ஆன்லைன் சூதாட்ட ஒழிப்புச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காதது ஏன்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 20, 2022

ஆன்லைன் சூதாட்ட ஒழிப்புச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காதது ஏன்?

போட்டி அரசாங்கம் நடத்துகிறாரா, ஆளுநர்?

ஆன்லைன் சூதாட்டம் என்பது மக்கள் வாழ்வை சீர்குலைக்கிறது - உயிர்களைக் குடிக்கிறது. இதனை ஒழிக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு சட்டம் செய்தால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது சரியா? போட்டி அரசாங்கம் நடத்துகிறாரா ஆளுநர்? என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட தற்கொலைகளில் அதிகமாக இடம் பிடித்த தற்கொலை களுக்கான மூலகாரணம் ‘ஆன்லைன் சூதாட்டம்' என்பதேயாகும்.

இதற்காக திராவிடர் கழகமும், மனிதநேயமுள்ள பல அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் - ஊடகங்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று அதைத் தடை செய்தது முன்பு ஆண்ட அ.தி.மு.க. அரசு. 

அவசரக் கோலத்தில் அள்ளித் தெளித்த கதையாக அதை அமல்படுத்திய நிலையில், உச்சநீதிமன்றம் அதன் சட்ட ஓட்டைகளைச் சுட்டி அச்சட்டத்தை செல்லாது என்று தீர்ப்புக் கொடுத்து விட்டது. 

ஆன்லைன் சூதாட்ட ஒழிப்புச் சட்டம்

இந்த நிலையில் அரசியல் தலைமை மாற்றம் - பொதுத் தேர்தல் மூலம் ஏற்பட்டு தி.மு.க. ஆட்சி முதல் அமைச்சர் - மாண்புமிகு மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்களது தலைமையில் ஏற்பட்டு அது பலரும் பாராட்டும் நல்லாட்சியாக நடந்து வரும் நிலையில், இந்த ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டத்தை மீண்டும் வலுவான முறையில் இயற்றிட, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் சந்துரு அவர்களைக் கொண்டு ஓர்  ஆய்வுக் குழுவை நியமித்து, அவரது கருத்துரை - பரிந்துரையை அடிப்படையாகக் கொண்டு, அவசரச் சட்டம் (ordinance)  இயற்றப்பட்டு, பிறகு அடுத்துக் கூடிய தமிழ்நாடு சட்டப் பேரவைக் கூட்டத்தில் தடைக்கான தனி மசோதாவே ஒருமனதாக நிறை வேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பப்பட்டது; அங்கு அது கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இந்த மசோதா என்பது உயிர்களைக் காக்கும் முக்கியமான மசோதா, ஆன்லைன் சூதாட்டம் மூலம் கைப்பொருள் இழந்து உயிரை மாய்த்துக் கொள்ளும் வேதனையான நிலை அன்றாடச் செய்தியாகும் நிலையில், அதனைத் தடுத்து நிறுத்துவது சமூகப் பொறுப்புள்ள ஒரு மக்களாட்சியின் முக்கிய கடமை என்பதால் இப்படி ஓர் அவசரச் சட்டம், மசோதாவை நிறைவேற்றி அனுப்பினால் அதனை இத்தனை வாரங்கள் கிடப்பில் ஆளுநர் போட்டு வைத்துள்ளது எவ்வகையில் நியாயம்? கருணையில்லாத நடத்தை அல்லவா?

அரசமைப்புச் சட்டப்படி அவருக்குரிய கடமையை அவர் செய்யத் தவறுகிறார் என்பது இதன்மூலம் பகிரங்க மாய்த் தெரியவில்லையா?

இந்த மசோதாவையும் சேர்த்து 20 மசோதாக்கள் அவருடைய ராஜ்பவன் அலுவலகத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ளன!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட  அரசுக்கு அதிகாரமா? நியமனம் செய்யப்பட்ட ஆளுநருக்கு அதிகாரமா?

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மக்களாட்சியின் அமைச்சரவை, சட்டமன்றத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் விவாதித்து நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்ட மசோதாக்களை இப்படி ஒப்புதல் அளிக்காமலோ, திருப்பி அனுப்பாமலோ எதிர் வினையை ஆளுநர் ஆற்றுவது அரசமைப்புச் சட்டப்படி (இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறு 159இன்படி) அவர் எடுத்த உறுதிமொழிக்கு விரோதமான போக்கு அல்லவா?

ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்கள் எடுத்த உறுதிமொழியில் அரசமைப்புச் சட்டக் கடமைகளைச் செய்வேன் என்ற வரிகளைத் தாண்டி - சிறப்பான முக்கிய வாசகம்  இடம் பெற்றுள்ளது - என்ன தெரியுமா?

‘‘I will devote myself to the service and well being of the people of the state''

‘‘மாநில மக்களின் நல்வாழ்வுக்கும், தொண்டுக்கும் என்னை நான் ஒப்படைத்துக் கொள்வேன்."

போட்டி அரசாங்கம் நடத்துகிறாரா ஆளுநர்?

இந்த ஒரு மசோதாவைக் கிடப்பில்போட்டு, மக்கள் நலன் - உயிர் பாதுகாப்பு என்பதைக்கூட அவர் பார்க்க மறுத்து போட்டி அரசியல் செய்வது அரசமைப்புச் சட்டப்படி குற்றமாகாதா?

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு எதிராக ஆளுநர்கள் போட்டி அரசியல் நடத்த உரிமையற்றவர்கள் - அரசமைப்புச் சட்டப் பிரிவுகளில் இல்லாத அதிகாரத்தை இருப்பதாக எண்ணி, இப்படி நடப்பதற்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒன்று திரள, நாளும் பல நியாயங்கள் அழுத்தமாகின்றன.

மக்கள் சிந்திக்கட்டும்!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
20.11.2022


No comments:

Post a Comment