சாவி உண்டு - வீடு இல்லை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 5, 2022

சாவி உண்டு - வீடு இல்லை!

நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த 2014 ஆம் ஆண்டிற்குப் பிறகு 'மேக் இன் இந்தியா', 'ஸ்டேண்ட் அப் இந்தியா', 'ஸ்டார் அப் இந்தியா' என பல மாயாஜால திட்டங்களை அறிவித்தார். இந்த திட்டங்களால் 2022 ஆம் ஆண்டு இந்தியா வல்லராசாக மாறிவிடும் என்று 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 இந்திய விடுதலைவிழா கொண்டாட்டத்தின் போது டில்லி செங்கோட்டையில் கொடி ஏற்றிவைத்து முழங்கினார். 

 ஆனால் 2019 ஆம் ஆண்டுவரை அவர் கூறிய அனைத்துத் திட்டங்களும் முழுமையான தோல்வி அடைந்தன. 'மேக் இன் இந்தியா' என்ற திட்டத்தின் கீழ் சீனாவில் இருந்து அனைத்துப் பொருட்களும் கொண்டு வரப்பட்டன. 'மேக் இன் இந்தியா' என்ற திட்டத்தின் 'லோகோவான' இயந்திரச் சிங்கத்தின் பாகங்கள்கூட சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. 

2022ஆம் ஆண்டு முடியப் போகிறது. இந்தியா பட்டினிப் பட்டியலில் 107 ஆம் இடத்திற்கு பின் தங்கி விட்டது. இந்தியாவைவிட பெரும் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் இலங்கை, பாகிஸ்தான் வங்கதேசம் போன்ற நாடுகள்கூட முன்னணியில் வந்துவிட்டன. 

தான் அறிவித்த அனைத்துத் திட்டங்களும் தோல்வியில் முடிந்ததைக் கண்ட மோடி தந்திரமாக மக்களின் முக்கிய தேவைகளில் ஒன்றான குடியிருப்புத் திட்டத்தைக் கையில் எடுத்தார். 

 அதாவது 'பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா' என்ற பிரதமர் வீட்டு வசதி திட்டம்; உண்மையில் இந்தத் திட்டம் காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்பட்டது, "இந்திராகாந்தி அனைவருக்கும் வீடு" என்ற திட்டத்தின் பெயரை மட்டுமே மாற்றினார் மோடி.   இதிலும் ஒன்றிய அரசின் பங்கு மிகவும் சொற்ப அளவில் மட்டுமே - மற்ற செலவுகள் அனைத்தையும் மாநில அரசுகள் தான் கொடுக்கும். 

இந்தத் திட்டத்தின் கீழ் ஊழல் மலிந்துவிட்டது. திட்டத்திற்கு ஒப்புதல் பெறுவது முதல் வீடு கையில் வந்து கிடைக்கும் வரை எங்கும் முறைகேடுகள், இந்த ஊழல் காரணமாக நாடு முழுவதும் 60க்கும் மேற்பட்டோர் தம் உயிர்களை மாய்த்து கொண்டனர்.  ஆனால் இது பற்றி எல்லாம் சிறிதளவு கூட அக்கறை செலுத்தாமல் தொடர்ந்து தற்பெருமை பேசுவதையே தொழிலாக கொண்டு பேசி வருகிறார் - பிரதமர் மோடி.  

மத்தியப் பிரதேசத்தில் "பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா"வின் கீழ் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பயனாளிகளுக்கு வீடுவழங்கும் திட்ட விழா நடைபெற்றது, போபாலில் நடைபெற்ற இந்த   விழாவில் மோடி காணொலி மூலம் கலந்து கொண்டார். மாநில முதலமைச்சர் சிவ்ராஜ்சிங் சவுகான் நேரடியாக கலந்துகொண்டு 100 பேருக்கு வீடுகளின் சாவியை ஒப்படைத்தார்.   இதற்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பயனாளிகள் விழாவிற்கு வந்திருந்தனர். விழாவில் மோடி எப்போதும் போல் மாயாஜால பேச்சுக்களைக் கட்டவிழ்த்து விட்டார்.  இந்த நிலையில் வீடுகளைப் பெற்ற வர்கள் "வீடுகட்ட பணம் தருவதாக கூறினார்கள் அதனால் இங்கு வந்தோம்" என்று கூறினார்கள். 

இதனை அடுத்து வீடுகட்டி வழங்கப்பட்டதாக கூறப்பட்ட ஊர்களுக்குச் சென்ற போது  மோடியால் வழங்கப்பட்ட வீடுகள் கட்டப்பட்டதற்கான அடை யாளங்களே இல்லை. கண்டேல்வால் மாவட்டத்தில் பல வீடுகள் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு கொடுக்கப் பட்டதாகக் கூறப்பட்ட முகவரியில் வீடுகளுக்கு பதில் முள் மரங்கள் மற்றும் இறந்த விலங்குகளை வீசும் பகுதிகளே அங்கு காணப்பட்டன. 

 2021 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் நிறுவனத்தின் டிரோன் எனப்படும் தானியங்கி பறக்கும் காமிரா பொருத்திய கருவிகள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றைத் திறந்த போது மோடி பேசியதாவது, "இனிமேல் நான் திட்டத்தைத் திறந்து வைக்க வந்து பயனாளிகளைப் பார்த்து விவரம் கேட்க மாட்டேன்.  முதலில் டிரோன்களை அனுப்புவேன் - அது அனைத்தையும் படம் பிடித்து எனக்குக் கொடுத்து விடும், அதிகாரிகளுக்கு தெரியாமலேயே நான் திட்டங்களின் அனைத்து விவரங்களையும் சேகரித்து விடுவேன். இதுகுறித்து அதிகாரிகளிடம் நான் கேட்கும் போது அவர்கள் பொய் பேசவே முடியாது இதுதான் மோடி" என்று பெருமை பேசினார். 

 ஆனால் இன்று 100 பேருக்கு வீடுகள் கட்டி முடித்து விழா எடுத்து அனைவருக்கும் வீட்டுச் சாவிகளை வழங்கிய நிகழ்வில் 75 வீடுகள் காணாமல் போய் உள்ளன. அதாவது கட்டாத வீடுகளுக்கு விழா நடத்தியுள்ளனர். மக்களையும் பொய் சொல்லி அழைத்து வந்துள்ளார்கள்.

எப்படி இருக்கிறது? ஊழலற்ற ஆட்சி என்று மார்புப் புடைத்துத் தம்பட்டம் அடிக்கும் ஒன்றிய அரசின் இந்த வீடு கட்டும் திட்டம் ஊழலின் ஊற்றுக் கண்ணாக அல்லவோ இருக்கிறது!

இந்த மாய்மாலம் இன்னும் எவ்வளவுக் காலத்திற்கோ!   

No comments:

Post a Comment