தமிழ் - காசி சங்கமம் - சிந்தனைக்கு! காசிக் கோயிலில் காந்தியார் பட்ட அவமானம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 24, 2022

தமிழ் - காசி சங்கமம் - சிந்தனைக்கு! காசிக் கோயிலில் காந்தியார் பட்ட அவமானம்!

நிகும்பன்

காந்தி என்று கூறிய உடன் இந்திரா காந்தி-அல்லது - அவரது அருமந்தப் புதல்வர் ராஜீவ் காந்தி - இந்தக் காந்திகளைத்தான் இன்றைய இளைய தலைமுறைகளுக்குத் தெரிகிறது. இது வியப்பூட்டக் கூடியதுமல்ல. காங்கிரசிலுள்ள மிகப் பெரிய பீரங்கிகளே தேசப்பிதா எனப் போற்றப் படும் 'மகாத்மா' காந்தியை வசதியாக மறந்து கொண்டு வருவது தான் வேதனை கலந்த வேடிக்கை. 

காந்தியார் அவர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தை அவருக்கே உரித்தான "அந்த ராத்மா"வின் கட்டளைகளுக்கிணங்க "திரிகரண சுத்தி"யோடு பாடுபட்டவர் என்ற போதிலும் மிகப்பெரிய வர்ணாஸ்ரம காவலராகவே வாழ் நாள் முழுதும் இயங்கினார் என்பதும், அவர் இராம இராச்சியம் தோற்றுவிக்கப்பட வேண்டு மெனவே விரும்பினார் என்பதும் நாட்டுமக்கள் அனைவருக்கும் தெரியும். ஒழுக்க சீலர் மட்டு மல்ல - நிறைவு கொண்ட பக்திமான். ஆச்சார அனுஷ்டானங்களை கண்டிப்பாக கடைப்பிடித்து ஒழுகிவந்த “புனித” ஹிந்து. ஆனாலும் மனச் சாட்சிக்கு மதிப்பளிக்கும் மாபெரிய கண்ணிய வான்.

காந்தியாருக்கு ஏமாற்றம்

ஒரு சமயம் காந்தியார் - மரியாதைக்குரிய தேசப்பிதா அவர்கள் சுவாமி தரிசனத்துக்காக காசி விசுவநாத ஆலயத்துக்குப் போகிறார். இனி அவருடைய மொழியிலேயே அவர் அங்கு கண்டனவற்றையும், அவர் அடைந்த மனக் குமுறல்களையும் காண்போம் நண்பர்களே.

“நான் கண்டவை எனக்கு மன வேதனையைத் தந்தன.' 

“நான் அடைந்த ஏமாற்றம், நான் எதிர் பார்த்ததைவிடப் பன்மடங்கு அதிகமாயிருந்தது".

காந்தியார் ஆழமான பக்தி கொண்ட ஹிந்துவாக இருப்பினும், பல பெரியவர்கள், மதம் கடவுள் காரணமாக பல்வேறு புரட்டுக்களை அவ்வப்போது குறிப்பிட்டிருப்பவைகளையும், புண்ணிய ஸ்தலங்கள் எனப்படுபவையில் நடைபெறும் அக்கிரமங்கள், ஆபாசங்களை அம்பலப்படுத்தியிருப்பதையும் அறிந்தோ என்னவோ, காசிக்குப் புறப்படு முன்னரே அங்கு சிலபலவற்றை எதிர்பார்த்துத்தான் சென்றுள்ளார்.

ஆகவேதான் நான் எதிர்பார்த்ததைவிடப் பன்மடங்கு ஏமாற்றமடைந்தேன்' எனக்கூறுகிறார்.

சரி;  அவர் கூறுவதை மேலும் காண்போம். குறுகலான வழுக்கும் ஒரு சந்தின் வழியாகவே கோவிலுக்குப் போக வேண்டியிருந்தது.

"அங்கு அமைதி என்பதே இல்லை.”

"ஈக்கள் ஏகமாக மொய்த்தன".

"கடைக்காரர்களும், யாத்ரீகர்களும் போட்ட சப்தம் சகிக்க முடியாததாய் இருந்தது.''

"நான் கோவிலுக்குள் போனதும் வாசலில் அழுகி நாற்றமெடுத்த பூக்குவியலே எனக்கு வரவேற்பளித்தது"

''ஞானவாவி (ஞானக்கிணறு) பக்கத்தில் போனேன். அங்கே கடவுளைக் காணலாம் என்று தேடினேன். 

ஆனால், நான் காணவில்லை." 

பண்டாவுக்குக் கோபம்

ஆகையால் எனக்கு மனநிலை நன்றாக இல்லை. ஞானவாவியைச் சுற்றிலும்கூட ஆபா சமாகவே இருந்தது. தட்சணை கொடுக்கவே எனக்கு விருப்பமில்லை. ஆகையால் ஒரு தம்படி கொடுத்தேன்.

அங்கே இருந்த பண்டாவுக்குக் கோபம் வந்தது. அந்தத் தம்படியை வீசி எறிந்து விட்டார்.

"'இந்த அவமரியாதை உன்னை நேரே நரகத்திற்குத்தான் கொண்டுபோகும்' என்று கூறி என்னை சபித்தார்."

