ஜாதி ஒழிப்புக்குச் சங்கநாதம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 24, 2022

ஜாதி ஒழிப்புக்குச் சங்கநாதம்!

"சுதந்திர நாட்டிலே அந்நாட்டு மகன் சூத்திரனாக முடியுமா? சுதந்திர நாட்டிலே அந்நாட்டு மக்கள் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்படு வார்களா? சுதந்திர நாட்டிலே அந்நாட்டவர்களை அடிமைகள் என்றும், நீசர்களென்றும், இழி மக்களென்றும் கருதும் மதங்களும், புராணங்களும், சட்டங்களும் இருக்க முடியுமா? சிந்தித்துச் செயலாற்றுங்கள்" என்றார் தந்தை பெரியார் ('விடுதலை' - 22.2.1961)

இந்தியத் துணைக் கண்டம் வெள்ளையரிடமிருந்து விடுதலை பெற்று பவள விழாவும் (75 ஆண்டுகள்) கோலாகலமாகக் கொண் டாடப்பட்டு விட்டது.

ஆனால், அந்த சுதந்திர இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தில் பிறப்பின் அடிப்படையில் பிளவுபடுத்தும், இழிவுபடுத்தும், பார்ப் பனீயத்தின் மனுதர்மத்தின் வருணாசிரமக் கூறான ஜாதி கெட்டியாகப் பாதுகாக்கப்படுகிறது (13(2), 25(1), 26, 29(1)(2) 368).

அரசமைப்புச் சட்டத்தின் 17ஆம் பிரிவு தீண்டாமை ஒழிக்கப் படுகிறது என்று மட்டுமே உள்ளது. இது யாரை ஏமாற்றிட? தீண்டாமை என்பது நிழல் - ஜாதி என்பதே நிஜம் - நிஜத்தை ஒழித்துக் கட்டாமல் நிழலை ஒழிப்பது என்பது அசல் ஏமாற்று வேலை.

தந்தை பெரியார் தம் வாழ் நாளில் இறுதியாக நடத்திய தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானம் (கழகப் பொதுச் செயலாளர் ஆசிரியர் கி.வீரமணிதான் அதனை முன்மொழிந்தார்).  "ஜாதி என்பது எந்த இடத்திலும் இல்லாது செய்யப்பட வேண்டும்; நடப்பிலும் இல்லாது பார்த்துக் கொள்ளப்பட வேண்டும்; ஜாதி உணர்ச்சி அறவே மறையும்படிச் செய்ய வேண்டும். இதனை வெறும் மனமாற்றத்தால் மட்டுமே செய்ய முடியுமென்று தத்துவார்த்தம் பேசி காலம் கடத்தாமல், "தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது; அதனை எந்த ரூபத்தில் கடைப்பிடித்தாலும் அது சட்ட விரோதம்" என்று அரசியல் சட்டத்தின் 17ஆவது விதி கூறுகிறதே, அவ்விதியில் உள்ள "தீண்டாமை" (Untouchability) என்பதற்குப் பதிலாக "ஜாதி" ("Caste") என்ற சொல்லை மாற்றி ஜாதி ஒழிப்பை அரசியல் சட்டமே பிரகடனப்படுத்துவதாக அமைய வேண்டும்" என்பது தான் அந்த தீர்மான அம்சம்.

எத்தனை எத்தனையோ மாநாடுகளில் ஜாதி ஒழிப்புத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒவ்வொரு கூட்டத்திலும் ஜாதி ஒழிப்பு பெண்ணடிமை ஒழிப்புப் பற்றிய கருத்துகள்தான் முந்துறும்.

ஜாதியை ஒழிக்கக் கடுமையான விலை கொடுத்தாக வேண்டும் என்று கருதினார் தந்தை பெரியார்.

1957 நவம்பர் 3ஆம் தேதியன்று தஞ்சாவூரில் திராவிடர் கழக (ஸ்பெஷல்) மாநாடு நடைபெற்றது. 

அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் காலாக் காலத் திற்கும் நின்று ஒளிரக் கூடிய மானுட சமத்துவத்தை உள்ளடக்கியதாகும்.

‘அரசியல் சட்டத்தில் கண்டுள்ள மதப் பாதுகாப்பு, மத உரிமை என்பதில் இந்து மதம் என்பதை எடுத்துக் கொண்டால் அது வருணாசிரம தர்மம் என்கிற , பிறவியில் மக்களை ஜாதிகளாகப் பிரித்து அவரவர்களுக்குத் தொழிலையும் கற்பித்து, ஒரு பிறவி உயர்ந்தது, முதன்மையானது, மற்றொரு பிறவி தாழ்ந்தது, இழிவானது என்பதான கருத்துகளை அமைத்து,  அந்த அமைப்பைக் காப்பது தான். மத சுதந்திரம் என்பதாகச் சாஸ்திரங்களிலும் மற்றும் மத ஆதாரங்களிலும் கூறுவதைக் கொள்கையாகவும், நம்பிக்கையாகவும் கொள் வதை உரிமையாக்குவதாகிறது. இந்த உரிமையானது இந் நாட்டு இந்து பொதுமக்களில் நூற்றுக்கு மூன்று பேர் மேல்ஜாதி, உயர்ந்த பிறவி - உடல் உழைப்பில்லாமல் இருந்து கொண்டு மற்றவர் உழைப்பில் சுக வாசிகளாக வாழ்வதென்றும், நூற்றுக்குத் தொண் ணூற்று  ஏழு பேர்களான மக்களைக் கீழ்ஜாதி இழிமக்களென்றும், உடல் உழைப்பு வேலைசெய்து கொண்டு அடிமையாய், பாட் டாளியாய் வாழ வேண்டிய வர்கள் என்றும், பின் சொல்லப்பட்ட மக்கள் கல்வியறிவுக்கும், நீதி நிர்வாக உத்தியோகங்கள், பதவி களுக்கும் தகுதியற்றவர்கள் என்றும் ஆக்குவதாக இருப்பதால், இந்த மதக் காப்பாற்று உரிமை கண்டிப்பாக எடுக்கப்பட வேண்டும் என்பது அவசியம் என்றும் இம்மாநாடு கருதுகிறது.

இந்தக் காரியங்கள் சாதாரணமானத் தன்மையில் மாற்றப் படாவிட்டால் எந்தவிதமான முறையைக் கொண்டாவது மாற்றித் தரும் படிச் செய்யவேண்டியது பொதுமக்களின் இன்றியமையாத கடமை என்று இம்மாநாடு கருதுகிறது.

மற்றும் இந்த அரசியல் சட்டமானது பொதுஜன  வோட்டுரிமை இல்லாமலும் சரியான தேர்தல் முறை இல்லாமலும் பொறுக்கி எடுத்துக் கொள்ளப்பட்டவர்களைக் கொண்ட அரசியல் நிர்ணய சபையினால் வகுக்கப்பட்ட சட்டமாதலாலும், இந்தச் சட்டத்தைத் தயாரித்த ஆறு பேர்களில் பெரும்பான்மையானவர்கள் பார்ப்பனர்கள் ஆதலாலும், பார்ப்பனர், முஸ்லீம், பஞ்சமர் ஆகியவர்களைத் தவிர்த்த பொதுஜனத் தொகையில் நூற்றுக்கு எழுபத்தைந்து பேர்களாயுள்ள சூத்திரரென்று ஆக்கப்பட்டிருந்த பெருங்குடி மக்களுக்குப் பிரதிநிதித்துவம் இல்லாத ஒரு சட்டம் செய்யும் குழுவைக் கொண்டு இச்சட்டம் வகுக்கப்பட்டிருப்பதாலும் இந்தச் சட்டமானது 'நான்காம் ஜாதி' என்றும் கூறப்படுகின்ற மக்களைக் கட்டுப்படுத்தத்தக்கதாக ஆகாது என்று இம் மாநாடு கருதுகிறது.

இப்படிப்பட்ட காரணங்களால் இந்த நாட்டுப் பெருங்குடி மக்களுக்கு அமைப்பு, ஜாதி, மதம் ஆகியவை காரணமாக நீதி, சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் ஆகியவை அளிக்கப்படாத தாயிருப்பதால் இவைகளை முன்னிட்டு, இந்த அரசியல் சட்டம் இந்நாட்டுப் பெருங்குடி மக்களுக்குக் கேடா னது என்று கருதுவதால், இக்கேடுகளுக்கு ஒரு தெளிவான பரிகாரமோ இன்றுமுதல் 15 நாள் வாய்தாவுக்குள் இந்த அரசாங்கம் மக்களுக்கு அளிக்காவிட்டால், இந்த அரசியல் சட்டத்தை எதிர்த்து ஒழிக்கும் முயற்சியின் அறிகுறியாக 1949 நவம்பர் 26ஆம் தேதி என்ற அரசியல் சட்ட பிறப்பு நாள் வைத்து, இந்த நவம்பர் மாதம் 26ஆம் தேதியன்று மாலையில் இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு பார்ப்பனரல்லாத திராவிடராலும் இச்சட்டம் நெருப்பிலிட்டுக் கொளுத்தத் தக்கது என்று இம்மாநாடு பொது மக்களுக்குத்தெரிவித்துக் கொள்கிறது.''     ('விடுதலை' - 5.11.1957)

இலட்சோப லட்சம் மக்கள் கூடிய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட நியாயமான மனித சமத்துவம் குறித்த தீர்மானம்பற்றி பிரதமர் சீர்தூக்கி சிந்தித்திருக்க வேண்டாமா?

