அதிர்ச்சி அளிக்கும் அயோத்தி வழக்கு தீர்ப்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 12, 2022

அதிர்ச்சி அளிக்கும் அயோத்தி வழக்கு தீர்ப்பு!

இந்தியத் துணைக் கண்டத்தில் இரு பெரும் தீர்ப்புகள் மூலம்  உலக வரலாறு உள்ளவரை அதன் உடலில் ஆறாத காயங்கள் இருந்து கொண்டே இருக்கும்.

ஒன்று அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் யாரும் குற்றவாளிகள் அல்லர் என்ற தீர்ப்பு. - இரண்டாவது குஜராத்தில் ஏற்பட்ட இனப்படுகொலைக்கும், அன்றைய ஆட்சியில் முதலமைச்சராக இருந்தவருக்கும் தொடர்பு இல்லை என்ற தீர்ப்பு.

குஜராத்தை நீரோ மன்னனா ஆள்கிறார் என்று உச்சநீதிமன்றமே கூடக் கேட்டதுண்டு. ஆனாலும் அவர் குற்றமற்றவராம்!

குஜராத்தில் ஒரு பெண் அமைச்சரே (மயா கோட்டானி) படுகொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டும் விடுதலை பெற்று வீர உலா வந்து கொண்டுள்ளார்.

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் எல்லாம் சத்தம் இல்லாமல் விடுதலை செய்யப்பட்டனர். ஆயிரக்கணக்கான வழக்குகள் திரும்பப் பெறப்பட்டதும் உண்டு.

குறிப்பாக பில்கிஸ்பானு என்ற கர்ப்பிணிப் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து அவரது குடும்ப உறுப்பினர்கள் - குழந்தைகள் உள்பட 10க்கும் மேற்பட்டோரை படுகொலை செய்த 11 பேர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அத்தனைப் பேரும் விடுதலை செய்யப்பட்டனர் - பிரதமர் மோடி ஆட்சியில்.

அதே போல அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கு. பாபர் என்ற மன்னன் இராமன் கோயிலை இடித்து விட்டு, மஸ்ஜித்தைக் கட்டினான் என்று கரடி விட்டனர். அதன் நுழைவு வாயிலிலேயே ஆதாரக் கல்வெட்டு இருக்கிறது.

1528ஆம் ஆண்டு முகலாயப் பேரரசன் பாபரின் தளபதி மிர்பகி என்பவரால் மஸ்ஜித் கட்டப்பட்டது என்பதுதான் அந்தக் கல்வெட்டு!

இராமன் கோயில் அங்கு இருந்தது என்பதற்கு எந்தத் தடயமும் கிடையாது. அதே அயோத்தியில் குடி இருந்த வால்மிகி இராமாயணத்தை ஹிந்தியில் 'ராமசரிதமனஸ்' என்னும் காவியத்தை எழுதிய துளசிதாஸ், ராமர் பிறந்த இடத்தில் இருந்த கோயில் இடிக்கப்பட்டது என்று குறிப்பிடவில்லை.

1992 டிசம்பர் 6இல் அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளில் ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார்களால், நிர்வாண சாமியார்களால் பிஜேபியின் அகில இந்தியத் தலைவர்களின் வழிகாட்டுதலின்படி பாபர் மசூதி காட்டு விலங்காண்டித்தனமாக இடித்துத் தூள் துளாக்கப்பட்டது.

இதன்மீது வழக்குகள் எல்லாம் நடைபெற்றதுண்டு.

உச்சநீதிமன்றம் கட்டப் பஞ்சாயத்து நடத்தி, பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் இராமன் கோயிலைக் கட்ட அனுமதி அளித்தது. இஸ்லாமியர்களுக்கு வேறு ஓரிடத்தில் இடம் கொடுக்கப்பட்டது.

69 பேர்மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு நடக்கும் இடைவெளியில் பலர் மரணம் அடைந்தனர். மீதி 32 பேர்களே உயிருடன் உள்ளனர்.

வழக்கை விசாரித்த சி.பி.அய். சிறப்பு நீதிமன்றம் அத்வானி உள்ளிட்ட அனைவரையும் குற்றமற்றவர்கள் என்று கூறி விடுதலை செய்தது. (30.9.2020).

