வாழ்வின் சரியான "ஊதியம்", "சேமிப்பு" எது? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 5, 2022

வாழ்வின் சரியான "ஊதியம்", "சேமிப்பு" எது?

 வாழ்வின் சரியான "ஊதியம்", "சேமிப்பு" எது?

சமூகத்தில் வாழும் ஒவ்வொருவரும் சமூக நல்லிணக்கம், சமூகச் சார்பு, சமூகத்தின் ஒட்டு மொத்த நலன் - இவைகளைப் பற்றி அக்கறையும், பொறுப்பும் உடையவர்களாக தமது வாழ்க்கையை ஆக்கிக் கொள்வதே சிறந்த மனிதவாழ்வு. அதனால் ஆங்கிலத்தில் மனிதர்களை 'சமூகப் பிராணிகள்' - 'Social Animals' என்றே குறிப் பிடுவர்; 'நான் தனி மனிதன்தானே -  நான் எதற்கு மற்றவர்களைப்பற்றிக் கவலை கொள்ள வேண்டும்' என்று நினைப்போர் எவரும் சுயநலப் பிண்டங்கள் மாத்திரம் அல்ல; பொறுப்பற்ற தனிமனித இயந்திரங்களாகும்.

மறைந்தும் மறையாது பலருடைய நினைவில் வாழும் நம் திருக்குறளார் வீ. முனுசாமி அவர்கள் எதையும் நகைச்சுவையுடன், மற்றவரின் வயிறு குலுங்க குலுங்கச் சிரிக்க வைத்து, சொல்லுவதோடு சிந்திக்கவும் வைப்பார்;

எனது மாணவப் பருவத்தில் கடலூரிலிருந்து மிக நெருக்கமாகப் பழகிய பாசத்துக்குரிய பெருமகனார்!

அவர் சொல்லுவார்; "சிலர் சொல்கிறார்கள் - என் மகன் அப்படியே ஆபிசுக்கு போவான் - அப்படியே திரும்பி வருவான் - வீட்டிலே சாப்பிட்டு உறங்குவான் - யாரிடத்திலும் எதையும் பேச மாட்டான்; அவ்வளவு பரம சாது; தானுண்டு, தன் வேலை உண்டு என்று அவன் 'சிவ'னேன்னு கிடப்பான் - அவ்வளவு தங்கமான பிள்ளை" என்பாராம் ஒரு தந்தை!

"அவரைப் பார்த்து நான் கேட்டேன், அட மனுஷா, உம் பிள்ளைக்கும், பக்கத்திலே போகிற மிருகத்திற்கும், - பூனைக்கும், நாய்க்கும், என்ன வித்தியாசம்; அதுவும்தான் சாப்பிடுகிறது, இன விருத்தி செய்யுது; தூங்குகிறது - ஆறறிவு படைத்த மனிதன் என்பதற்கும், மிருகங்களுக்கும் உனக்கும் என்ன வேறுபாடு?

இயந்திரம்கூட பொத்தானை போட்டால் இயங்குகிறது; பிறகு அப்படியேதான் கிடக்குது!

அது மாதிரியா வாழ்றது?" என்று சொல்வார்

புரட்சிக் கவிஞர் அழகாக சில வரிகளில் சொல்வார் -

"தன் பிள்ளை, தன் வீடு, என்று மட்டும் இருப்பவன் உள்ளம் 'கடுகு உள்ளம்'" என்பார்.

சமூக வாழ்வில் மற்ற மனிதர்களுக்கு உதவ வேண்டிய நேரத்தில் முடிந்த அளவுக்கு உதவுவது, அவர்களது கஷ்ட நஷ்டங்களைக் கேட்டு ஆறுதல் கூறுவது, சுக துக்கங்களில் பங்கேற்று அவர்களை அந்த பாதிப்பிலிருந்து காப்பது - இவைகள் அப்பணிகளால் பயன் பெறுவோரைவிட, செய்பவனுக்கு உண்மையான மகிழ்ச்சி, மன அமைதி, உண்மைப் பெருமிதம், ஏற்படுமே!

அந்த ஒன்றுக்காகவாவது மனிதர்கள் பிறருக்கு உதவுதல் என்ற தொண்டற மனப்பான்மையைப் பற்றிக் கொண்டு வாழ முயல வேண்டாமா?

இப்படி சமூகம் சார்ந்த பணித்தோழனாக, தொண்டனாக வாழும் மனிதனின் வாழ்வே உண்மையில் அர்த்தமுள்ள வாழ்வு; அன்பின் பெருக்கமாகும் - அறத்தின் வெளிப்பாடாகும்!

அப்படிப்பட்ட சம்பாதனை தான் பெருமைக்குரிய 'ஊதியம்'

ஊதியம் என்பது வெறும் ரூபாய் நோட்டுக்களை எண்ணிப் பார்ப்பதில்லை (அதுகூட இப்போது டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருவதால், கையால் எண்ணப்படும் கரன்சிகளே குறைந்து விட்டதே!)

நம் வாழ்வில் நம் சம்பாதனைகளிலேயே சிறந்த சம்பாதனை - நாணயமும், ஒழுக்கமும், உண்மைப் பாசமும் உள்ள நண்பர்கள் சிலரையாவது பெறுவதாகும்.  அவர்களது நட்பு என்ற ஊன்றுகோல் முதுமையில் நம்மைத் தள்ளாடி கீழே விழாமல் பாதுகாக்குமே!

நண்பர்கள் பலர் திடீரென்று வந்தால் - நட்பு பீறிட்டால் - நம்பி மோசம் போகாமல் எடை போட்டு, உரைத்துப் பார்த்து உண்மையானவர்கள் என்றால் பாதுகாத்து போற்றி வளருங்கள்.

அதைவிட மனித வாழ்வில் நல்ல சேமிப்பு - ஈவு வேறு ஏதாவது உண்டா நண்பர்களே - சிந்தித்துத் தேடுங்கள் நண்பர்களை?


No comments:

Post a Comment