தஞ்சையில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 19, 2022

தஞ்சையில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்

உயர்ஜாதியில் பொருளாதாரத்தில் நலிந்தோருக்கு   10 சதவிகித இட ஒதுக்கீட்டை எதிர்த்து

தமிழ்நாடெங்கும் மக்கள் பெருந்திரள் கூட்டம்: இன்னொரு பக்கம் சட்டப் போராட்டம்!

தஞ்சை, நவ.19   உயர்ஜாதியில் பொருளாதாரத்தில் நலிந்தோருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டை எதிர்த்து தமிழ்நாடெங்கும் மக்கள் பெருந்திரள் கூட்டம்- மற்றொரு பக்கம் சட்டப் போராட்டம் நடைபெறும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்

நேற்று (18.11.2022) தஞ்சைக்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

 திராவிடர் கழகம் சார்பில் கூட்டப்பட்ட 

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு

10 சதவிகித இட ஒதுக்கீட்டை எதிர்க்கக்கூடிய, முற்போக்குக் கருத்துள்ள அத்துணைக் கட்சிகள், அமைப்புகள் சார்ந்த ஒரு பெருந்திரள் கூட்டம் முதன்முதலில் சென்னையில் நடைபெறவிருக்கிறது. மழையின் காரணமாக உடனடியாக நடத்தவில்லை. ஆகவே, எவ்வளவு விரைவில் அதை செய்யமுடி யுமோ அதை செய்யவிருக்கின்றோம். முதலமைச் சரிடம் அதற்கான தேதி கேட்கப்பட்டு இருக்கிறது.

ஆகவே, அதன்படி அந்தப் பெருந்திரள் கூட்டம் சென்னையில் முதன்முதலில் நடத்தப்பட்டு, அதற்குப் பிறகு தமிழ்நாடு முழுக்க நடைபெற உள்ளது. 

வகுப்பு வாரி உரிமை ரத்து செய்யப்பட்டபொழுது எப்படி தந்தை பெரியார் அவர்கள், ஒரு மக்கள் திரளை எல்லா இடங்களிலும் ஒத்தக் கருத்துள்ளவர்களை அழைத்துக் கூட்டினாரோ, அந்தப் பணியை தொடர்ந்து நாங்கள் செய்வோம். நல்ல வாய்ப்பாக இன்றைக்கு சட்ட நீதி நாளில், தஞ்சையில் நடைபெறுகின்ற வழக்குரைஞர் கூட்டத்தில் பங்கேற்க வந்திருக்கின்றேன்.

தஞ்சையில் வழக்குரைஞர்களாக இருந்தவர்கள் தான் பிறகு நீதிபதிகளாக வந்திருக்கிறார்கள். 69 சத விகித இட ஒதுக்கீடு வந்ததற்கான அடிப்படை. அப்படி வந்த நீதிபதிகளில் ஒருவர்தான் நீதிபதி வேணுகோபால், அவர்களின் பங்கு அதில் உண்டு. 

ஆகவேதான், எங்கள் முதல் பணியே அந்தப் பணியாக அமைந்திருக்கிறது.

எண்ணெய்யும், தண்ணீரும் 

ஒன்று சேர முடியாது

செய்தியாளர்: இந்த 10 சதவிகித இட ஒதுக்கீடு எந்த அளவிற்கு அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது?

தமிழர் தலைவர்: அரசமைப்புச் சட்டத்திற்கு விரோத மானதுதான். எந்த அளவு, என்று அளவு கிடையாது. எண்ணெய்யையும், தண்ணீரையும் சேர்க்க முடியாது. ஆனால், பாலில் தண்ணீர் ஊற்றலாம்; தண்ணீரில் பால் ஊற்றலாம். ஆனால், எண்ணெய்யும், தண்ணீரும் ஒன்று சேர முடியாது.

செய்தியாளர்: அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும், தமிழ் நாடு அரசின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைப் புறக் கணித்திருக்கின்றனவே?

தமிழர் தலைவர்: அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை அவர்கள், அண்ணா பாதையிலும் போகவில்லை, எம்.ஜி.ஆர். பாதையிலும் போகவில்லை,  லேடி பாதை யிலும் போகவில்லை. மோடியின் பாதையிலேயே போய்க் கொண்டிருக்கிறார்கள்.

தி.மு.க. பொதுச்செயலாளர் 

துரைமுருகன் கருத்து

செய்தியாளர்: பா.ஜ.க. பிசாசு போல வளர்ந்து கொண்டிருக்கிறது என்று தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் சொல்லியிருக்கிறாரே, அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

தமிழர் தலைவர்: பிசாசு மாதிரி என்பது ஒரு பயம்தான். பிசாசு என்பது கிடையாது. இருட்டைத்தான் பிசாசு என்று சொல்கிறார்கள். வளர்ந்தது போன்று இருக்கிறது, பயமுறுத்துவது போன்று  இருக்கிறது; பிசாசு என்பது எப்படி இல்¬லேயா, அதேபோன்று, பி.ஜே.பி. என்பதும் இல்லை என்பதைத்தான் துரைமுருகன் சொல்லியிருக்கிறார்.

பலர் மாறுபட்ட கருத்துகளைச் 

சொல்லியிருக்கிறார்கள்

செய்தியாளர்: 10 சதவிகித இட ஒதுக்கீட்டை காங் கிரசும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரிக் கிறதே?

தமிழர் தலைவர்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேறொரு யோசனையை சொல்லியிருக்கிறார்கள். வேறு ஆணையம் அமைக்கவேண்டும்; வேறு அளவு கோல் வைக்கவேண்டும் என்று.

காங்கிரசில், பலர் மாறுபட்ட கருத்துகளைச் சொல்லி யிருக்கிறார்கள். நாங்கள் சொன்ன கருத்தையும் ஆதரித்திருக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, புதுச்சேரி சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தில் காங்கிரஸ் நண்பர்கள், காங்கிரஸ் எம்.பி.,க்கள், மேனாள் முதலமைச்சர் நாராயணசாமி, வைத்தியலிங்கம் நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர், தி.முக, பா.ம.க கட்சியினர் கலந்துகொண்டு இருக்கி றார்கள். அந்தச் செய்தி ஊடகங்களிலும் வந்திருக்கிறது.

ஓர் அருமையான காரணத்தைச் சொல்லியிருக் கிறார்கள் அவர்கள்; புதுச்சேரியில் முன்னேறிய ஜாதி யினர் மொத்தமே 5 சதவிகிதம்தான். 5 சதவிகிதமாக உள்ள அவர்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு என்றால், இதைவிட அநீதி வேறொன்றும் இருக்க முடியாது. ஆகவே, இதனை ஏற்க முடியாது என்று மேனாள் முதலமைச்சர் நாராயணசாமி விளக்கம் சொல்லி, ஊர்வலம் சென்றிருக்கிறார்கள்.

காங்கிரசினுடைய அதிகாரபூர்வமான செயலாளர் களில் முக்கியமானவர் திரு.ஜெயராம் ரமேஷ் ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறார், ‘‘தென் மாநிலங்களைப் பொறுத்தவரையில், அவர்கள் வேறுவிதமாக நினைக்கிறார்கள். தொடக்கத்தில் நாங்கள் எடுத்த நிலைப்பாடு வேறு. ஆனால், இப்பொழுது நடைமுறை நிகழ்வுகள் வேறு. ஆகவே, நாங்கள் இப்பொழுது மறுசிந்தனைக்கு ஆளாக வேண்டி இருக்கிறது'' என்று சொல்லியிருக்கிறார்.

எந்த நிலைப்பாட்டை எடுத்து அவர்கள் இந்த மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்தார்களோ, அது இப்பொழுது சரியாக இருக்காது என்பதைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

மண்டல் கமிசன் அறிக்கையை நடைமுறைப்படுத் தும்பொழுது, தொடக்கத்தில் அவர்கள் ஆதரிக்க வில்லை. பிறகுதான் அதை அவர்கள் ஆதரித்தார்கள்.

நீட் தேர்வில்கூட, வட புலத்தில் ஆதரிக்கிறார்கள். ஆனால், தமிழ்நாடான பெரியார் மண்ணில் 

நீட் தேர்வை எதிர்க்கிறார்கள்.

ஆகவே, அந்தந்த இடத்திற்குத் தகுந்தாற்போன்று சிந்தனைகள் தேவைப்படும். ஓரிடத்தில் அரசியல் ரீதியாக கூட்டணி வைத்திருப்பார்கள்; இங்கே காங் கிரஸ், தி.மு.க. கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணியாக இருக்கிறார்கள். மேற்கு வங்கத்தில் அதுபோன்ற நிலைப்பாடு கிடையாது; கேரளாவில், காங்கிரசோடு, கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டணி கிடையாது.

ஆகவே, அரசியல் நிலைப்பாடு என்பது, மாநிலங் களுக்கு மாநிலம் வேறுபடும். என்னதான் தேசிய கட்சியாக இருந்தாலும் ஒரே நிலைப்பாட்டை எடுக்க முடியாது.

தமிழ்நாடு அரசின் போராட்டம், 

நிலைப்பாடு எப்படி இருக்கிறது?

செய்தியாளர்: உயர்ஜாதியில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டில், தமிழ்நாடு அரசின் போராட்டம், நிலைப்பாடு எப்படி இருக்கிறது?

தமிழர் தலைவர்: மற்றவர்கள் முந்துவதற்கு முன்பு நம்முடைய முதலமைச்சர், அந்த நிலைப் பாட்டை உடனடியாக எடுத்து, சேர்க்கவேண்டிய வர்களையெல்லாம் சேர்த்து, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, அக்கூட்டத்தில் எடுத்த முடிவின்படி, இப்பொழுது மறுசீராய்வு என்ற அந்த சட்டப் போராட்டத்திற்கு வேண்டிய முன்னுரையை, தேவையான பணிகளை தொடங்கி வைத்தார், வழக் குரைஞர்களையும், மற்றவர்களையும் கலந்தாலோசித்து.

அதேபோன்று, சமூக அமைப்புகளும் அந்தப் பணிகளைச் செய்வதற்குத் தயாராக இருக்கிறார்கள்.

ஆகவே, நிச்சயமாக ஒரு பக்கத்தில் மறுசீராய்வு என்று வேகமாக சட்ட ரீதியான போராட்டமாக நடை பெறக்கூடிய வாய்ப்பு இருக்கும்.

இன்னொரு பக்கத்தில், கடந்த 15 ஆம் தேதி, மற்ற அமைப்புகள் எல்லாம் சேர்ந்து, திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடி வெடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து (EWS)  தவறான செய்திகள் மக்கள் மத்தியில் பரப்பப்படுகின்றன. அதுகுறித்து பெரிய அளவிற்கு இதை மக்கள் இயக்கமாக நடத்த வேண்டும்; ஒவ்வொரு ஊரிலும் அதுகுறித்து விளக்கப்பட வேண்டும் என்று அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கேற்ப அந்தப் பணிகள் வேகமாக நடைபெறு கின்றன.

இவ்வாறு செய்தியாளர்களிடையே திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கூறினார்.

No comments:

Post a Comment