மாறாக தேசிய அவமதிப்புத் தடுப்பு மசோதா (Prevention of Insult to National Honour  - 1957) சென்னை சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

மூன்றாண்டு வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்பதுதான் அந்த சட்டம்.

புதிய சட்டத்தைக் கண்டு கருஞ் சட்டைத் தோழர்களா அஞ்சுவார்கள் - அதுவும் தந்தை பெரியார் அறிக்கை வெளியிட்ட பிறகு?

பத்தாயிரம் பேர் கொளுத்தினார்கள். மூவாயிரம் பேர்கள் மட்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

நீதிமன்றத்தில் எதிர்த்து வழக்காடவில்லை. நீதிமன் றத்தில் எந்த வாங்குமூலத்தைக் கொடுக்க வேண்டும் என்று தந்தை  பெரியார் 'விடுதலையில் வெளியிட்டார்.

"நான் ஜாதி ஒழிப்புக் கிளர்ச்சிக்காரன்" இந்திய அரசியல் சட்டத்தில் ஜாதிக்கும் அதை உண்டாக்கிய மதத்துக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது. அரசியல் சட்டம் தமிழர் நலனுக்காக வகுக்கப்பட வுமில்லை. அச்சட்டத்தை திருத்தக் கூடிய வசதி தமிழர் களுக்கு இல்லை. ஆதலால் என் எதிர்ப்பைக் காட்டிக் கொள்ளும் அறிகுறியாக இச்சட்டத்தைக் கொளுத்தி னேன். இப்படிக் கொளுத்துவதற்கு எனக்கு உரிமையுண்டு, இதனால் எந்த உயிர்க்கும், எந்தப் பொருளுக்கும், சேதமில்லை. ஆதலால் நான் குற்றவாளியல்ல. இந்த நீதிமன்ற நடவடிக்கையில் நான் கலந்து கொள்ள விரும்பவில்லை. நான் எதிர் வழக்காட விரும்பவில்லை. நான் குற்றவாளி என்று கூறப்பட்டால் அதற்குரிய தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன்" ('விடுதலை' 21.11.1957). 

இப்படியொரு போராட்டம் மூன்று ஆண்டு தண்டனை கிடைக்கும் என்று தெரிந்திருந்தம் 10 ஆயிரம் பேர் சட்டத்தை எரித்தனர் - இதற்கு நிகராக உலக வரலாற்றில் நடந்த போராட்டம் உண்டா?

சிறையில் மாண்டவர் பலர் - உடல் நலம் பாதிக்கப் பட்ட நிலையில், விடுதலையாகி  மாண்டவர்கள் பலர்.

இது ஒரு வீர காவியம்! அந்த நாளை நினைவூட்ட மட்டுமல்ல - அந்தப் போரில் ஈடுபட்ட தோழர்களுக்கு நன்றியும் வீர வணக்கமும் செலுத்துவதற்காக மட்டுமல்ல - அந்தத் தியாகத் தீபங்கள் எந்த நோக்கத்திற்காக கடும் விலை கொடுத்தனரோ அந்த நோக்கமான ஜாதியை ஒழிக்கப் பலிகடா ஆக நாங்கள் தயார்! தயார்!! என்று சூளுரைக்கும் பிரச்சாரக் கூட்டங்கள் தான் வரும் 26ஆம் தேதி நாடு தழுவிய அளவில் திராவிடர் கழகம் நடத்தவிருக்கும் விளக்கப் பொதுக் கூட்டங்கள்.

சிறப்பாக - எழுச்சியாக நடத்துங்கள் தோழர்களே! வீர வணக்கம்! வீர வணக்கம்!! ஜாதி ஒழிப்பு வீரத் தியாகிகளுக்குக் கருஞ் சட்டைகளுக்கு வீர வணக்கம்! வீர வணக்கம்!!

ஒழிப்போம் ஜாதியை -

அமைப்போம் ஜாதி ஒழிந்த சமத்துவ சமதர்ம சமுதாயத்தை!


No comments:

Post a Comment