அரசுக்கு உச்ச நீதிமன்றம் தாக்கீது
புதுடில்லி, நவ 6 மகளிர் இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் மீண்டும் தாக்கல் செய்யப் படுமா என்பது குறித்து ஒன்றிய அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா, கடந்த அய்க்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2010ஆம் ஆண்டு மாநிலங்களவையில் நிறைவேற் றப்பட்டது. பின்னர் 2014இல் ஆட்சி மாற்றத்திற்கு பின் இந்த மசோதா காலாவதியானது. இதன் பின் மீண்டும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப் படாமலேயே உள்ளது. இந்நிலையில், மகளிர் இடஒதுக்கீடு மசோ தாவை மீண்டும் தாக்கல் செய்யக் கோரி இந்திய பெண்கள் தேசிய கூட்டமைப்பு எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தது.
இந்த வழக்கு விசாரணையில் மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண், ‘‘நாடு சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகள் ஆன பிறகும் கூட பெண்களுக்கு நியாயம் கிடைக்க வில்லை. நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவீதம் பெண்கள் பிரதிநிதித்துவம் செய்கிறார்கள். ஆனால், நாடாளுமன்றத்தில் அவர்களின் பிரதிநிதித்துவம் வெறும் 14% மட்டுமே,’’ என்றார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், ‘இது ஒரு முக்கிய மான பிரச்சினை. எனவே இந்த விஷயத்தில் ஒன்றிய அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து 6 வாரத்தில் பதிலளிக்க வேண்டும்,’ என தாக்கீது பிறப்பித்து உத்தரவிட்டனர்.
சீத்தாராம் யெச்சூரி கேள்வி
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம்யெச்சூரி, 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யாமல் எட்டு ஆண்டு காலத்தை வீணடித்த ஒன்றிய அரசு, 10 கோடிப் பேருக்கு வேலை, 100 ஸ்மார்ட்சிட்டிகள் என ஏமாற்றும் பட்டியலில் இட ஒதுக்கீட்டையும் சேர்த்து விட்டதா எனக் கேள்வி யெழுப்பியுள்ளார்.
No comments:
Post a Comment