பாபர் மசூதி இடிக்கப்பட்டது - திட்டமிட்ட சதியல்ல; இயல்பாக நடந்த ஒன்றுதான் என்று மனம் போன போக்கில் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்ததுதான் வேடிக்கை.

அத்வானி ரத யாத்திரை நடத்தினாரே - அது எதற்கு? நாடு முழுவதுமிருந்து செங்கற்களைக் கொண்டு சென்றார்களே, அது எதற்கு?

பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முதல்நாள் (5.12.1992) பாபர் மசூதியிலிருந்து ஆயிரம் அடி தூரத்தில் உள்ள ஒரு குன்றில் ஒத்திகை ஒன்றை நடத்தினர். குன்றைக் கயிற்றால் இணைத்து கயிற்றைப் பற்றிக் கொண்டு குன்றின்மீது ஏறும் பயிற்சியை எடுத்துக் கொண்டனர். 

இது எதைக் காட்டுகிறது? பாபர் மசூதி இடிக்கப்பட்டது திட்ட மிட்ட செயல்தான் என்பதற்கு வேறு என்ன ஆதாரம் தேவை.

'லிபரான் ஆணையம்' தன் அறிக்கையில் வாஜ்பேயி பெய ரையும் சேர்த்திருந்தது. இதற்காக நாடாளுமன்றத்தையே நடக்க விடாமல் ரகளையில் ஈடுபட்ட உத்தமப்புத்திரர்கள் (?) தான் இந்தப் பிஜேபியினர்.

பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு முதல் நாள் (5.12.1992) பிஜேபியின் அகில இந்திய தலைவர் வாஜ்பேயி லக்னோவில் என்ன பேசினார்?

"நாளை என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது. கூரிய கற்களின்மீது அமர்ந்து கொண்டு யாரும் பக்திப் பாடல்களைப் பாட முடியாது. மண்ணைச் சமன்படுத்தி, அமர்வதற்கு ஏற்றபடி சமன் செய்ய வேண்டும்" என்று பேசினாரே, இதன் பொருள் என்ன? பாபர் மசூதியை இடித்து சமன் செய்ய வேண்டும் என்பதைத் தானே கவிஞர் வாஜ்பேயி அப்படிப் பேசினார்.

பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது,  கரசேவகர்களுக்கு ஆணைகளைப் பிறப்பித்துக் கொண்டிருந்தார் அத்வானி என்று அவருடைய பாதுகாப்பு அதிகாரி அஞ்சு குப்தா 'லிபரான் ஆணையத்தின்' முன் தன் சாட்சியத்தைப் பதிவு செய்யவில்லையா?

பாபர் மசூதி முற்றிலும் இடிக்கப்பட்ட நிலையில் உமாபாரதி, முரளிமனோகர் ஜோஷி முதுகில் சவாரி ஏறி மகிழ்ச்சிப் பெருக்கை வெளிப்படுத்தவில்லையா?

அப்போது உ.பி. முதல் அமைச்சராக இருந்த கல்யாண்சிங், பிஜேபி தலைவர்களின் பேச்சை நம்பி ஏமாந்தேன்  - அவர்களின் பேச்சை நம்பிதான் உச்சநீதிமன்றத்திலும் மசூதிக்கு ஒரு கேடும் ஏற்படாது என்றுஉறுதி கொடுத்தேன் என்று புலம்பினாரா இல்லையா?

இவ்வளவு ஆதாரங்கள் இருந்தும் பாபர் மசூதி திட்டமிட்டு இடிக்கப்படவில்லை - இயல்பாக நடந்த ஒன்று என்பதும், யாரும் குற்றவாளிகள் அல்லர் என்றும் நீதிமன்றம் தீர்ப்பு சொல்லுகிறது என்றால், (9.11.2022) நீதிமன்றத்தின் மீதான பொது மக்களின் மதிப்பும், மரியாதையும் எக்கெதிக்கு ஆளாகும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

பாசிசத்தை நோக்கி பிஜேபி ஆட்சியில் இந்தியா சிறுத்தைப் பாய்ச்சலாகச் சென்று கொண்டு இருக்கிறது - வெட்கக் கேடே!


No comments:

Post a Comment