காசி தமிழ்ச் சங்கமம் - சங்கிகளின் பயிற்சிக் கூடமா? அய்.அய்.டி.க்கு இதில் என்ன வேலை? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 5, 2022

காசி தமிழ்ச் சங்கமம் - சங்கிகளின் பயிற்சிக் கூடமா? அய்.அய்.டி.க்கு இதில் என்ன வேலை?

இது தடுத்து நிறுத்தப்படவேண்டும்!

காசி தமிழ்ச் சங்கமும், சென்னை அய்.அய்.டி.யும் இணைந்து நடத்தும் சங்கமத்தின் பின்னணியில் இருப்பது இந்துத்துவா - சனாதனப்  பயிற்சியே! இது தடுத்து நிறுத்தப்படவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

ஆர்.எஸ்.எஸ்.சின் அஜெண்டாவைச் செயல்படுத்து வதற்கான அதிகார மய்யமாகவும், தமிழ்நாட்டில் அந்த அதிகாரத்தை மக்களின் ஆதரவுமூலம் பெற முடியாத நிலையில், ஒன்றிய அரசின் எதேச்சதிகாரத் தன்மை மூலம் நிறைவேற்றிக் கொள்ளவும் தமிழ்நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளவர்தான் ஆளுநர் ஆர்.என்.ரவி என்பவர். அன்றாடம் அவருடைய பேச்சுகளும், நட வடிக்கைகளும் அவரது இந்தப் போக்கைத் தெளிவாகக் காட்டுகின்றன. 

இந்துப் பல்கலைக் கழகமும் - 

சென்னை அய்.அய்.டி.யும் கைகோர்ப்பு ஏன்?

பனாரஸ் இந்து பல்கலைக்கழகமும், சென்னை அய்.அய்.டி.யும் இணைந்து இந்த ‘காசி தமிழ்ச் சங்க மத்தை’  நடத்துகிறார்களாம் (தமிழ்நாட்டின் பல்கலைக் கழகங்கள் இந்தக் கூத்துக்கு இடம்கொடுக்காது என்று கருதி அய்.அய்.டி.யைக் கூட்டுச் சேர்த்துக் கொண்டார் களோ?). இதன் அறிமுக நிகழ்ச்சிக்குச் சென்ற ஆர்.என்.ரவி என்ன பேசியிருக்கிறார்?

‘‘In this 200 years, so much has happened to erase our history and erase who we are that we have to take an effort to re-introduce our country to ourselves. This notion of India created by foreigners has eclipsed the very idea of ‘Bharat.'''

“கடந்த 200 ஆண்டுகளில், நம் வரலாறும், நாம் யார் என்பதும் அழிக்கப்பட்டுவிட்டது. அதனால், நம் நாட்டை நமக்கே மீண்டும் அறிமுகப்படுத்த நாம் முயல வேண்டும். அயல்நாட்டவர்களால் உருவாக்கப்பட்ட ‘இந்தியா’ என்ற கருத்தாக்கம், ‘பாரதம்’ என்ற சிந்த னையை மறைத்துவிட்டது” என்று பேசியிருக்கிறார் ஆளுநர் ரவி.

இந்தியாவா - பாரதமா? 

வேறுபாடுகள் என்னென்ன?

‘India that is Bharat’ ‘இந்தியா அதாவது ‘‘பாரதம்''’ என்று தானே இந்திய அரசமைப்புச் சட்டம் சொல்கிறது. பிறகென்ன ‘இந்தியா என்னும் கருத்தாக்கம், ‘பாரதம்' என்னும் சிந்தனையை மறைத்துவிட்டது’ என்ற புலம் பல்? ஏனெனில், அவர்கள் பார்வையிலேயே இந்தியா வேறு; ‘பாரதம்' வேறு. அவர்களுக்கு இந்தியா அவசியமில்லை; பாரதமே வேண்டும். இந்தியா மீதான பற்று, தேசபக்தி என்பதெல்லாம் சால்ஜாப்பு, மாய்மாலம். அதற்குப் பின்னால் இருப்பது பார்ப்பனிய ஆதிக்கத்தைக் காப்பதற்கான உத்தி மட்டுமே!

ஆர்.எஸ்.எஸ்.சின் பார்வையில், இந்தியா என்பது மதச்சார்பற்றது. ‘பாரதம்' என்பது ஹிந்து மதச் சார் புடையது. 

இந்தியா என்பது ஜனநாயகம்; ‘பாரதம்' என்பது சனாதனம். 

இந்தியா என்றால் மக்களுக்கு அரசதிகாரம் தரும் குடியரசு; ‘பாரதம்' என்றால் ராஜகுருக்களுக்கு அதிகாரம் தரும் முடியரசு. 

‘பாரதம்' என்றால் 

அங்கே மனுநீதிதான்!

இந்தியா என்றால் அரசமைப்புச் சட்டப்படி சமூகநீதி பேச வாய்ப்பு இருக்கிறது. பழைய பாரதத்தில் ஜாதிக் கொரு நீதிதான் - அதுவும் மனுநீதிதான் (கர்ணன் பாத்திரம் மஹாபாரதத்தில் ஓர் எடுத்துக்காட்டு!).

இந்தியா என்றால் மூவண்ணம், ‘பாரதம்‘ என்றால் இன்னமும்  நால்வருணம்!

ஆர்.எஸ்.எஸ்.சின் பார்வை தானே, ஆளுநர் ஆர்.என்.ரவியின் பார்வை. அதைத் தான் வெளிப் படுத்தியிருக்கிறார்.

மேலும், ‘காசிக்கும் தமிழ்நாட்டுக்குமான தொடர்பு ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது’ என்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. ஆயிரம் ஆண்டு களல்ல, அதற்கும் முந்தையது என்று வரலாறு இருக் கிறது. அது, ஆணவம் பேசிய வடவர்களை அடக்கித் திரும்பிய வரலாறு! கடந்த நூற்றாண்டிலும் இந்தத் தொடர்புக்கு ஒரு வரலாறு உண்டு. மகான்கள் வாழும் புண்ணிய பூமி என்று சொல்லப்பட்ட காசிக்குச் சென்று, அங்கும் மதத்தின் பெயரால் கயவர்களே உலவுகிறார்கள் என்று கண்டு திரும்பிய பெரியார் தான், இந்து மதத்தின் புரட்டுகளை எடுத்துச் சொல்லி மக்கள் மத்தியில் வெளுத்து எடுத்தார். இந்தத் தொடர்புகளையும் ஆளுநர் ஆர்.என்.ரவி அறியட்டும். அப்போது இந்த தமிழ்நாட்டின் அடித்தளம் என்ன என்பது அவருக்குப் புரியும்.

முன்பு காசி உள்ள நாட்டிற்கு என்ன பெயர்? ஆரியவர்த்தம்!

அதே காசி - இன்றைய வாரணாசி - 106 ஆண்டு களுக்குமுன்பு - 1916 இல் அங்கே நடந்த ‘சென்ட்ரல் ஹிந்து காலேஜ் பனாரஸ்' (Central Hindu College Benares)  வெளியிட்ட ‘சனாதன தர்மா' என்ற ஆங்கிலப் பாடப் புத்தகத்தில் முதல் பகுதியே எப்படி தொடங்குகிறது என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

சனாதனம் என்றால் என்ன?

''SANATANA DHARMA means the Eternal Religion, the  Ancient Law, and it is based on the Vedas, sacred books given to men many long ages ago. This Religion has also been called the Aryan Religion, because it is the Religion that was given to the  first nation of the Aryan race ; Arya means noble, and the name was given to a great race, much finer  in character and appearance than the races which went before it in the world’s history. The first  families of these people settled in the northern part  of the land now called India, and that part in which  they first settled was named Aryavarta, because  these Aryans lived in it. “[The land] from the  eastern ocean to the western ocean, between the two  mountains [Himavan and Vindhya], the wise call  Aryavarta." 

In later days the Religion was called the Hindu Religion, and this is the name by which it is now usually known.

இதன் தமிழாக்கம் வருமாறு:

‘‘சனாதன தர்மம் என்றால் தானாகவே உருவான மதம், இதன் விதிகள் வேதங்களை அடிப் படையாகக் கொண்டவை, வேதங்கள்  மிகவும் பழைமையானவை.

சனாதனம் ஆரிய மதம் என்றும் அழைக்கப் படுகிறது. ஏனெனில்  ஆரிய இனத்திற்கு அவர்களின் முன்னோர்களால் வழங்கப்பட்ட மதம்.

ஆரியர்கள் என்றால் உன்னதமானவர் என்று பொருள். மேலும் உலக வரலாற்றில்  மற்ற இனங் களைவிட குணத்திலும், தோற்றத்திலும் இவர்கள் சிறந்துவிளங்குகிறார்கள் என்று கூறி, இவர்களுக்கு இந்தத் தகுதி வழங்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர். 

ஆரியர்கள் முதல்முறையாக வட இந்தியாவில் வந்து குடியேறினர். மேலும் அவர்கள் முதலில் குடியேறிய பகுதிக்கு ‘ஆர்யவர்தா' என்று பெய ரிடப்பட்டது. ஏனெனில் இந்த ஆரியர்கள் வாழ்ந்த பகுதி - இரண்டு கடல் பகுதி; இரண்டு மலைகளுக்கு இடையே [இமயமலை மற்றும் விந்தியமலை], இருந்த பகுதிகளை ஆரியவர்த்தம் என்று அழைக் கிறார்கள்."

பிற்காலத்தில் சனாதன மதம் தற்போது ஹிந்து மதம் என்று அழைக்கப்பட்டது.''

இதற்கு என்ன பதில்?

அய்.அய்.டி.,க்கும் - காசி சங்கமத்துக்கும் உறவு எந்த அடிப்படையில்?

எதற்காக இந்த சங்கமமாம்? இதற்கும் ஒரு தொழிற் கல்வி நிறுவனத்திற்கும் என்ன சம்பந்தமாம்? அறிவியல் தொழில்நுட்பத் துறையில் மாணவர்களை உருவாக்க வேண்டிய சென்னை அய்.அய்.டி-க்கு இது என்ன வேலை? காமகோடி அய்யங்கார்களின் கைகளில் அய்.அய்.டி.கள் சிக்கித் தவிக்கும் வரை, அதற்கென ஒதுக்கப்படும் மக்கள் வரிப்பணம் எப்படி வீணடிக் கப்படுகிறது என்பதற்கு இத்தகைய நடவடிக்கைகளே சான்றாகும்.  (ஒன்றிய அரசு மட்டுமல்ல; தமிழ்நாடு அரசும் நில ஒதுக்கீடு தொடங்கி, நிதி ஒதுக்கீடுவரை செய்கிறதே!)

உயர் ஆராய்ச்சிக் கல்விக்கான உயர் நிறுவனம் என்று சொல்லப்படும் ஒரு நிறுவனம் இதனைச் செய்ய வேண்டிய அவசியமென்ன?  ஏனென்றால், “தேசிய கல்விக் கொள்கையில் (2020) கூறப்பட்டுள்ளபடி இவை பன்முகப்பட்ட கல்வி நீரோட்டங்கள் மற்றும் தொடர் கற்றலின் அவசியத்தின் தேவையை ஒட்டி அமைக் கப்பட்டுள்ளது” என்று இந்தப் ‘‘பசுமாட்டைப்'' பிடித்துத் தென்னை மரத்தில் கட்டியுள்ளார்கள்! 

இந்த சங்கமத்தின் நோக்கம் என்ன?

