அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 16, 2022

அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி

புதுடில்லி,டிச.16- கடந்த 1989ஆம் ஆண்டில் அக்னி 1 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. அடுத்தடுத்து அக்னி 2, 3, 4, 5 ஏவுகணைகள் தயாரிக்கப் பட்டன.

கடந்த 2012, 2013, 2015ஆம் ஆண்டுகளில் கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி 5 ஏவுகணை சோதனைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன. இந்த வரிசையில் ஒடிசாவில் உள்ள அப்துல் கலாம் தீவில் மீண்டும் அக்னி 5 ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. இது 5,500 கி.மீ. தொலைவு சீறிப் பாய்ந்து இலக்கை துல்லியமாக தாக்கி தகர்த்தது.

இதுகுறித்து ஒன்றிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வட்டாரங்கள் கூறும்போது, “கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி -5 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஏவுகணை மூலம் சீன தலைநகர் பெய்ஜிங் மீது எளிதாக தாக்குதல் நடத்தலாம். 17.5 மீட்டர் நீளம், 2 மீட்டர் விட்டம்கொண்ட அக்னி 5 ஏவுகணை 50,000 கிலோ எடை கொண்டதாகும். மணிக்கு 29,401 கி.மீ. வேகத்தில் சீறிப் பாயும். 1,100 கிலோ எடை வரையிலான அணு ஆயுதங்களை சுமந்து செல்லும். இந்த ஏவுகணை 8,000 கி.மீ. வரை சீறிப்பாயும் வகையில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த 9ஆம் தேதி அருணாச்சல பிரதேச எல்லையில் சீன வீரர்களின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது. இந்த நேரத்தில் அக்னி 5 ஏவுகணை சோதனை நடத்தப்பட்டிருப்பது சீனாவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை என்று பன்னாட்டு பாதுகாப்புத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment