மதுரை கலைஞர் நூலகம் - பிப்ரவரியில் திறக்கப்படும் : அதிகாரி தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 16, 2022

மதுரை கலைஞர் நூலகம் - பிப்ரவரியில் திறக்கப்படும் : அதிகாரி தகவல்

சென்னை,டிச.16- அதிநவீன வசதி களுடன் மதுரை கலைஞர் நூலகம் பிப்ரவரி மாதம் திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரி தகவல் ஒருவர் தெரிவித்தார். புத்தகங்கள் மீதும், புத்தகங்களை வாசிப்பதின் மீதும் வாழ்நாள் முழுவதும் தீராப் பற்றினை கொண்ட முத்தமிழறிஞர் கலைஞர், 2010ஆம் ஆண்டில்  அண் ணாவின் 102ஆவது பிறந்தநாள் அன்று சென்னை கோட்டூர்புரத்தில் ஆசிய கண்டத்தின் அதிநவீன மிகப்பெரிய நூலகமான அண்ணா நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்தார்.

இந்நிலையில், 80 ஆண்டுகால பொது வாழ்க்கையில் அயராது பணி யாற்றி, 50 ஆண்டு கால சட்டமன்றத்தில் 13 முறை அனைத்து தேர்தல்களிலும் வெற்றி, 5 முறை முதலமைச்சராக பொறுப்பேற்று பல சாதனைகளை நிகழ்த்திய முத்தமிழறிஞர் கலைஞரின் பெருமையை போற்றும் விதமாக அவரின் 97ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் கட்டப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி, மதுரை புதுநத்தம் சாலையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 2.7 ஏக்கர் நிலத்தில் 2 லட்சத்து 179 சதுர அடி கட்டட பரப் பளவில் 7 தளங்களுடன் நவீன வசதி களுடன் கலைஞர் நினைவு நூலகம் கட்டப்பட்டுள்ளது. இதில் நூலகத்தின் கட்டமைப்புக்கு 99 கோடி ரூபாயும், நூலகத்திற்கு தேவையான நூல்கள், மின்நூல்கள் இணையவழி பருவ இதழ்கள் மற்றும் ஆராய்ச்சி நூல்கள் ஆகியவற்றை கொள்முதல் செய்தவற்கு ரூ.10 கோடி, தொழில்நுட்ப சாதனங்கள் கொள்முதல் செய்வதற்கு ரூ.5 கோடி என மொத்தம் 114 கோடி ஒதுக்கப் பட்டது.

அடித்தளத்தில் வாகன நிறுத்தத் துமிடமும், தரை தளத்தில் வரவேற்பு அரங்கம், தமிழர் பண்பாடு, அறிவியல் கண்டுபிடிப்புகள் அடங்கிய கலைக் கூடம், மாநாடு கூடம், மாற்றுத்திற னாளிகள் பிரிவு ஆகியவையும், முதல் தளம் முதல் ஆறாம் தளம் வரை இரண்டு லட்சத்திற்கும் மேலான நூல் களுக்கான பிரிவுகளும் அமைகிறது. அடித்தளம் மற்றும் 7 மாடிகள் கொண்ட இந்த நூலகம் முற்றிலும் குளிரூட்டப்பட்டதாக அமைகிறது. மூன்று மாடிகள் வரை கண்ணாடிகளால் ஆன  முகப்புத் தோற்றம் கொண்டதாக அமையும். இந்த நூலகத்தில் இலவச வைபை வசதி, மூன்று நகரும் படிக்கட்டுகள், ஆறு மின்தூக்கிகள் மற்றும் மாடித் தோட்டம் அமைகிறது.

மேலும், சுயமாகப் பரிமாறும் உணவு கூடம், குழந்தைகளுக்கான நிகழ்ச்சி அரங்கு, மாற்றுத் திறனாளி களுக்காக தரைத் தளத்தில் பிரத்யேக பிரிவு, பார்வையற்றோர், காது கேளாதோருக்கான மின் மற்றும் ஒலி நூல்கள், 100 நான்கு சக்கர வாகனங்கள், 200 இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்த வசதி என மதுரையில் அதிநவீன நூல கம் பிரமாண்டமாக கட்டப்பட்டுள் ளது. பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அடுத்தடுத்து ஆய்வுகள் செய்து கட்டுமான பணிகளை முடுக்கி விட்டிருந்த நிலையில் தற்போது பணிகள் நிறைவுபெற்றுள்ளன.

இந்நிலையில் வரும் பிப்ரவரி மாதம் நூலகம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரி தகவல் தெரிவித்தார். பொதுப் பணித்துறை செயலாளர் மணிவாசன் கூறுகையில், ‘‘அரசின் முக்கிய திட்ட மாக மதுரை கலைஞர் நூலகத்தின் கட்டுமானப் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது. நூலகத்தை பொறுத்தவரையில் உட்புற வடிவ மைப்பு மிகவும் முக்கியமானது என்பதால் பணிகளை முடிக்க மேலும் ஒரு மாத காலம் ஆகலாம். இதற்காக பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. தற்போதைய கால சூழலிற்கு ஏற்ப நூலகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகம் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் முழுமையாக முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும்’’ என்றார். 

கலைஞர் நினைவு நூலகம்  முழுக்க முழுக்க ஆராய்ச்சி மாணவர்கள், போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இது ஒரு வரமாக உருவாகப்பட்டுள்ளது.

பார்வையாளர்கள் உணவருந்த, பொருட்கள் வைக்க தனித்தனியே அறைகள் உள்ளது. வைபை வசதிகள் இருப்பதால் நூல்கள் இல்லாமலேயே மடிக்கணினி அல்லது கைபேசி மூலம் படிக்கலாம்.

கன்னியாகுமரி, ராமநாதபுரம், நெல்லை என தென் மாவட்ட மக்களுக்கு அறிவொளி வழங்கும் ஓர் கலங்கரை விளக்கமாக இந்த நூலகம் அமைகிறது.

தமிழ்மொழி, ஆங்கில நூல்கள், குழந்தை நூல்கள், கணிதம், கணினி அறிவியல், பொது நிர்வாகம், பொறியியல், உளவியல், பொருளாதாரம், வேளாண்மை, சுற்றுப்புறச் சூழல், 12,000 அரிய நூல்கள், பருவ இதழ்கள் என பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த 2.50 லட்சம் நூல்கள் இடம் பெற உள்ளன.


No comments:

Post a Comment