நவம்பர் 20 (1916) நீதிக்கட்சி பிறந்த நாள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 20, 2022

நவம்பர் 20 (1916) நீதிக்கட்சி பிறந்த நாள்!

சமூகநீதிக்கு எதிரான சக்திகளை முறியடிக்க உறுதி ஏற்போம்!


தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

நவம்பர் 20 மறக்கப்படவே முடியாத வரலாற்றுப் பொன்னாள். இந்நாளில்தான் (1916) பார்ப்பனரல்லாத மக்களின் ஓங்கி ஒலிக்கும் உரிமைச் சங்கநாதம் பிறப்பெடுத்த நாள்.

1912 ஆம் ஆண்டில் அதற்கான தொடக்கத்தைக் கொடுத்தவர் டாக்டர் சி.நடேசனார். மெட்ராஸ் யுனைட்டெட் லீக் (Madras United League)  என்று உருவாக்கப்பட்ட அமைப்புதான் பிறகு 1913 இல் திராவிடர் சங்கம் என்று நமது இனத்தின் அசல் அடையாளப் பெயர் பெற்றது. 

1916 நவம்பர் 20 இல் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற பரிணாமம் பெற்றது.  

1920 டிசம்பர் 20 அன்று பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கை பிரகடனப்படுத்தப்பட்டது.

சென்னை சென்ட்ரல் இரயில்வே நிலையத்தின் அருகில் உள்ள விக்டோரியா பப்ளிக் ஹாலில்தான் இதே நாளில் ஒரு மாநாடாக மலர்ந்தது.

அதன் தொடர்ச்சியாக ‘திராவிட மாடல் அரசு' - சமூகநீதிக்கான சரித்திர நாயகரான மாண்புமிகு மானமிகு மு.க.ஸ்டாலின் தலைமையில் கம்பீரமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் பிரசவ அறையான இந்த விக்டோரியா பப்ளிக் ஹால் ‘திராவிட மாடல்' அரசில் புதுப் பொலிவு பெறும் என்பதில் அய்யமில்லை.

டாக்டர் சி.நடேசனார், வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர் ஆகிய மூன்று பெரு மகன்கள்தான் இந்த அமைப்பை மக்கள் இயக்கமாக மாற்றி, 1920 இல் ஆட்சிக் கட்டிலிலும் அமர வைத்தனர்.

69 விழுக்காடு ஒதுக்கீட்டை  இன்று அனுபவிக்கி றோம் என்றால், அதற் கான அடிக்கல் நாட்டியது அந்த  நீதிக்கட்சியே!

தந்தை பெரியார் பார்வையில் நீதிக்கட்சி!

ஜஸ்டிஸ் கட்சி ஏற்பட்ட பிறகு அரசியல் துறையில் மற்ற மாகா ணங்களையெல்லாம் விட நம் மாகாணம் முற்போக்கடைந்தி ருப்பதோடு, சமூகத் துறையில் எந்த மாகாணமும் நினைப்ப தற்குக் கூட தைரியப்படாத பெருங்காரியங்களைச் சாதித் திருக்கின்றது என்பதை உண ருங்கள்.

அதற்கு உதாரணம் வேண் டுமானால், சமூகத் துறையில் கடுகளவு முற்போக்குக்கும் இடம் கொடுக்காதவர்களான - பிறவி எதிரிகளாய் இருக்கும் பார்ப்ப னர்கள் ஜஸ்டிஸ் கட்சியை வைவதும், தூற்றுவதும், அதை யொழிக்க வேண்டும் என்று சொல்லுவதுமான காரியங்களே போதுமானதாகும். ‘‘ஒரு வனுடைய யோக்கியதையைத் தெரிய வேண்டுமானால், அவனு டைய சிநேகிதனைப் பாருங்கள்'' என்று ஒரு பழமொழி உண்டு. ஆனால், நான் வேறு விதமாகச் சொல்லுகிறேன்.