கேளுங்கள் தோழர்களே! கேளுங்கள் 'மகாத்மா' காந்தி அவர்களை- மரியாதைக்குரிய மாபெரிய தலைவனை, தட்சணையாக ஒரு தம்பிடியை மட்டுமே கொடுத்தார் என்பதற்காக, பக்தர்கள் போடும் பிச்சைக் காசுகளை பொறுக்குவதற்காகவே கோவில் பிரகாரங் களில் காத்துக்கிடக்கும் ஒரு 'பரதேசிப் பண்டா' சாபம் கொடுக்கிறான் சாபம்.

இந்த நிகழ்ச்சியை படித்த மாத்திரத்திலேயே, அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள் நம் மனக்கண்முன் தெரிகிறாரா இல்லையா? ஆச்ச ரியம் அதுவல்ல நண்பர்களே! காந்தியாருக்கே அந்தச் சமயத்தில் பெரியார்தான் தோன்றியிருக்கிறார் - அதிசயத்தைப் பாருங்கள்- காந்தி வாயிலாகவே கேட்டு இன்புறுங்கள்.

பண்டாவிடம் காந்தியார் கூறுகிறார்.

"மகாராஜ்! என் விதி எப்படியாயினும் சரி, ஆனால் இப்படியெல்லாம் பேசுவது உங்களைப் போன்றதோர் வகுப்பினருக்குத் தகாது.

விருப்பமிருந்தால் அந்தத் தம்படியை எடுத்துக் கொள்ளுங்கள், இல்லாவிட்டால் அதையும் நீங்கள் இழந்து விடுவீர்கள்” என்றேன். 

விந்தியத்தை ஊடுருவியது

வணக்கத்துக்குரிய தந்தை பெரியார் அவர்கள் சதா சர்வகாலமும் முழக்கமிட்டு வந்த சுயமரி யாதை கொள்கையின் தாக்கம் விந்தியத்தை ஊடுருவி காந்தியாரின் உள்ளத்திலும் பாய்ந் துள்ளது 'ஸ்பஷ்டமாக'த் தெரிவதைப் பார்த் தீர்களா?

காந்தியாரின் நகைச்சுவையையும் அருள் கூர்ந்து கவனியுங்கள்.

பண்டாவுக்கு கொடுத்தது ஒரு தம்படி - ஆனால் அவரை கூப்பிடுவதோ மகாராஜ்!

பண்டா கூறுகிறான்:-

"போய்த் தொலை - உன் தம்படி எனக்கு வேண்டாம்." என்று கூறி தொடர்ந்து வசை மாரி பொழிந்தான்.

"தரையில் கிடந்த தம்படியை எடுத்துக் கொண்டு நான் நடக்க ஆரம்பித்தேன்."

“பிராமணர் ஒரு தம்படியை இழந்தார். எனக்கு ஒரு தம்படி மிச்சம் என்று என்னைப் பாராட்டிக் கொண்டேன்.

ஆனால் மகாராஜ் அந்தத் தம்படியைவிட்டு விடக்கூடியவர் அல்ல.

என்னைத் திரும்பக் கூப்பிட்டார்.

'அதுசரி, அந்தத் தம்படியை இங்கே கொடுத்து விட்டுப்போ! 

உன் தம்படியை வாங்கிக் கொள்ள நான் மறுத்துவிட்டால், அது உனக்குக் கெடுதல் ஆகி விடும்' என்றார்.

நான் ஒன்றும் சொல்லாமல், தம்படியைக் கொடுத்துவிட்டேன்.

அப்புறம் ஒரு முறை பெருமூச்சு விட்டுக் கொண்டு அப்பால் போய்விட்டேன்".

இவ்வாறாக காந்தியார் தனது சுயசரிதையில் எழுதுகிறார்.

ஒரு தம்படி கொடுத்து விட்டானே பாவி என ஆக்ரோஷம் கொண்டு 'நீ நேரே நரகத்துக்குத் தான் போவாய்' என ஆபாசமாக சாபம் கொடுத்த அதே பண்டா - அந்தக் காசையும் திரும்ப எடுத்துக் கொண்டு காந்தியார் போக எத்தனிக் கவும், நான் உன்னிடம் பெற்றுக்கொள்ளாவிட்டால் உனக்குக் கெடுதல் சம்பவிக்கும் என நைசாகப் பேசி தம்படியைத் திரும்பப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கிறான்.

பரந்து விரிந்து கிடக்கும் ஒரு மாபெரிய தேசத்தின் மரியாதைக்குரிய தலைவரையே ஒரு சர்வ சாதாரணமான கோவில் பண்டா எவ்வளவு அலட்சியமாகவும், ஆணவத்தோடும் நடத்து கிறான் என்பதையும், சில்லரைக் காசுகளை பொறுக்கித் தின்ன எவ்வளவு பேர் உள்ளனர் என்பதையும் நமது  நண்பர்கள் புரிந்துகொள்ள வேண்டியே இதை எழுதினேன்.

இம்மாதிரியான பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு அனுபவங்களைக் கண்டறிந்ததால் தான் 'கோவில்கள் எல்லாம் விபச்சார விடுதிகள்', எனக் காந்தியார் கூறினார் போலும்.

No comments:

Post a Comment