மாநில கட்சிகளைக் கவிழ்க்கச் சதி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 5, 2022

மாநில கட்சிகளைக் கவிழ்க்கச் சதி!

பா.ஜ.க.மீது சந்திரசேகர ராவ் குற்றச்சாட்டு

அய்தராபாத், நவ. 5- ஆந்திரா, தெலங்கானா, டில்லி மற்றும் ராஜஸ்தான் ஆகிய 4 மாநில ஆட்சிகளை கவிழ்க்க சதி நடக்கிறது. இதற்கு பாஜகதான் காரணம் என தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் சாடியுள்ளார்.

அய்தராபாத்தில் தெலங்கானா பவனில் செய்தியாளர் களிடம் பேசிய முதலமைச்சர் சந்திரசேகர ராவ் கூறிய தாவது:

தெலங்கானாவில் ஆளும் கட்சியை சேர்ந்த 4 சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க பாஜக வினர் முயற்சித்த காட்சிப் பதிவுகளை பார்க்கும் போது நம்நாட்டின் ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப் பட்டதைப் போல் உணர்ந்தேன். இந்த காட்சிப்பதிவு அனைத்து மாநில முதலமைச்சர்கள், நீதிபதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். அவர்கள் இந்த காட்சிப்பதிவை பரிசீலனை செய்து, இதற்கு பின்னால் நடக்கும் சதியை வெளிஉலகிற்கு தெரியப்படுத்த வேண்டுகிறேன்.

''ஏற்கெனவே நாங்கள் 8 அரசுகளை கவிழ்த்தோம். விரைவில் ஆந்திரா, தெலங்கானா, டில்லி, ராஜஸ்தான் ஆகிய 4 மாநில அரசுகளையும் கவிழ்ப்போம்” என்று அந்த 3 பேர் காட்சிப்பதிவில் கூறியுள்ளனர்.

சுமார் ஒரு மாதம் முன்பு அய்தராபாத்துக்கு ராமசந்திர பாரதி என்பவர் வந்தார். அவர், பல முயற்சிகளை மேற்கொண்டு எங்கள் கட்சியை சேர்ந்த சடடமன்ற உறுப்பினர் ரோஹித் ரெட்டியை சந்தித்துள்ளார். பின்னர் விவரங்களை கூறியுள்ளார். இவர்களது சதித் திட்டம் குறித்து ரோஹித் என்னிடம் கூறினார். மாநில உள்துறை அமைச்சருக்கு இதுகுறித்து புகார் தெரிவிக்கப்பட்டது.

அதன் பின்னரே பண்ணை வீட்டில் பேரம் பேசிய அந்த 3 பேரும் கைது செய்யப்பட்டனர். ஆளும் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் இணைந்தால் ரூ. 100 கோடி மட்டுமல்ல, எவ்வளவு தொகை வேண்டு மானாலும் கொடுக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

இந்த காட்சிப் பதிவில், பேரம் பேச வந்தவர்கள், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பெயரை 20 முறையும், பிரதமர் மோடியின் பெயரை 2 முறையும் பயன்படுத்தியுள்ளனர். பி.எல். சந்தோஷ் மற்றும் ஜே.பி. நட்டா ஆகியோரின் பெயர்கள் பல முறை குறிப்பிடப் பட்டுள்ளது. பேரம் பேசிய பின்னணியில் யார் இருந் தார்கள், சட்டமன்ற உறுபபினர்களுக்கு தரப்படுவதாக தெரிவித்த கோடிக்கணக்கான பணம் யாருடையது என்ப தெல்லாம் விசாரணையின்போது தெரியவரும். இவ்வாறு சந்திரசேகர ராவ் பேசினார்.

No comments:

Post a Comment