பெருங்கவிக்கோ வா.மு.சே. குடும்பம் ஒரு பரந்த தமிழ்ப் பல்கலைக் கழகம் இந்தக் குடும்ப வளர்ச்சிக்கு அம்மா ‘‘சேது''வாக இருந்தார்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 20, 2022

பெருங்கவிக்கோ வா.மு.சே. குடும்பம் ஒரு பரந்த தமிழ்ப் பல்கலைக் கழகம் இந்தக் குடும்ப வளர்ச்சிக்கு அம்மா ‘‘சேது''வாக இருந்தார்!

தமிழை, தமிழரைக் காக்க திராவிடம் வெல்லும் - 

நாளைய வரலாறு இதைச் சொல்லும்!

வா.மு.சே.அவர்களின் வாழ்விணையர் சேதுமதியின் 

நினைவேந்தல் நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் உரை

சென்னை, நவ.20   பெருங்கவிக்கோ வா.மு.சே. குடும்பம் ஒரு பரந்த தமிழ்ப் பல்கலைக் கழகம்; இந்தக் குடும்ப வளர்ச்சிக்கு அம்மா ‘‘சேது’’வாக இருந்தார்! தமிழை, தமிழரைக் காக்க திராவிடம் வெல்லும் - நாளைய வரலாறு இதைச் சொல்லும்! என்றார் தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

அன்னை சேது அறக்கட்டளை அமைப்பின் சார்பில் நினைவேந்தல் நிகழ்வு!

கடந்த 12.11.2022  அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் அரங்கில், ‘‘அன்னை சேது அறக்கட்டளை அமைப்பின் சார்பில்’’ பன்னாட்டுத் தமிழுறவு மன்ற உலக அமைப்பாளர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் இணையர் அன்னை சேதுமதியின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அவர்கள் நினைவுப் பரிசு, பொற்கிழி வழங்கி உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு: 17 ஆம் ஆண்டு நினைவு நாள்

பன்னாட்டுத் தமிழுறவு மன்ற உலக அமைப்பாளர் அருமைச் சகோதரர் பெருங்கவிக்கோ வா.மு.சே. அவர்களுடைய வாழ்விணையர் அம்மா சேதுமதி அவர்களுடைய நினைவாக அன்னை சேது அறக் கட்டளை நடத்தக்கூடிய 17 ஆவது ஆண்டு நினைவு நாள் அருள்மங்கலம் என்ற தலைப்பில் நடைபெறக்கூடிய சிறப்பான நிகழ்ச்சி இது.

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் தொடர்ந்து நடத்துகிறார்கள். அந்த வகையில், இந்த ஆண்டு இந்த வாய்ப்பினை பெரியார் திடலுக்கு வழங்கியிருப்பதாகத்தான் நான் கருதுகிறேன்.

காரணம், அவர் வேறு; நாங்கள் வேறு அல்ல. ஒரே ரத்தம் - சகோதரர்கள், உடன்பிறப்புகள். அப்படிப்பட்ட உணர்வைப் பெற்றிருக்கின்ற அருமை அய்யா பெருங்கவிக்கோ அவர்களின் அன்பான பாராட்டுகள், பெருமிதம் இவற்றையெல்லாம் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு நன்றி செலுத்துகின்றோம். இங்கே தலைமைப் பொறுப்பேற்று இருக்கக் கூடிய தலைவர் மருதநாயகம் அவர்களே,

தமிழ் வாழ நாங்கள் தமிழ்ப் போராளியாக என்றும் இருப்போம்!

அய்யா கவிஞர் வா.மு.சே.கவியரசன் அவர் களே,

அமெரிக்காவில் இருந்தாலும், தொடர்ந்து தலைமுறை தலைமுறையாக தமிழ் வாழ நாங்கள் தமிழ்ப் போராளியாக என்றும் இருப்போம் என்று சொல்லக்கூடிய அந்த உணர்வுக்கு ஆளாகி, அங்கேயும் சென்று குறுந்தொகை - இதுவரை நடைமுறைப்படுத்தியவர் நம்முடைய அருமைத் தோழர் கவியரசன் அவர்களாவார்கள்.

ஏனென்றால், மற்ற பிள்ளைகள் என்மீது கோபித்துக் கொள்ளமாட்டார்கள். இதுவரையில் குறளுக்குப் பல புலவர்கள் பதவுரை, கருத்துரை, பொழிப்புரைதான் சொன்னார்கள். ஆனால், அதை வாழ்வுரையாக ஆக்கியது அவருடைய குடும்பத்தில்தான்.

‘‘யாயும் ஞாயும் யார் ஆகியரோ?

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்?

யானும் நீயும் எவ்வழி அறிதும்?

செம்புலப் பெயல் நீர் போல

அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.''

என்ற பாடல் எல்லோரும் அறிந்ததே!

அதை நடைமுறையில் எல்லோரும் சொல்லிக் கொடுப்பார்கள். ஆனால், இங்கே இருப்பவர்கள் மாறுபட்ட உணர்வு படைத்தவர்கள். 

நான் பொதுவான நிலையை சொல்கிறேன். நம்மு டைய பழைய தமிழாசிரியர்கள், புலவர்கள் பெரும்பாலும் குறுந்தொகையின் சிறப்புகள் எல்லாவற்றையும் மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பார்கள். இதைக் கேட்ட அவருடைய மகள், அப்பா நீங்கள் சொல்லிக் கொடுத்த குறுந்தொகைப்படியே, ‘‘யாயும் ஞாயும் யார் ஆகியரோ?'' நானும் ஒருவரை விரும்புகிறேன் என்று சொல்வார்.

உடனே அவர், ‘‘நம்ம ஜாதியா?'' என்று கேட்டுவிட்டு, என்னிடம் சொல்லாமல் இப்படி செய்துவிட்டாயே? என்பார்.

இன்னும் சில பேர், வருந்தொகை, பெருந்தொகையாக இருக்கும் என்பதற்காக, நான்  குறுந்தொகையை கொஞ் சம் ஒத்தி  வைத்திருந்தேனே, அதைப் போய் பாழாக்கி விட்டாயே என்று கோபப்படுகிறவர்களும் இருக் கிறார்கள்.

வா.மு.சே. அவர்களுடைய குடும்பம் கொள்கை ரீதியான குடும்பம்!

ஆனால், நம்முடைய வா.மு.சே. அவர்களு டைய குடும்பம் என்பது கொள்கை ரீதியான குடும்பமாகும்.

அதற்கு முன்பு இதுவரையில், ஒரு மூன்று, நான்கு சுயமரியாதைத் திருமணங்கள் 

சிகாகோவில் நடைபெற்று இருக்கிறது. அதையொட்டி தொடர்ந்து நிறைய மணவிழாக்கள் நடைபெறு கின்றன. ஏனென்றால், சுயமரியாதை என்பது மனிதர்களுக்கு உரியது. சுயமரியாதை என்பது ஒரு கட்சிக்கோ, ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கோ சொந்த மானதல்ல. மனிதர்களாக யார் இருக் கிறார்களோ, அவர்கள் அத்தனை பேருக்கும் சுயமரியாதை உணர்வு உண்டு.

எனவே, அவர் இங்கே வந்து இந்நிகழ்வில் பங்கேற்று, எல்லோரையும் வரவேற்றதில் மிக்க மகிழ்ச்சி.

மூன்றாவது தலைமுறை பிள்ளைகள்கூட...

இவர்கள் இந்த அளவிற்கு வந்திருப்பதற்கு யார் காரணம்?

அய்யா பெருங்கவிக்கோ அவர்கள்தான். அவர் இவ்வளவு சிறப்பாக இந்த விழாவினை மிகப்பெரிய அளவிற்கு இந்நிகழ்வினை நடத்தக் கூடிய அளவிற்கு, மூன்றாவது தலைமுறை பிள்ளைகள்கூட அந்த உணர்வோடு இருக்கிறார்கள் என்றால், அதற்குக் காரணம் அம்மா சேது அவர்கள்தான்.

எனவே, அவர்கள் பெயராலே நடைபெறக்கூடிய இந்த அற்புதமான இந்த நல்ல விழாவை - யாருக்கோ விருது கொடுக்கிறோம் என்றில்லாமல், ஒரு தமிழ்ப் முறைப்படி, மனிதநேயம், பாராட்டவேண்டியவர்களைப் பாராட்டவேண்டும்; உற்சாகப்படுத்த வேண்டியவர்களை உற்சாகப்படுத்தவேண்டும், ஊக்கப்படுத்தவேண்டும்.

அப்படி அடையாளங் கண்டு, ஒவ்வொருவரையும் அழைத்து, நம்முடைய பெருங்கவிக்கோ அவர்கள், அவர்களுக்கு நினைவுப் பரிசும், பொற்கிழியும் வழங்கு கிறார்.

ஒரு நிகழ்ச்சி என்று சொன்னால் போதும் அவருக்கு, ஒரு மணித் துளியில் பாராட்டி கவிதையை எழுதிவிடு வார். தமிழ் அவருக்கு அவ்வளவு பெரிய ஒரு ‘வரம்' - ஓர் அறம் என்று சொல்லக்கூடிய அளவிற்குத் தமிழோடு பிணைந்தவர்.

