தென்பெண்ணை நதிநீர் பங்கீடு: 3 மாதங்களில் தீர்ப்பாயம் அமைக்க உச்சநீதிமன்றம் கெடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 15, 2022

தென்பெண்ணை நதிநீர் பங்கீடு: 3 மாதங்களில் தீர்ப்பாயம் அமைக்க உச்சநீதிமன்றம் கெடு

புதுடில்லி, டிச.15- கருநாடகா,  தமிழ்நாடு இடையேயான தென்பெண்ணை  நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில் 3 மாதங்களுக்குள்  நடுவர்  மன்றம் அமைக்க வேண்டும் என  ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

தமிழ்நாடு, கருநாடகா இடையேயான காவிரி ஆற்றின் கிளை நதியாக  தென்பெண்ணையாறு  உள்ளது.  இந்த தென்பெண்ணையாற்றின் கிளை நதியான  மார்கண்டேய நதியின் குறுக்கே யர்கோல் என்ற இடத்தில் கருநாடக அரசு புதியதாக தடுப்பணை கட்ட முயன்று வருகிறது. இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. 

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அணை கட்ட அனுமதி வழங்கியது. இதனால், தென்பெண்ணையாறு விவகாரம்  தொடர்பாக நடுவர் மன்றம்  அமைக்குமாறு  தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசிடம் கோரியிருந்தது.  

ஆனால், இந்த கோரிக்கையை ஏற்க ஒன்றிய அரசு காலதாமதம் செய்ததால், உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு புதிய வழக்கை  தொடர்ந்தது. அதில், ‘தென் பெண்ணையாற்றில் தடுப்பணை கட்டும் பிரச்சினையை தீர்க்க, நடுவர் மன்றத்தை அமைக்க உத்தரவிட வேண்டும் என்றும், அணை கட்டுவதற்கும் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தது.  கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது தென்பெண்ணையாறு நீர் பங்கீடு பிரச்சினையை தீர்க்க 4 வாரத்தில் நடுவர் மன்றத்தை அமைக்கிறோம் என்று ஒன்றிய அரசு தெரிவித்திருந்தது.  அது குறித்த அறிவிப்பாணையை  விரை வில் வெளியிடுகிறோம் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தென்பெண்ணையாறு நீர் பங்கீடு தொடர்பான  முடிவுக்கு ஒப்புதல் பெறும் வகையில் 4 அமைச்ச கங்களுக்கும் அமைச்சக குறிப்பு சுற்றறிக்கையாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

எனவே இந்த தீர்ப்பாயம் அமைப்பது தொடர்பாக இறுதி முடிவு எடுக்க 6 மாதம் கால அவகாசம் வேண்டும் என்று கோரப்பட்டது.  இதற்கு பதிலளித்த நீதிபதிகள்,  6 மாதம் அளிக்க முடியாது;  3 மாதங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் என உத்தரவிட்டு  வழக்கு விசாரணையை மார்ச் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment