விடுதலைச் சிறுத்தைகளின் சீற்றம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 9, 2022

விடுதலைச் சிறுத்தைகளின் சீற்றம்!

எழுச்சித் தமிழர் மானமிகு தொல். திருமாவளவன் அவர்களின் தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகளின் கட்சி அரசியல் கட்சியாக இருந்தாலும் அடிப்படையில் சமூகக் கொள்கையை தலைமீது சுமந்து பயணிக்கும் அமைப்பாகச் செயல்படுவது மிகவும் பாராட்டத்தக்கது.

சனாதன எதிர்ப்பு மாநாட்டை நடத்திக் காட்டியதிலிருந்து, ஒரு குலத்துக்கொரு நீதி பேசும் மனுதர்மத்தின் சீழ் பிடித்த சுலோகங்களைத் தொகுத்து ஒரு சிறு நூலாக வெளியிட்டு மக்கள் மத்தியில் விலையில்லா நூலாகப் பரப்பிய செயல் மிகவும் போற்றத் தகுந்தது - வரவேற்கத்தகுந்தது.

மனுதர்மம் என்றால் மிகச் சிறந்த நூல் போலவும், மதிக்கத் தகுந்தது போலவும் தங்களுக்குள்ள விளம்பர சக்தியையும், பாமர மக்களின் பக்தி உணர்ச்சியையும் பயன்படுத்தி மக்கள் மத்தியில் ஒரு மாயையே உருவாக்கி வைத்துள்ளனர்.

தெற்கே தந்தை பெரியாரும், வடக்கே அண்ணல் அம்பேத்கரும் மனுதர்மத்தின் பார்ப்பனீய அடிப்படையைத் தோலுரித்துக் காட்டி மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தினர்.

இரு இயக்கங்களும் மனுதர்ம எரிப்புப் போராட்டத்தையும் நடத்திக் காட்டியுள்ளன.

மனு என்ன சொன்னாரோ, அது மருந்தாம். பதினெட்டு ஸ்மிருதிக்கு  விரோதமாய் மற்ற பதினேழு ஸ்மிருதிகளும் ஒரே வாக்காய் சொல்லியிருந்தாலும், அது ஒப்புக் கொள்ளத்தக்கதன்று. மனு ஸ்மிருதிக்கு விரோதமான ஸ்மிருதி புகழடையாது என்கிறது மனுதர்ம சாஸ்திரத்தின் பீடிகை.

அப்படி மனுதர்ம சாஸ்திரம் என்னதான் கூறுகிறது? பிறப்பின் அடிப்படையில் பேதம் என்பதுதான் அதன் அடிநாதம்!

"அந்தப் பிரம்மானவர் இந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காக தன் முகம், தோள், தொடை, பாதம் இவைகளினின்று பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர வருணத்தார்க்கு இம்மைக்கும், மறுமைக்கும் உபயோகமான கருமங்களைத் தனித்தனியே படைத்தார்."

(மனு அத்தியாயம் 1 சுலோகம் 87).

பிர்மாவின் பாதங்களிலிருந்து படைக்கப்பட்டதாகக் கூறும் மனு சூத்திரர்கள் யார் என்று பட்டியல் போட்டுக் காட்டுகிறது.

சூத்திரன் என்றால் ஏழு வகைப்படும். 1) யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன், 2) யுத்தத்தில் கைதியாகப் பிடிக்கப்பட்டவன், 3) பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழியஞ் செய்கிறவன், 4) விபச்சாரி மகன், 5) விலைக்கு வாங்கப்பட்டவன், 6) ஒருவனால் கொடுக்கப்பட்டவன், 7) தலைமுறை தலைமுறையாக ஊழியம் செய்கிறவன் (மனுதர்மம் அத்தியாயம் - 8 சுலோகம் - 415)

இவ்வளவுக் கேவலமாக மனிதர்களை ஏற்றத் தாழ்வுடன் ஒரு கடவுள் படைத்தான் என்று எழுதுவதற்கு மனு என்பவன் ஒருவன் இருந்தான் என்றால் அவனைவிடக் கேடு கெட்டவன், நாசகாரன் வேறு ஒருவன் இருக்கமுடியுமா?

இந்த நாசகார அநாகரிகத்தைத் தூக்கிப் பிடிக்க இன்றைக்கும் மனித உருவில் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் மன்னிக்கத்தக்கவர்களா? மனிதர்களாகக் கருதத் தக்கவர்களா? என்பதுதான் முக்கிய கேள்வி.

மாதர்கள் பெரும்பாலும் விபச்சார தோஷமுள்ளவர் களென்று அனேக சுருதிகளும், சாஸ்திரங்களிலும் சொல்லப்பட்டிருக்கின்றன (மனு அத்தியாயம் - 9  சுலோகம் - 19).

மனுதர்மத்தை இன்றளவும் தூக்கிப் பிடிப்போர் யாராக இருந்தாலும் அவர்கள் வீட்டுப் பெண்களையும் சேர்த்துதானே விபச்சாரத்தோஷம் உள்ளவர்கள் என்று மனுதர்ம சாஸ்திரம் கூறுகிறது.

பார்ப்பனப் பெண்களையும் சேர்த்துத் தானே மனு இப்படிக் கேவலப்படுத்துகிறது.

அய்ந்தாம் வருணம் என்று கூறப்படும் பஞ்சமர்களைக் கணக்கிலேயே எடுத்துக் கொள்ளவில்லையே மனுதர்மம்.

கொலை செய்வதில் கூட தண்டனையில் வேறுபாடு உண்டு.

கொலை செய்யும் பிராமணனுக்குத் தலையை முண்டகம் செய்வது தண்டனையாகும். மற்றவருக்குக் கொலைத் தண்டமுண்டு. (மனு அத்தியாயம் - 8 சுலோகம் 379).

தன்மானமுள்ள பார்ப்பனர் அல்லாத எவனும் இந்த மனுதர்மத்தை ஏற்றுக் கொள்ள முடியுமா?

அதனால் தான் தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் மனு தர்மத்தைக் கொளுத்திச் சாம்பலாக்கும் போராட்டத்தை நடத்திக் காட்டினார்கள்.

தந்தை பெரியார் மறைவிற்குப் பிறகும்கூட தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் வழிகாட்டுதல்படி 1981 (மே 17) ஒரு முறையும், 2019 (பிப்ரவரி 7)இல் இன்னொரு முறையும் திராவிடர் கழகத்தின் சார்பில் மனுதர்ம சாஸ்திரம் கொளுத்தப்பட்டது.

1981இல் நடைபெற்ற மனுதர்மம் எரிப்புப் போராட்டத்தில் நாடெங்கும் பெண்களே தலைமையேற்று நடத்தி சிறை புகுந்தனர்.

மனித உரிமை, சுயமரியாதை பேணும் தனி மனிதனாக இருந்தாலும் சரி அமைப்பாக இருந்தாலும் சரி, இந்தக் காரியத்தைச் செய்தே ஆக வேண்டும்.

இந்த வகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இலட்சக்கணக்கில் மனுதர்ம சாஸ்திரத்தின் அவலங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல சிறு வெளியீடாகக்  கொண்டு சென்றது பெரிதும் போற்றத் தகுந்தது.

அரசியலில் ஈடுபட்டாலும் இந்த செயலை செய்வதற்குத் துணிவும், அறிவும் தேவை, பாராட்டுகிறோம் - வாழ்த்துகிறோம். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை மூன்றாவது குழல் துப்பாக்கி என்று திராவிடர் கழகத் தலைவர்  சொன்னது எத்தகைய தொலைநோக்கு!

வாழ்க பெரியாரியம் - வாழ்க அம்பேத்கரியம்!


No comments:

Post a Comment