அமைச்சராகப் பொறுப்பேற்ற மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு தாய்க்கழகத்தின் பாராட்டும் - வாழ்த்தும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 14, 2022

அமைச்சராகப் பொறுப்பேற்ற மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு தாய்க்கழகத்தின் பாராட்டும் - வாழ்த்தும்!

துடிப்பும், செயல்திறனும் மிக்க தி.மு.க.வின் இளைஞரணி செயலாளர் மானமிகு உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., அவர்கள் இன்று (14.12.2022) 'திராவிட மாடல்' அமைச்சரவையில் ஓர் அங்கமாக ஆகி, அமைச்சர் பொறுப்பை ஏற்க மானமிகு, மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பரிந்துரைத்து, அப்பொறுப்பை ஏற்கிறார்!

தாய்க்கழகத்தின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!

இவர் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக பெருவாரியான வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்டு, தொகுதி மக்களின் பேரன்பினை தமது கடமையாற்றும் தொண்டுமூலம் அவர்தம் உள்ளம் கவர்ந்துள்ளார்!

இளைஞர்களுக்குக் கொள்கையைச் சொல்லி, ''திராவிட இயக்க நாற்றுகளான'' அவர்களை வளர்க்க, தக்கவர்களைக் கொண்டு கொள்கைப் பாசறைக் கூட்டங்கள்மூலம் திராவிட இயக்கத் தத்துவ வகுப்புகளை நடத்தி, விரும்பத்தக்க அரிய சாதனை செய்து வருவது பாராட்டுக்குரியது.

எல்லாவற்றிற்கும் மேலாக சீரிய பகுத்தறிவுக் கொள்கையாளர்.

அடக்கமாகப் பழகும் பண்பு அவரது உடைமை களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே!

43 ஆவது வயதில் தனது தாத்தா 'முத்தமிழ் அறிஞர்' கலைஞர் அவர்கள் அமைச்சர் பொறுப்பு ஏற்றதுபோல, தனது 45 வயதில் அரசியல் பயிற்சிக் களத்தில் புதிய முக்கியப் பொறுப்பை ஏற்கிறார்!

இத்தலைமுறை இளைஞர்களுக்குள்ள ஆற்றல் தங்களது வாய்ப்பு வெளிச்சத்தின் (Exposure) மூலம் வெளிப்படல் மிக அதிகம்.

அவ்வகையில், அவர் பக்குவப்பட்டே இந்தப் பொறுப்பை ஏற்கிறார்!

ஏற்கெனவே தேர்தல் பிரச்சாரக் களத்தில் வென்று காட்டியதோடு, மக்களுக்குப் பதியும் வண்ணம் கருத்துகளைக் கூறி வாக்காளர்களை ஏற்க வைத்த திறமையாளர்!

இவரை 'வாரிசு அரசியல்' என்ற முத்திரையினால் ஒதுக்கிடுவது, விமர்சிப்பது - ஒன்று அறியாமை; இன்றேல் ஆணவப் பொறாமை! அலட்சியப் படுத்தப்பட வேண்டிய ஒன்று!

எதைப்பற்றியும் பகுத்தறிவு மனப்பான்மை யோடு பார்த்து, கவலைப்படாமல், தடைக்கற்களைத் தாண்டும் நெஞ்சுரத்தோடு அவர்தம் அரசியல் பயணம் அடுத்த மைல்கல்லாகத் தொடரட்டும்!

தகுதியானவரை அடையாளம் கண்டு பொறுப் பில் அமர்த்தும் 'சமூகநீதிக்கான சரித்திர நாயகர்' நம் முதலமைச்சருக்கு நமது பாராட்டுகள்!

புதிய பொறுப்பேற்று தனித்த முத்திரை பதித்து வரலாறு படைக்கட்டும்! இளைஞர் சமுதாயத்தின் எழுச்சி வீரரான - '5ஜி' (அய்ந்தாம் தலைமுறை) என்று நம்மால் முன்பே அழைக்கப்பட்ட மாண்பு மிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு தாய்க் கழகத்தின் இனிய வாழ்த்துகள்!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

14.12.2022

No comments:

Post a Comment