ஒற்றைப் பத்தி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 15, 2022

ஒற்றைப் பத்தி

பிரதமருக்கு...

இந்தியாவில் மிகக் குறைந்த விலையில் உணவு எங்கே கிடைக்கும் என்று உங்களால் யூகிக்க முடிகிறதா?

தேநீர் ரூ. 1.00

சூப் ரூ. 5.50

கொட்டைக் கறி ரூ. 1.50

மதிய உணவு ரூ. 2.00

சாப்பாடு ரூ. 1.00

கோழி ரூ. 24.50

கேக் ரூ. 4.00

பிரியாணி ரூ. 8.00

மீன் குழம்பு ரூ. 13.00

இவை அனைத்தும் இந்தியாவில் உள்ள ''ஏழைகளுக்குக்'' கிடைக்கும் உணவுப் பொருள்கள் மற்றும் இவை கிடைக்கும் இடமோ இந்திய நாடாளுமன்ற கேன்டீன்.

இந்த ஏழைகளின் மாதச் சம்பளம் வருமான வரி தவிர்த்து ரூ.80,000 மேலும் அதை மும்மடங்காக உயர்த்தும் முடிவும் உள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பயனாகப் பெறப்பட்ட மேற்கண்ட தகவல்களைப்பற்றி அனைத்து குடிமக்களும் அறிந்திருக்கவேண்டும்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்தச் சலுகை தேவையா? என்பதல்ல நம் கேள்வி!

நாட்டு மக்களின் நலனுக்காகத் திட்டம் தீட்டும் நிதி ஒதுக்கும் நாடாளுமன்றம் அதன் உறுப்பினர்கள் - குறிப்பாக ஆளும் தரப்பைச் சேர்ந்தவர்கள் தாங்கள் அனுபவிக்கும் இந்தப் பலன்களில் நான்கில் ஒரு பகுதியையாவது நாட்டுக் குடிமக்களின்பால் கருணைக் கண்களைக் காட்டக் கூடாதா?

வேளாண் சட்டத்தை எதிர்த்து பனியிலும், மழையிலும், கொளுத்தும் வெயிலிலும் மாதக் கணக்கில் போராடிய விவசாயிகளையே சந்திக்க மறுத்தவரைப் பிரதமராகக் கொண்ட நாடாளுமன்றத்தில் இதனை எதிர்பார்க்கலாமா? என்ற வினாவை நம் பக்கம் திருப்பினால், நாம் பதில் சொல்லுவது மிகவும் கடினம்தான்!

அண்மைக்காலமாக திருக்குறள்மீது காதல் மழை பொழியும் நமது பிரதமருக்கு இந்தக் குறள் 'அர்ப்பணம்!'

குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்

அடிதழீஇ நிற்கும் உலகு

   (குறள் 544)

பொருள்: குடிமக்களைக் காத்து செங்கோலாட்சி செய்யும் பெருநில மன்னனின் அடியொற்றி (பின்பற்றி) உலகத்தார் வாழ்வார்.

திருவள்ளுவரை ஒப்புக்குப் புகழ்ந்தால் மட்டும் போதாது; அவர் கூறியபடி ஒழுகவேண்டும்.

-  மயிலாடன்


No comments:

Post a Comment