 ‘‘செந்தமிழ் அந்தணர்’’ 

நான் வேடிக்கையாக அய்யா கடவூர் அவர்களைப் பார்த்துச் சொல்லும்பொழுது, ‘‘செந்தமிழ் அந்தணர்'' என்று கொடுத்தார்.

இங்கே தான் இது முடியும். அது அந்தணர் ஆக்கக் கூடிய அளவிற்கு வாய்ப்பு உள்ளது. வெளியில் சென் றால், அது முடியாது. கோவிலுக்குள் அந்தணர் மட்டும்தான் உள்ளே செல்லவேண்டும் என்று அந்தணருக்கு வியாக்கியானம் சொல்லிக் கொண் டிருந்தார்கள்.

ஆனால், நம்மவர் ‘‘செந்தமிழ் அந்தணர்'' என்று பட்டம் கொடுத்திருக்கிறார்.

அதற்குக் காரணம் என்ன?

ஒரே வார்த்தையில் இதற்கு வள்ளுவர் சொல்லி விட்டார், நீண்ட காலத்திற்கு முன்பே -

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்

செந்தண்மை பூண்டொழுக லான்

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்

ஆகுல நீர பிற.

மாசில்லாதவர்களாக இருக்கவேண்டும்

உண்மையாகவே மனதில் யாருக்கு மாசில்லையோ, காசு இருக்கிறதா -இல்லையா என்பது பிரச்சினையல்ல; காசில்லாதவர்களாக இருக்கலாம்; ஆனால், மாசில்லாத வர்களாக இருக்கவேண்டும். இப்பொழுது நாட்டில் இருக்கிற பிரச்சினையே மாசுதான். எல்லாத் துறை களிலும்.

ஒரு தமிழ்ப் பல்கலைக் கழகம் - பகுத்தறிவுப் பல்கலைக் கழகம் - இன உணர்வுப் பல்கலைக் கழகம்

அய்யா வா.மு.சே. அவர்களின் குடும்பம் ஒரு பரந்த தமிழ்க் குடும்பம் - ஒரு தமிழ்ப் பல்கலைக் கழகம் - பகுத்தறிவுப் பல்கலைக் கழகம் - இன உணர்வுப் பல் கலைக் கழகம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, அவருடைய பிள்ளைகள் ஒவ்வொரு வரும் சிறப்பான வகையில் பணியாற்றக் கூடியவர்கள்.

அய்யா கவிதை உறவு ஏர்வாடி இராதாகிருஷ்ணன் அவர்களானாலும், பெருங்கவிஞர் வேணுகோபால் அவர்களானாலும், பெரும்புலவர் இராமலிங்கம் அவர் களானாலும், பேராசிரியர் சோதிவாணன், பெரும்புலவர் இலந்தை இராமசாமி - அமெரிக்காவில் வாழக்கூடியவர், அதேபோல, தமிழறிஞர் பொறிஞர் கோபாலகிருஷ்ணன் அவர்கள், பெருங்கவிஞர் இரவிபாரதி அவர்கள், பாவலர் கோ.கடவூர் மணிமாறன் அவர்கள், தமிழ்த்திரு பாதுஷா அவர்கள், பொறிஞர் பீட்டர்ராசன் அவர்கள், குறளோன் வேலரசு அவர்கள், ஏற்புரை வழங்கக்கூடிய பெருங்கவிக்கோ மற்றும் வந்திருக்கக்கூடிய அறிஞர் பெருமக்களுக்கு என்னுடைய வணக்கத்தையும் வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

வயது முக்கியமல்ல - உணர்வுதான் மிக முக்கியம்!

இங்கே வந்திருப்பவர்களில் 90 வயதைக் கடந்த வர்கள்கூட இருக்கிறார்கள்.

நமக்கு வயது முக்கியமல்ல - உணர்வுதான் மிக முக்கியம். என்றாலும், நீங்கள் அருள்கூர்ந்து உங் களுடைய உடல்நலத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதை முதற்கண் வேண்டுகோளாக வைக்கிறேன். ஏனென்றால், எல்லோரும் முதியவர்களாக இருக்கிறார்கள்.

முதுமை வேறு - முதியவர்கள் என்று சொல்லும் பொழுது முதிர்ச்சி பெற்றவர்கள் என்ற பொருளிலே நான் சொல்லுகிறேன்; வயதானவர்கள் என்ற பொருளிலே அல்ல.

அந்த வகையிலே நண்பர்களே, இன்றைக்கு ஒரு நல்ல சந்திப்பு. ஒரு தமிழ்ச் சந்திப்பு.

வெறும் பாராட்டு விழா அல்ல- படைச்செருக்கு உள்ள ஒரு பாசறையை உருவாக்கக் கூடிய விழா!

ஆனால், இப்பொழுது ஏற்பட்டு இருக்கின்ற பிரச்சினைகளுக்கு உங்களைப் போன்றவர்களை நாங்கள் பார்க்கும்பொழுது, இது வெறும் பாராட்டு விழா அல்ல- படைச்செருக்கு உள்ள ஒரு பாச றையை உருவாக்கக் கூடிய ஓர் அற்புதமானவர் களுக்கு நீங்கள் ஆயுதம் கொடுக்கவேண்டும்; அறிவாயுதத்தைக் கொடுக்கவேண்டும்; உணர்ச்சி மிகுந்த ஆயுதத்தைக் கொடுக்கவேண்டும் என்பதுதான் மிக முக்கியம்.

அதற்கு சேது அம்மாவின் நினைவு நாளை - 17 ஆவது ஆண்டு நினைவு நாளை அதற்குப் பயன்படுத்துவது என்பது மிகச் சிறப்பானது.

ஏனென்றால், அம்மா எப்படி தங்களை ஆளாக் கினார்கள் என்பதைபற்றியெல்லாம் நம்முடைய தோழர் கவியரசன் அவர்கள் இங்கே சொன்னார். பிள்ளைகளை எல்லோரையும் நல்ல நிலைக்கு ஆளாக்கியிருக்கிறார்கள்.

சேதுகாவியம் காப்பியம் எழுதுவதற்கு, மிகப்பெரிய அளவிற்கு அவருடைய ஒத்துழைப்பு. 

அய்யா வா.மு.சே. அவர்கள் சுற்றுப்பயணம் செய்துகொண்டே இருப்பார். பிள்ளைகளை ஆளாக்கி, அவர்கள் நல்ல நிலைக்கு வந்திருப்பதற்குக் காரணம் மறைந்த அம்மையார் அவர்கள்தான்.

பல மடங்குப் பாராட்டவேண்டும்!

பொதுவாழ்க்கையில் இருப்பவர்களைப் பாராட்டு வது ஒருமடங்கு என்றால், புதைபொருள் போன்று, அடிக்கல் போன்று, அஸ்திவாரம் போன்றவர்கள்தான் பொதுவாழ்க்கையில் ஈடுபடுபவர்களின் வாழ்விணை யர்கள். சேது அம்மையார் போட்ட அடித்தளத் தினால்தான் பிள்ளைகள் வளர்ந்திருக்கிறார்கள். அய்யா வா.மு.சே. அவர்கள் இத்தனை ஆண்டுகள் தொண்டு செய்யக்கூடிய அளவிற்கு வந்திருக்கிறார் அந்த அம்மையாரைப் பல மடங்குப் பாராட்டவேண்டும்.

அன்னைக்கு இருக்கிற இடம் என்பது யாராலும் பெற முடியாத ஒன்று

அம்மா என்று சொல்லும்பொழுது, அன்னை என்று சொல்லுகிறபொழுது, அன்னைக்கு இருக்கிற இடம் என்பது யாராலும் பெற முடியாத ஒன்றாகும்.

ஒருமுறை தந்தை பெரியார் அவர்கள் விடயபுரத்தில் தங்கியிருந்தார். அங்கேதான் கடவுள் மறுப்பு வாசகங் களை சொன்னார். அவருடைய 90 வயதிற்குப் பிறகு சிறுநீர் கழிப்பதில் சிரமம் ஏற்பட்டதினால், மருத்துவ சிகிச்சையின்மூலம் உடலில் குழாய் பொருத்தி, அதன் வழியாக சிறுநீர் வெளியேறும் - அந்தக் குழாயினை ஒரு பாட்டினுள் வைத்து, அந்தப் பாட்டிலை ஒரு வாளியில் வைத்துத் தூக்கிக் கொண்டு வருவார் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

உரையாற்றிக் கொண்டிருக்கும்போது வலி ஏற் பட்டால்கூட, தனது உரையை நிறுத்தமாட்டார். மேடையில் இருக்கும்பொழுது, கொஞ்சம் புரண்டு அந்தக் குழாயினை சரிப்படுத்தவேண்டும் என்பதற்காக ‘‘அம்மா, அம்மா'' என்று முணுகுவார்.

தந்தை பெரியாரின் கடைசிக் கூட்டம்!

கடைசி கூட்டத்தில் - அவர் 1973 ஆம் ஆண்டு, டிசம்பர் 19 ஆம் தேதி, தியாகராயர் நகரில் உரை யாற்றும்பொழுது கூட வலியோடுதான், அம்மா, அம்மா என்று சொல்லிக்கொண்டுதான் உரையாற்றினார்.

பெரியார் பற்றாளரின் கேள்வியும் - தந்தை பெரியாரின் பதிலும்!

விடயபுரத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமை ஏற்பாடு செய்தவர் பண்ணையத்துக்காரர், அப்பாசாமி நாயுடு அவர்கள். அய்யாவிடம் தனிப் பற்றுள்ளவர் அவர். இயக்கத்தைச் சேர்ந்தவர் அல்ல; பெரியார் பற்றாளர் அவர். 

தந்தை பெரியாரோடு தனியே உரையாடிக் கொண் டிருந்தபொழுது, ‘‘அய்யா எனக்கு ஒரு சந்தேகம்'' என்றார்.

‘‘என்ன சந்தேகம், கேளுங்கள், தாரளமாக'' என்றார் தந்தை பெரியார் அவர்கள்.

நீங்கள் உரையாற்றும்பொழுது, வலியால் நீங்கள் ‘‘அம்மா, அம்மா'' என்றுதானே சொன்னீர்கள்; அப்பா, அப்பா என்று சொல்லவில்லையே, அதற்குக் காரணம் ஏதாவது இருக்கிறதா? என்று கேட்டார்.

அன்னைக்கு இருக்கின்ற இடம் தனித்துவம்மிக்கது!

பட்டென்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்; ‘‘ஏங்க, இது ஒன்றும் பெரிய விஷயமே அல்ல. அம்மாதானே நாம் தெரிந்துகொண்ட முதல் ஆள். அப்பா என்று ஏன் கூப்பிடவில்லையே என்று கேட்டீர் களே, அம்மா சொன்ன பிறகுதானே அப்பாவை நமக்குத் தெரியும். அம்மாதான் முதலில் நமக்கு. ஆகவேதான், அம்மா, அம்மா என்றேன். முதலில் ஆரம்பித்தது, கடைசிவரையில் ஞாபகத்தில் இருக்கிறது'' என்றார் தந்தை பெரியார்.

ஒரு தாய், ஒரு அன்னை என்று சொல்லுகின்ற நேரத்தில், அன்னைக்கு இருக்கின்ற இடம் தனித்துவம் மிக்கது.

அதிலும் எங்களைப் போன்ற, அய்யா பெருங் கவிக்கோ போன்ற உலகத்தைப்பற்றி கவலைப்பட்டு, குடும்பத்தைப்பற்றி கவலைப்படாமல், பிள்ளைகளைப் பற்றி கவலைப்படாமல் இருக்கின்றவர்களின் பிள்ளை களை, அவர்கள் ஒழுங்குபடுத்தியதினால்தான், திரு வள்ளுவர், ஆண்டவர் எல்லாம் இன்றைக்கு நல்ல நிலையில் இருக்கிறார்கள்.

நல்ல குடும்பத்திற்கு ஒரு தலைவியாக இருந்து தொண்டு செய்திருக்கிறார் சேது அம்மையார்.

அவர்களுடைய நினைவைப் போற்றுவதற்கு ஒரு நல்ல வழி என்னவென்றால், யாருக்கோ ஒன்று கொடுத்து, அது எங்கோ போகிறது என்று சொல்லாமல், ஒவ்வொருவரையும் அழைத்து, அவர்களை உற்சாகப் படுத்துகின்ற வகையில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த வா.மு.சே. அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

நல்லவர்களை அடையாளம்கண்டு ஊக்கப்படுத்தவேண்டும்,  உற்சாகப்படுத்தவேண்டும்

இதேபோன்று, மற்றவர்களும், உற்றார் உறவினர் களுக்கு நினைவு நாளை கடைப்பிடிக்கும்பொழுது வெறும் பாராட்டுரை மட்டுமாக இல்லாமல், இப்படி நல்லவர்களை அடையாளம் கண்டு ஊக்கப்படுத்த வேண்டும்,  உற்சாகப்படுத்தவேண்டும், பாராட்டவேண் டும்.

தமிழர்களிடையே பாராட்டுகின்ற குணம் மிகக் குறைவு. பாராட்டவேண்டும் என்று நினைப்பார்கள், யோசனை செய்துகொண்டிருப்பார்கள். அதற்கு இடமில் லாத அளவிற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக, ஆண்டுதோறும் இதை செய்கிறார்.

பொற்கிழி என்றால், ஒரு பெரிய தொகை என்பது அல்ல. ஓர் அடையாளம் - இதில் தொகை முக்கியமல்ல, அதில் இருக்கின்ற உணர்வுகள்தான் முக்கியம். அதற்குப் பின் என்ன இருக்கிறது? அவருடைய தொண்டறம். தமிழ்த் தொண்டறம் என்பதுதான் மிகவும் முக்கியம்.

அப்படிப்பட்ட ஓர் அற்புதமான சூழலை இங்கே உருவாக்கியிருக்கிறார்கள்.

 “வஞ்சகர் வந்தவர் தமிழால் செழித்தார்!

வாழ்வினில் உயர்ந்தபின் தமிழையே பழித்தார்!

நம் செயல்கள், ஒழுக்கங்கள் அனைத்தையும் அழித்தார்!

நாம் உணர்ந்தோம் அவர் அஞ்சி விழித்தார்!” 

என்று சொல்வதற்குப் பதிலாக, நாம் உணர்ந்தோமா? என்கிற கேள்விக்குறியும், இன்றைக்கு அவர் அஞ்சி விழித்திருக்கிறாரா? என்கிற கேள்விக்குறியும் இன்றைய சூழலில் வந்திருக்கக்கூடியது.

பாராட்டப்பட்டவர்களில் எல்லா மதத்தினரும் இருக்கிறார்கள்!

எனவேதான், அருமை அய்யா வா.மு.சே. அவர்கள் எல்லாம் இந்தக் கொள்கையிலேயே  இருக்கிறார்கள். அதைவிட இந்தப் பாராட்டு விழாவில் இன்னொரு பகுதி என்னவென்றால், அவர் எப்படி தேர்ந்தெடுத்தார் என்று தெரியவில்லை; அல்லது இயல்பாக வந்ததா என்றும் தெரியவில்லை.

எல்லா மதமும் இருக்கிறது. நாம் மதத்தை ஒப்புக் கொள்ளாதவர்கள். மதத்திற்கு அப்பாற்பட்டவர்களும் இங்கே இருக்கிறார்கள். எங்களைப் போன்றவர்களும் இருக்கிறார்கள்.

எம்மதமும் சம்மதமும் என்று சொல்பவர்களும் இங்கே இருக்கிறார்கள். 

தமிழ் எல்லோரையும் இணைக்கும்; தமிழ் யாரையும் பிரிக்காது!

ஆகவே, மதம், ஜாதிக்கெல்லாம் இங்கே இடமில்லை. தமிழுக்குத்தான் இடம்; தமிழ்த் தொண்டுக்குத்தான் இடம் - தமிழ் எல்லோரையும் இணைக்கும்; தமிழ் யாரையும் பிரிக்காது; தமிழ் நிலம் ஒன்றுபடுத்தக் கூடியது. ‘‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்'' என்று சொல்வதுதான், தமிழ் நாட்டு, பன்னாட்டுத் தமிழுறவு இதற்கான ஓர் அற்புதமான சூழலை உருவாக்கியிருக்கிறார்கள்.

இன்னமும் தமிழ் கோவில் கருவறைக்குள்ளே நுழைய முடியவில்லை, தமிழ்நாட்டிற்குள். இன்ன மும் தமிழிலும் அர்ச்சனை. தமிழில் அர்ச்சனை தேவை என்று நீதிமன்றங்களுக்குச் சென்று நாம் போராடவேண்டிய கட்டம் இருக்கிறது. 

அதேபோன்று, உயர்நீதிமன்றத்திற்குக்கூட, தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்று பெயர் வைப்ப தற்காகப் போராடவேண்டிய அளவிற்கு இருக் கிறது.

நஞ்சுக்கு தேன் தடவுவதுபோன்று, தமிழைப் பாராட்டுகிறார்கள்

நம்முடைய மொழி என்று சொன்னால், இவ்வளவு கொடுமைப்படுத்துகிறவர்கள், இன்றைக்குத் தமிழையே பாராட்டுவது போன்று, மேலே தேன் தடவுகிறார்கள் - நஞ்சுக்கு தேன் தடவுவதுபோன்று, தமிழைப் பாராட்டு கிறார்கள்.

இதுவரையில் வெள்ளைக்காரர்கள் வந்தால், ஆங் கிலத்தை விட்டுவிட்டுச் சென்றான் என்று சொல்லக் கூடியவர்களைப் பார்த்துக் கேட்கிறோம்; அவன்கூட நம்முடைய மொழியைக் கொச்சைப்படுத்தவில்லை. இந்த மொழியினுடைய பெருமையை உலகுக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

ஜி.யு.போப் வந்தார், திருக்குறளை மொழி பெயர்த்தார். அதேபோன்று வீரமாமுனிவர் வந்தார்; தேம்பாவணி மற்றவை வந்திருக்கின்றன.

அதேபோன்று, திராவிடத்தினுடைய பெருமை களைப்பற்றி நிறைய ஆய்வுகளை நடத்தியிருக்கிறார்கள்.

ஆனால், யாரும் தமிழை நீஷ பாஷை என்று சொன்னது கிடையாது. ஆனால், தமிழை நீஷ பாஷை என்று சொல்லி, நம்மை இழிவுபடுத்தி, அவர்களுடைய மொழிதான் தேவ பாஷை என்றார்கள். 

தமிழை நீஷ பாஷை என்று சொன்னவரை  லோக குரு என்கிறார்கள்!

