நம் குழந்தைகளை எப்படிக் கொண்டாட வேண்டும்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 14, 2022

நம் குழந்தைகளை எப்படிக் கொண்டாட வேண்டும்?

 நம் குழந்தைகளை எப்படிக் கொண்டாட வேண்டும்?

இன்று (14.11.2022) குழந்தைகள் நாள் - இந்தியாவின் விஞ்ஞான   வளர்ச்சிக்கு வித்திட்ட நவீன இந்தியாவின் சிற்பியாகவும், ஜனநாயகம், மதச் சார்பின்மை போன்ற அரிய தத்துவங்களுக்குத் தக்க பாதுகாவலராகவும் தனது ஆட்சியை நடத்திய ஜவகர்லால் நேரு அவர்கள் குழந்தைகளை மிகவும் நேசித்தவர் என்பதால் அவரது பிறந்த நாளான இன்றைய நாளை (நவம்பர் 14) 'குழந்தைகள் நாளாக' அறிவித்து, நாடு கொண்டாடி வருகிறது!

குழந்தைகளை நேசிக்காதவர்கள் யார்? மிருகங்களில்கூட, தனது குட்டிகளை பெற்றதோடு, வளர்த்து - தனித்தன்மையுடன் அவை வளரும் வரை - அவற்றைப் பழக்கி விடுவதும் தாய் பிராணிகளுக்குப் பொறுப்பாக இருப்பதை நாம் பார்த்து மகிழக் கூடிய ஒன்றுதானே!

பன்றிகள்கூட தாம் பெற்றெடுத்த பல குட்டிகளின் அருகில் மனிதன் நெருங்கினால் சீறிப் பாய்ந்து மனிதர்களைக் கடிக்கக்கூட ஆயத்தமாகி விடுகின்றனவே!

அப்படியானால் ஆறறிவு படைத்த மனிதர்கள் குழந்தைகளை எப்படிப் போற்றி, தாய்ப்பாலை ஊட்டும் போதே, பகுத்தறிவுப் பாலையும், ஊட்டி விட வேண்டாமா?

பிறக்கும் குழந்தைகள் எல்லாம் ஜாதி, மதம் எதுவும் இல்லாதவையாகத் தான் இந்த உலகத்திற்கு வருகிறது!

ஆனால் மூடநம்பிக்கையுடன் உள்ள சில பெற்றோர்களே அதற்கு பலவித கற்பனைகளை கடவுள் - மதம் - பூதம் - பேய் - பிசாசு, 'அஞ்சுகண்ணன்", "பூச்சாண்டி" என்று சொல்லி பிஞ்சு உள்ளத்தில் நஞ்சைப் பாய்ச்சி விடுகிறார்கள். கவிஞர்  பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பாடியதுபோல,

வேப்பமர உச்சியில் நின்னு

பேயொண்ணு ஆடுதுன்னு

விளையாடப் போகும் போது

சொல்லி வைப்பாங்க - உன்

வீரத்தைக் கொழுந்திலேயே

கிள்ளி வைப்பாங்க

வேலையற்ற வீணர்களின்

மூளையற்ற வார்த்தைகளை

வேடிக்கையாகக் கூட

நம்பி விடாதே - நீ

வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து

வெம்பி விடாதே - நீ

வெம்பி விடாதே

என்று பாடியது எம்.ஜி.ஆர். பாட்டு மூலம் ஒலித்துக் கொண்டே உள்ளது.

என்றாலும் பெற்றோர்களாகிய இந்த "பெரிய குழந்தைகள்" திருந்துவதாகவே இல்லை - என்ன செய்வது? இது ஞான பூமியல்லவா? அதனால் வருடா வருடம் பூமியைப் பாயாகச் சுருட்டி, கடலுக்குள் சென்று ஒளித்து வைத்த அசுரன் கதையையொட்டிய 'தீபாவளி' பண்டிகையைப் புகுத்தி, புத்தாடை, பட்டாசு, பலகாரம் என்பவற்றைக் காட்டி குழந்தைகளைத் திசை திருப்புவது தில்லுமுல்லு நாடகமா - அல்லவா?

அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை ஏன்? எதற்கு? என்று கேள்வி கேட்பது, சீர்திருத்தம் பற்றியெல்லாம்  கேள்வி கேட்பது அடிப்படைக் கடமைகள் என்பதை எந்தப் பள்ளியில், எந்தக் கல்லூரியில், சொல்லிக் கொடுக்கிறார்கள்? திராவிடர் கழக, பகுத்தறி வாளர் கூட்டங்களில் தானே போதிக்கிறார்கள்?

அறிவியல் பாடம் படிக்கும் குழந்தைகளிடம் அதற்கு நேர்முரணான கருத்துகளைத் திணிக்கும் பாடத் திட்டங் களை வைத்துக் கொண்டு சொல்லிக் கொடுத்தால் அவர் களில் எப்படி "நியூட்டன் களும், ஸ்டீபென் ஹாக்கிங்ஸ் களும் உருவா வார்கள்?

'கேள்வி கேட்காதே', 'வாயை மூடு' இதுதானே குழந்தைகளை நோக்கி நாம் இடும் ஆணை? இந்தப் போக்கு மாறாவிட்டால் நம் குழந்தைகள் எப்படி நோபல் பரிசு பெறும் விஞ்ஞானிகளாக நாளை உருவாக முடியும்? 

கேள்வி மேல் கேள்வி கேட்டதால், இன்று பலருடைய கையில் செல்போன் என்ற கைப்பேசி, -அதுவும் 5ஜி வேகத்தில் "அந்த ஒரிஜினல் ஏன் அடைய முடியும் கண்டுபிடித்தவருக்கு 7, 8 அறிவா? இல்லையே நமக்குள்ள அதே 6 அறிவு தானே? அதை முறையாகப் பயன்படுத்தியவர் வெற்றி மேல் வெற்றி பெறுகிறார்; நாம் குழவிக் கல்லுக்கு கல்யாணம் அதுவும் வருஷா வருஷம் செய்து வருகிறோம் - எப்படி வளருவோம்'? என்றவர் தானே பெரியார்!

அந்த கேள்வியின் நியாயத்தைப் பார்க்காமல், அவர் தாடியைப் பற்றி விமர்சிக்கும் வீணர்களாகத் தான் நம்மில் பலர் இருக்கின்றனர். குழந்தைகளை வளர்க்கும் போதே அறிவியல். சுவாசத்தை சுதந்திரமாக சுவாசிக்க அனுமதியுங்கள். பிறகு அது போட்டி போட்டு வளர்ந்து சாதனை சரித்திரம் படைக்கும்.


No comments:

Post a Comment