‘‘ஒருவனுடைய யோக்கிய தையைப் பார்க்க வேண்டுமா னால் அவனுடைய விரோதியைப் பாருங்கள்'' என்று சொல்கிறேன். ஏனெனில் நல்லவர்களுடன் சிநேகமாக இருப்பது சுலபமான காரியம்; அதனால் எவனும் வீர னாகி விடமாட்டான். கெட்ட வர்களுடன் விரோதியாய் இருந்து கேட்டை ஒழிக்க முற் படுபவனே அதிக வீரனும், உண் மையான தொண்டனுமாவான்.

ஆகவே, இன்று தென் னாட்டுப் பார்ப்பனர்கள் தங்கள் துக்கத்திலும், வாழ்விலும், கல்வி யிலும், ஜபத்திலும், தபத்திலும், வேள்வியிலும், யாகங்களிலும் இடைவிடாமல் கோரும் காரியம் என்ன என்று பாருங்கள். ‘‘ஜஸ்டிஸ் கட்சி ஒழியவேண்டும், சுயமரியாதைக் கட்சி ஒழிய வேண்டும்'' என்பது போன்ற எண்ணம் அல்லாமல், வேறு என்ன என்று கேட்கிறேன்.

- தந்தை பெரியார்,

(‘குடிஅரசு', 7.4.1935)

பெண்களுக்கு வாக்குரிமை, பொது சாலைகளில், நீர் நிலைகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் புழங்கும் உரிமை, கல்லூரிகளில் பார்ப்பனர் அல்லாத மாண வர்கள் உள்ளே நுழைய கல்லூரி கமிட்டி, மருத்துவக் கல்லூரியில் சேர சமஸ்கிருதம் படித்திருக்கவேண்டும்  என்றிருந்த தடையை நீக்கிய ஆணை, அரசுப் பணியாளர் - தேர்வாணையம் உருவாக்கல், தேவதாசி முறை ஒழிப்பு, இந்து சமய அற நிலையத் துறை உருவாக்கம் என்று எண்ணிலா சமூக மாற்றத்திற்கான சாதனை சட்டங்களை உருவாக்கியதுதான் நீதிக்கட்சி.

அண்ணா சொன்னார்

அண்ணா அவர்கள் முதலமைச்சராக வந்த நிலையில், 18 ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்து விட்டீர்களே என்று செய்தியாளர்கள் கேட்டபோது, முதலமைச்சர் அண்ணா மிக அழகாக வரலாற்று ரீதியாகச் சொன்னார்; ‘‘நீங்கள் சொல்லுவது தவறு; 1916 இல் தோற்றுவிக்கப்பட்ட நீதிக்கட்சியின் தொடர்ச்சி தான் எங்கள் ஆட்சி'' என்று சொன்னாரே!

இன்றைக்குப் பீடுநடை போடும் ‘திராவிட மாடல்' ஆட்சியும் அதன் தொடர்ச்சியே!

சமூகநீதிக்குப் பெரும் சவால்கள் ஏற்பட்டுள்ள இந்தக் காலகட்டத்தில், 1916 நவம்பர் 20 இல் ஊன்றப்பட்ட விதையின் வீரமும், விவேகமும் கலந்த விளைச்சல் தேவைப்படுகிறது.

அவர்கள் தேடிக் கொடுத்த செல்வத்தைச் சூறையாட ஒரு  கூட்டம் ஆட்சி, அதிகாரப் பீடத்தில் அமர்ந்து ஆட்டம் போடுகிறது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முதல் சட்டத் திருத்தத்தை மக்களைத் தட்டி எழுப்பி, போராடி எப்படி தந்தை பெரியார் உருவாக்கிக் கொடுத்தாரோ, அதேபோல, வீதிமன்றங்களில் களம் அமைத்துப் போராடி, அதற்காகக் கொடுக்கவேண்டிய விலையைக் கொடுத்து, சமூகநீதியை மீட்டெடுக்க இந்நாளில் உறுதி ஏற்போம்!


கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
20.11.2022

No comments:

Post a Comment