“இந்திய கலாச்சாரம் மற்றும் நெறிமுறைகளில் வேரூன்றியிருக்கும் அதேவேளையில், நவீன மற்றும் 21 ஆம் நூற்றாண்டின் மனநிலையுடன் ஒத்திசைவான தலைமுறையை வளர்ப்பதற்கு முக்கியத்துவம் [தேசியக் கல்விக் கொள்கை (2020)] அளிக்கிறது. கல்விக்கான இந்த சமச்சீர் மற்றும் முழுமையான அணுகுமுறையை, பாடத்திட்ட மற்றும் பாடத் திட்டம் சாராத நிலைகளில் உறுதி செய்வதற்கான பல்வேறு வழிமுறைகளையும் இந்தக் கொள்கை பரிந்துரைத்துள்ளது. மற்றவற்றுடன், இந்திய அறிவு அமைப்புகளின் செல்வத்தை மிக சமீ பத்திய அறிவுடன் ஒருங்கிணைப்பதற்கான ஆராய்ச் சியையும் இந்தக் கொள்கை பரிந்துரைக்கிறது” என்று இதன் சிறப்பைத் தங்கள் இணையதளத்தில் எடுத் துரைப்பவர்கள், இதன் செயல்பாடுகள் என்ன சாதிக்க இருக்கின்றன என்பதையும் சொல்கிறார்கள், கேளுங்கள்:

“நவீன மருத்துவத்தை மேம்படுத்த யோகா மற்றும் ஆயுர்வேதம், பழங்கால கைவினைப் பொருட்கள் தயாரிப்பதற்கு புதிய தொழில்நுட்பத்தைப் பயன் படுத்துதல், பழங்கால வாஸ்து சில்பத்தை நவீன தொல் பொருளியலுடன் ஒருங்கிணைப்பது அல்லது ராகங்களின் புதுமையான பதிவுகளை உருவாக்குவது, போன்றவை பாரம்பரியத்தை நவீனத்துடன் இணைத்து செறிவூட்டுகின்ற” பணியைத் தான் இது செய்யப் போகிறதாம்!

சித்த மருத்துவத்தைப் புறக்கணித்தது ஏன்?

நவீன மருத்துவத்தை யோகாவையும், ஆயுர்வேதத் தையும் கொண்டு மேம்படுத்துவார்களாம். அடடே! அப்படியும், அதில் சித்த மருத்துவம் எனப்படும் தமிழ் மருத்துவத்திற்கு இடமில்லை. ஆனால், இது தமிழ்ச் சங்கமமாம்! நம்புங்கள், வருண தர்மத்தினை வலி யுறுத்தும் வாஸ்துவை அறிவியல் அடிப்படையிலான தொல்லியலுடன் போட்டுக் குழப்புவதும், பழைமைக்குப் புதுமை கொண்டு முலாம் பூசுவதும் தான் நோக்கங்களாம்.

‘‘தேசபக்தி'' என்ற சொல்லின் மீது, மதவெறியை ஏற்றுவதும், பழைய பண்பாடு, பாரம்பரியம் என்ற பெயரில் ஒற்றை மதச் சாயத்தை ஊற்றுவதும்தான் வெகுமக்களை ஏமாற்றித் தன் வலையில் விழ வைக்க ஆர்.எஸ்.எஸ். கடைப்பிடிக்கும் தந்திரங்கள். 

ஆர்.எஸ்.எஸ்.சின் இந்தத் தந்திர வித்தையைச் செய்யத்தான் பல கோடி ரூபாய் செலவில் நம் மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கப் போகிறார்களா?

2500 பேருக்கும் பயிற்சி - 

யார் அப்பன் வீட்டுப் பணம்?

216 பேர் கொண்ட 12 குழுக்களாம். மாணவர்கள், ஆசிரியர்கள், கைவினைஞர்கள், கலைஞர்கள், தொழில் முனைவோர், கிராமக் கோவில் பூசாரிகள் என பல துறைகளிலிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டு சுமார் 2500 பேர் தமிழ்நாட்டிலிருந்து ஒரு மாத இடைவெளியில் (நவம்பர் 16 தொடங்கி டிசம்பர் 13 வரை பல்வேறு குழுக்களாகக் கிளம்பி, (ஒரு குழுவுக்குத் தலா எட்டு நாள்கள் என்ற அளவில்) காசிக்குச் செல்கிறார்களாம். அனைத்துச் செலவுகளையும் அரசு நிறுவனமான அய்.அய்.டி மேற்கொள்ளவிருக்கிறதாம்.

பண்பாட்டுப் பரிமாற்றம் என்பது உலகளவில் பல்வேறு நாடுகளிடையே வழக்கமாக நடக்கக்கூடிய ஒன்று தான். இந்தியாவைப் பொருத்தவரை, தென் னாட்டுக்கும், வடநாட்டுக்கும் பண்பாடு வேறு வேறு என்பதால்தான், இங்கே பண்பாட்டுப் பரிமாற்றம் என்ற ஒன்றே தேவைப்படுகிறது என்பதை இதன் மூலம் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், பண் பாட்டுப் பரிமாற்றம் என்ற பெயரில் முழுக்கவும் ஒரு மதச்சார்புடைய நிகழ்ச்சியாகவே இது திட்டமிடப் பட்டுள்ளதே! பண்பாடு என்றால் அது மதம் தானா? மதத்தைப் பண்பாடாகவும், கடவுள் நம்பிக்கையை (அவர்கள் சொல்லில் - ஆன்மீகத்தை) தத்துவமாகவும், புராண, இதிகாசங்களை வரலாறாகவும் காட்டிடும் ஆர்.எஸ்.எஸ். வித்தை தானே இது!

தமிழ்நாடு அரசின் கருத்து 

கேட்கப்படாதது ஏன்?

2500 பேர் செல்ல இருக்கிறார்களாமே! அவர்கள் எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட இருக் கிறார்கள்? அங்கே நடக்கவிருப்பது மறைமுக 

ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாமா? பங்கேற்பாளர்களை இந்துத்துவச் சிந்தனைக்கு மடைமாற்றும் முயற்சியா? யாருடைய இன்பச் சுற்றுலா இந்தப் பயணம்?

தமிழ்நாட்டின் பண்பாட்டுத் தொடர்பைப் பேசுவதற்கான நிகழ்வு என்றால், இதில் தமிழ்நாடு அரசு, அதன் பண்பாட்டுத் துறையின் பங்களிப்பு என்ன? கலந்து ஆலோசித்தனரா? தமிழ்நாடு அரசைத் தவிர்த்துவிட்டு, தமிழ்நாட்டின் பண்பாட்டைப் பேசப் போகிறோம் என்றால், அதன் உள்நோக்கம் என்ன? ஆளுநர் நடத்த விரும்பும் தனி ஆவர்த்தனத்திற்கு ‘‘அய்.அய்.டி. தாளமிடுகிறதா?'' 

ராஜ்பவனும், அய்.அய்.டி.யும், இருக்கும் சாலை சர்தார் படேல் சாலை என்பதால் ஏதோ, தனியாகத் தனது எதேச்சதிகார எல்லையில் இருக்கின்றது என தப்புக் கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறார் போலும் ஆளுநர்! 

இது தடுத்து நிறுத்தப்படவேண்டும். மக்கள் வரிப் பணம் இப்படியா செலவழிக்கப்படுவது?

திராவிட நாகரிகம் புறக்கணிப்பு - 

சங்கிகளின் சங்கமம்

சிந்துவெளி நாகரிகம் - திராவிட நாகரிகம் - கீழடி ஆய்வுகள் இவற்றைப் புறந்தள்ளிவிட்டு, இந்த சங்கமம் வெறும் சங்கிகளுக்கான சங்கமமா? என்ற கேள்வியே எழும்புகிறது.

விடையளிப்பார்களா?

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

5.11.2022


No comments:

Post a Comment