பசு மாட்டுக்கு வளைகாப்பாம் சிவனடியார்களின் மூடபக்தி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 13, 2022

பசு மாட்டுக்கு வளைகாப்பாம் சிவனடியார்களின் மூடபக்தி


கோவை,டிச.13- கடவுள், மதம், பக்தி, பழக்க, வழக்கம் என்று கூறிவிட்டால் ஏன்,எதற்கு என்கிற கேள்விக்கு இடமில்லையா? பழக்க, வழக்கம் ‘என்பதன் பெயரால் மக்களை மூடத்தனத்தில் ஆழ்த்திவருவதுடன், சடங்குகள், சம்பிரதாயங்கள் என்று கூறிக்கொண்டு அம்மக்களை சுரண்டிக்கொழுத்துவருவதும் அன்றாட நிகழ்வுகளாக இருந்து வருகின்றன.

கர்ப்பிணிப்பெண்களுக்கு வளைகாப்பு என்பதே ஒரு வகையான மூடச்சடங்குதான். இதில் நாய், மாடு போன்ற வளர்ப்பு பிராணிகளுக்கு வளைகாப்பு என்பது மூடத்தனத் தின் உச்சமாகவும் கேலிக்கூத்தாகவும் இருந்துவருகிறது.

கோவையில் உலக சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில் கோவை இருகூர் வெள்ளேரி அங்காளம்மன் கோயிலில் கோமாதா என்று கூறிக்கொண்டு  பசு மாட்டுக்கு வளைகாப்பு விழா நடத்தப்பட்டதாம்.

சிவனடியார் இருகூர் நாகராஜனின் 3 வயதுடைய காரிப்பசு மாடு, முதல் முறையாக சினையுற்றதைத் தொடர்ந்து, அப்பசு மாட்டுக்கு பட்டாடை அணிவித்து, கழுத்து, கொம்புகளில் மலர் மாலை, வளையல் அணிவித்து பூஜை செய்யப்பட்டதாம்.

பின்னர், பொங்கல், புளியோதரை, எலுமிச்சை, தயிர் உள்ளிட்ட9 வகை உணவுகள் பசு மாட்டுக்கு ஊட்டப் பட்டதாம்.

 முன்னதாக தேவார- திருவாசக, கைலாய வாத்ய இசையுடன் நடராஜர், சிவகாமசுந்தரி, அங்காளம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு அபிஷேக அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டனவாம்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்களுக்கு பிரசா தத்துடன் வளையல், உடை, தாலிச்சரடு உள்ளிட்டவை கொடுக்கப்பட்டன. 

இதில் கோவை ஆனந்த வேதாஸ்ரமத்தின் நிறுவனர் பிரம்ம ரிஷி ஈஸ்வரன் குருஜி மற்றும் உலக சிவனடியார்கள் திருக்கூட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அல்லி ராஜ், கிழக்குப் பகுதிஒருங்கிணைப்பாளர் இருகூர்நாக ராஜன், இணை ஒருங்கிணைப்பாளர் ஆ.வெ.மாணிக்கவாசகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பசுவின் உடல் பாகங்களில் கடவுள்களாம்

சிவனடியார்கள் கூறும்போது, “பசுவின் ஒவ்வொரு உடல்பாகமும் ஒவ்வொரு தெய்வத்தைகுறிக்கிறது. தலை சிவபெருமானையும், நெற்றி சக்தியையும், வலக் கொம்பு கங்கை நதியையும், இடக் கொம்பு யமுனை நதியையும் குறிக்கின்றன. பசுக்கள் இருக்கும் இடத்தில் அருள், பொருள், செல்வம் முழுமையாய் இருக்கும் என்பது அய்தீகம்” என்றனராம். கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறான் என்று ஒரு பக்கம் கூறிக்கொண்டு, பசு மாட்டின் உறுப்பு களில் இன்ன இடத்தில் இன்ன கடவுள் இருப்பதாக கூறுவது - மேலும் அதனைக் கேலிக்கூத்தாக்கி - வருகிறது அல்லவா? பகுத்தறிவுடன் வாழ வேண்டிய மனித சமூகம் பக்தி, பழக்க, வழக்கத்தின் பெயரால் பாழாய்ப் போகிறது என்பதற்கு இதுபோன்ற நிகழ்வுகள் சான்றாக உள்ளன எனலாம்.


No comments:

Post a Comment