நான் குளித்துவிட்டு அர்ச்சனை செய்யும்பொழுது நீஷ பாஷையில் பேசமாட்டேன் என்று சங்கராச்சாரியார் போன்றவர்கள் சொல்வார்கள். அதையெல்லாம் பொறுத்துக்கொண்டு அவரை லோக குரு என்று சொல்வோம்.

இதுபோன்ற சூழல்கள் இருக்கின்றன. அதைக் கண்டு உணர்வுகள் வரவேண்டாமா? அந்த உணர்வுகளை உருவாக்கக்கூடிய அற்புதமான சிறப்பான ஊற்று களாகத்தான் இங்கே பாராட்டப்பட்ட உங்களையெல்லாம் எங்களைப் போன்ற தொண்டர்கள் நினைக்கிறோம்.

இன்றைக்கு நமக்கு ஏற்பட்டு இருப்பது மிகப்பெரிய அறைகூவல்

ஆகவே, உணர்வுகளை உண்டாக்குங்கள். இன்றைக்கு நமக்கு ஏற்பட்டு இருப்பது மிகப்பெரிய அறைகூவலாகும். அந்த அறைகூவலை சந்திப்ப தற்காகத்தான் நாங்கள் இருக்கிறோம். ஆனால், உங்களைப் போன்றவர்களுடைய ஆதரவு என்பது இருக்கிறதே - நேரிடையாக நீங்கள் களத்திற்கு வரவில்லை என்றாலும்கூட, உங்கள் ஒவ்வொருவருடைய ஊக்கமும், உங்களுடைய சிந்தனையும், நீங்கள் தருகின்ற ஆக்கமும் அந்தப் போரில் அதனால்தான் வெற்றியடைந்து தீருவோம் என்பதுதான் மிக முக்கியமானது.

செந்தமிழுக்குத் தீமை வந்த பின்னும்

இந்தத் தேகம் இருந்து ஒரு லாபமுண்டோ?

என்று கேட்டார் புரட்சிக்கவிஞர் அவர்கள்.

அதேபோன்றுதான், செந்தமிழை, செழுந்தமி ழாக்கவேண்டும் என்பதற்காகத்தான் பெருங் கவிக்கோ நாடு முழுவதும் சுற்றிக் கொண்டிருக் கிறார்; உலகம் முழுவதும் சுற்றிக் கொண்டிருக்கிறார்.

எனவேதான், ஆண்டு தவறாமல் இந்தப் பணியை செய்வதைத் தவிர அவருக்கு வேறு பணியில்லை என்று சொல்லும்பொழுது, தான் மட்டும் இதை செய்யவில்லை; தான் மட்டுமே செய்தோம் என்று இருக்கக் கூடாது.

உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!

ஒரு பெரிய தமிழ்க் குடும்பம் இருக்கிறது; பெருங் குடும்பம் இருக்கிறது; ஆற்றல் வாய்ந்தவர்கள் இருக்கிறார்கள்; அறிவில் நிறைந்தவர்கள் இருக்கிறார்கள்; பெருமைக்குரியவர்கள் இருக்கிறார்கள். அவர்களை யெல்லாம் தமிழ்நாடு இதோ அடையாளம் கண்டுகொள், தவறாதே என்று சொல்லுவதற்காக இந்த விழாவை அவர் பயன்படுத்தி, உங்களையெல்லாம் அழைத்துப் பெருமைபடுத்தி இருக்கிறார்கள். உங்கள் அனை வருக்கும் வாழ்த்துகள்! இதுபோன்ற நிகழ்வுகள், ஒவ் வொருவர் வீட்டு நிகழ்விலும், இதுபோன்று மற்றவர் களைப் பாராட்ட, உற்சாகப்படுத்த, நம்முடைய லட்சி யங்களை, இலக்குகளை நிர்ணயிக்க இந்த வாய்ப்புகளை உருவாக்கவேண்டும் என்று கேட்டு, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி, இறுதிவரையில் இருக்க இயலாத ஒரு சூழ்நிலைக்காக நீங்கள் பொறுத்தருளவேண்டும் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

அய்யா பெருங்கவிக்கோ அவர்களுக்கு நம்முடைய வேண்டுகோள்!

இன்னொன்று, மிக அன்போடும், உரிமையோடும் நான், நம்முடைய அய்யா பெருங்கவிக்கோ அவர் களிடம் கேட்கிறேன். ‘திருவடி' என்றெல்லாம் சொல்லாதீர்கள்.

நாம் நன்றாக  நிமிர்ந்து நிற்கவேண்டியவர்கள்;  அன்பு காட்டுங்கள்; அன்பைப் பொழியுங்கள். நீங்கள் சாதாரணமா சொன்னால்கூட அன்புதான், அதி லொன்றும் சந்தேகமேயில்லை.

ஆகவேதான், இப்படியெல்லாம் திருவடியைப்  பார்த்து, பார்த்துதான் நாமெல்லாம் மேலே வர முடியாத அளவிற்கு ஆகிவிட்டோமோ என்கிற காரணத்தினால் தான், அருள்கூர்ந்து உங்களுடைய அன்பைக் காட்டுங்கள்; அன்பைப் பொழியுங்கள்; ஆனால், தயவு செய்து திருவடியை நாடாதீர்கள்.

குனிந்தவர்களை நிமிர்த்துவதுதான் 

பெரியார் திடலின் பணி!

குனியவேண்டாம்; இங்கே :அவர் குனிந்தபொழுது கூட சொன்னேன்; எல்லா இடங்களிலும் நாங்கள் சொல்வோம், குனிந்தவர்களை நிமிர்த்துவதுதான் பெரியார் திடலின் பணி. 

இங்கே வந்து யாரும் குனியவேண்டிய அவசியம் கிடையாது. குனிந்தவர்கள் நிமிரவேண்டும்; நாம் நிமிர்ந்தால்தான், எதிரிகள் பயப்படுவார்கள்; இன எதிரிகள் இன்றைக்கு வலிமைப் பெற்றுக்கொண்டிருக் கின்ற காலகட்டத்தில், உங்களைப் போன்றவர்களின் பணி என்பது அற்புதமான பணி, ஈடில்லாத பணி, ஒப்பிட முடியாத பணி - அந்தப் பணிகள் சிறக்க, நல்ல அளவிற்கு நீண்ட உடல்நிலையை நீங்கள் பெறவேண்டும். அது நம்முடைய வாய்ப்பு. ஆக, அதிலும் நீங்கள் அதிகக் கவனம் செலுத்தவேண்டும்.

வரவேற்புரையாற்றிய நம்முடைய திருவள்ளுவர் அவர்கள் ஒரு செய்தியை சொன்னார்.

அம்மா அவர்கள் நினைக்குரியவர். அதேபோல, மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங்களில் நிறைந்திருக் கிறவர் அய்யா முத்துராமலிங்கம் அவர்களாவார்கள்.

நாமெல்லாம் படிப்பு வராத கூட்டம் என்று ஒரு காலத்தில் சொல்லப்பட்டது. தகுதி, திறமை எல்லாம் இவர்களுக்குக் கிடையாது என்று சொன்னார்கள்.

ஆனால், அவர் எந்த அளவிற்கு உயர்ந்தார் என்று தெரியுமா?

அவர் இன்றைக்கு இல்லை. நீண்ட காலம் அவர் இருந்திருக்கவேண்டும். அது இன்னும் நம்முடைய சமுதாயத்திற்குப் பயன்பட்டு இருக்கும்.

‘‘சென்ட்ரல் போர்டு ஆஃப்  டைரக்டர்ஸ் ஆக்சஸ்'' என்று சொல்லக்கூடிய அளவிற்கு, இந்தியாவில் அந்த இடத்தில் முன்பும் தமிழர்கள் இல்லை; பின்னாளிலும் அந்த இடத்தில் தமிழர்கள் இல்லை. அவ்வளவு பெரிய வாய்ப்புகளில் அவ்வளவு சிறப்பாக அவர் வந்தார்.

அவருக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறது? இந்த நம்பிக்கை இருக்கிறதா? அவர்கள் எதிலே மாறுபடு கிறார்கள்? என்பதையெல்லாம் நாங்கள் பார்ப்பதே கிடையாது. அவர்களுடைய உணர்வுகள் சரியாக இருக்கிறதா என்பதுதான் மிக முக்கியம்.

தமிழைக் காக்க, தமிழர்களைக் காக்க திராவிடம் வெல்லும், நாளைய வரலாறு இதைச் சொல்லும்

எது நம்மை இணைக்கிறது என்பது முக்கியமே தவிர, எது நம்மைப் பிரிக்கிறது என்பது முக்கியமல்ல.

எனவே, 

ஒன்றுபடுவோம்!

தமிழால் ஒன்றுபடுவோம்!

தமிழ் இன உணர்வால் ஒன்றுபடுவோம்!

தமிழைக் காக்க, தமிழர்களைக் காக்க திராவிடம் வெல்லும், நாளைய வரலாறு இதைச் சொல்லும் என்கிற உணர்வோடு இந்த நிகழ்ச்சியிலிருந்து விடைபெறுவதற்கு மன்னிக்கவேண்டும் என்று கேட்டு, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.

வாழ்க பெரியார்!

வளர்க பகுத்தறிவு!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற் றினார்.

No comments:

Post a Comment