16 ஆயிரம் கி.மீ. மின்வழித் தடம்: தமிழ்நாடு மின்வாரியம் திட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 13, 2022

16 ஆயிரம் கி.மீ. மின்வழித் தடம்: தமிழ்நாடு மின்வாரியம் திட்டம்

சென்னை,டிச.13 மறுசீரமைக்கப் பட்ட மின்விநியோக திட்டத்தின்கீழ், தமிழ்நாட்டில் நடப்பாண்டில் ரூ.2,050 கோடி செலவில் 26,000 மின்விநியோக மின்மாற்றிகள், 16 ஆயிரம் கி.மீ. மின்வழித் தடங்கள் அமைக்கப்பட உள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மின்சாரத்தை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச் செல்லும்போது ஏற்படும் மின்இழப்பை பூஜ்ஜியமாகக் குறைக்க மறுசீரமைக்கப் பட்ட மின்விநியோக திட்டத்தை ஒன்றிய அரசு தொடங்கியுள்ளது.

5 ஆண்டுக்குள் முடிக்க திட்டம்

தமிழ்நாட்டில் ரூ.10,790 கோடி செலவில் இத்திட்டத்தைச் செயல் படுத்த மின்வாரியத்துக்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதில், ரூ.8,600 கோடி ஒன்றிய அரசு சார்பில் கடனாக வழங்கப்படும். 5 ஆண்டு களுக்குள் பணி முடித்துவிட்டால், மொத்தக் கடன் தொகையில் 60 சதவீதம் மானியமாக வழங்கப்படும். எஞ்சிய 40 சதவீததொகையை மட்டும் செலுத்தினால்போதும். அதே சமயம், காலஅவகாசத்துக்குள் பணி முடிவடையவில்லை எனில், மொத்தக் கடன் தொகையும் வட்டியுடன் சேர்த்து செலுத்த வேண்டும்.

இந்நிலையில், இத்திட்டத்தின்கீழ் புதிய மின்வழித் தடங்களை அமைப்பது, அதிக தூரமுடைய வழித்தடங்களில் பழுது ஏற்படும்போது மொத்தமாக மின்விநியோகம் நிறுத்துவதற்குப் பதிலாக ஒவ்வொரு 2 கி.மீ. தூரமும் சுவிட்ச்யார்டு கட்டமைப்பை ஏற்படுத் துவது உள்ளிட்ட பணிகளை மேற் கொள்ளவும், இப்பணிகளை 5 ஆண்டு களுக்குள் முடிக்கவும் மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.

இதன்படி, இந்த ஆண்டில் ரூ.2,050 கோடி செலவில் 26,000 மின்விநியோக மின்மாற்றிகள், 16 ஆயிரம் கி.மீட்டர் தூரத்துக்கு மின்வழித் தடங்கள் அமைக்கப்பட உள்ளன. இப்பணிகளை 33 சதவீதம் மின்வாரியமும், 67 சதவீ தத்தை தனியார் நிறுவனங்கள் மூலமும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள தாக தமிழ்நாடு மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment