என்பது பச்சையான ஓரவஞ்சனை அல்லவா! 

சூட்சமம் புரிகிறதா?

பார்ப்பனர்களின் நரித்தந்திரம் விளங்குகிறதா?

பட்டப் பகலில் நடந்த படுகொலை

பட்டப் பகலில் நடைபெறுவது போன்ற சமூகநீதி படுபயங்கர பச்சைக் கொலை - இட ஒதுக்கீட்டில் நடந்திருக்கிறது என்பதற்கு வேறு ஆதாரம் வேண்டுமா?

EWS-க்குப் பொருளாதார அடிப்படை என்பது இந்தச் சூழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டது என்று தொடக்கம் முதலே நாம் கூறிவந்தது நூற்றுக்கு நூறு உண்மை என்பது இப்போது விளங்கிடவில்லையா? ''கைப் புண்ணுக்குக் கண்ணாடியா தேவை?''

மக்கள் மன்றத் தீர்ப்பே இறுதியானது

நாடாளுமன்றம் சொன்னாலும், நீதிமன்றம் தீர்ப்பு உரைத்தாலும் இறுதித் தீர்ப்பு மக்கள் மன்றமே! கடந்த கால வரலாறும் இதனையே நிரூபித்துள்ளது.

சமூகநீதியில் கண்ணுக்கு எதிரே நடைபெற்ற இந்தப் படுகொலையைக் கண்ட பிறகும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களே யாருக்கோ வந்த விருந்து இது என்று கைகட்டி, வாய்ப் பொத்தி வேடிக்கை பார்க்கப் போகிறீர்களா?

ஒன்றிய அரசின் அறிவிப்பைக் கொளுத்துவோம்!

இரயில்வேயில் 'D' குரூப் தொடர்பாக வெளிவந்துள்ள தேர்வுக்கான ஒன்றிய அரசின் அறிவிப்பை (விளம்பரத்தை) வரும் ஜனவரி 5 ஆம் தேதி நாடு தழுவிய அளவில் கொளுத்துவீர்! கொளுத்துவீர்!!

2023 ஆம் ஆண்டு ஆரம்பமே போராட்டக் களமாக அமையவேண்டிய நிலை. நம்மீது இது திணிக்கப் பட்டுள்ளது. நம் பணி பேராட்டமும், பிரச்சாரமும்தானே!

பிப்ரவரியில் நமது பிரச்சாரப் பயணம்!

பிப்ரவரி மூன்றாம் நாள் முதல் தமிழ்நாடு தழுவிய அளவில்  நாம் மேற்கொள்ளும் தொடர் பிரச்சார சுற்றுப் பயணம் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்தும்!

தயாராவீர்! தயாராவீர்!! இளைஞர்களே, தயாராவீர்!!!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

29.12.2022

No comments:

Post a Comment