மனுநீதி இங்கே இருக்கிறதே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 19, 2022

மனுநீதி இங்கே இருக்கிறதே!

இடஒதுக்கீடு என்ற பிரச்சினையில் ஆர்.எஸ்.எசும் சரி, அதன் அரசியல் வடிவமான பிஜேபியும் சரி, தங்களது வஞ்சகமான உயர் ஜாதி பார்ப்பன ஆதிக்கக் குரலை நெருப்பாக வெளிப்படுத்தி வந்திருக்கின்றன.

குஜராத் மாநிலத்தில் பட்டியலின மக்களுக்கு அளிக்கப்பட்ட இடஒதுக்கீட்டை எதிர்த்துப் பெருங் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் யார்?

இடஒதுக்கீடுக்கு எதிராகக் குஜராத்தில் நடைபெற்ற போராட்டத்தை ஆதரித்து தமிழ்நாட்டிலும் பேரணியை நடத்த (22.3.1981) முன் வந்தனர் பார்ப்பனர்கள். அதற்குப் பெயர் என்ன தெரியுமா? உரிமைப் பறிக்கப்பட்ட முற்படுத்தப்பட்டோர்!

அதற்கு முதல் நாள் சென்னை தியாகராயர் நகரில் திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டனப் பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது. அந்தப் பொதுக் கூட்டத்தில் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் ஓர் அறிவிப்பினை வெளியிட்டார். முற்படுத்தப்பட்ட ஆதிக்கவாதிகள் பேரணி கிளம்பும் அதே இடத்தில் எதிர்ப்புப் பேரணி ஒன்றை நடத்துவோம் என்பது தான் அந்த அறிவிப்பு. தடை விதித்தால், அது மீறப்படும் என்றும் போர்ச் சங்கு ஊதினார். அதன் விளைவு இடஒதுக்கீடு எதிரிகளின் பேரணிக்குத் தடை விதிக்கப்பட்டதால் திராவிடர் கழகம் பேரணியை நடத்த வேண்டிய அவசியம் இல்லாது போயிற்று.

இடஒதுக்கீட்டை எதிர்த்து உண்ணாவிரதம் ஒன்றை அறிவித்தனர் பார்ப்பனர்கள் (15.7.1981).  அதனை எதிர்த்து உண்ணும்விரதம் என்று திராவிடர் கழகம் அறிவித்தது. இரு போராட்டங்களுக்கும் அனுமதியளிக்கவில்லை காவல்துறை; நமது நோக்கம் நிறைவேறியதில் திராவிடர் கழகத்துக்கு வெற்றி தானே!

தாழ்த்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்து சென்னை அண்ணாசாலையில் தலைமை அஞ்சலகம் முன் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தனர் பார்ப்பனர்கள் (3.7.1985). அதே நாளில் எதிர் உண்ணும்விரதப் போராட்டத்தை அறிவித்தது திராவிடர் கழகம். இரு சாரார்க்கும் அனுமதி மறுக்கப்பட்டது. நமது நோக்கம் நிறைவேறியது. இப்படி தொடர்ந்து இடஒதுக்கீட்டை எதிர்த்து வந்தவர்கள் தான் பார்ப்பனர்கள் - இடஒதுக்கீட்டால் தகுதி திறமை கெட்டு ஒழிந்து விடும் என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டார்கள்.

அதே பார்ப்பனர்கள் இப்பொழுது கொல்லைப்புற வழியில் பொருளாதார அளவுகோல் என்ற பெயரில் இடஒதுக்கீடு பெறுகிறார்களே - இப்பொழுது மட்டும் தகுதி திறமை செத்து ஒழியாதா? 

நீண்ட போராட்டத்துக்குப் பிறகு (திராவிடர் கழகம் நடத்திய மாநாடுகள் 42 - போராட்டங்கள் 16) மண்டல் குழுப்பரிந்துரையின் அடிப்படையில் பிற்படுத்தப் பட்டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீட்டைசமூகநீதிக் காவலர் பிரதமர் வி.பி. சிங் அறிவித்தார் (7.8.1990)

அடுத்து வந்த பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயிஎன்ன செய்தார் தெரியுமா? ஒன்றிய அரசுப் பணியாளர்களின் ஓய்வு வயதினை 58லிருந்து 60 ஆக உயர்த்தி சட்டம் பிறப்பித்தார். இதனால் 28 லட்சம்பேர் பலன் அடைவார்கள் என்று 'சமத்தாக' சாமர்த்தியமான பதிலைச் சொன்னார்.

ஏற்கெனவே ஒன்றிய அரசுப் பணிகளில் ஆக்டோபசாக ஆதிக்கம் செலுத்திய பார்ப்பனர்கள் தானே பலன் பெற்றார்கள். பிரதமர் வி.பி.சிங் கொண்டு வந்த பிற்படுத்தப்பட்டோருக்கான 27 விழுக்காடு அடிப்படையில் பார்த்தால் 7 லட்சத்து 56 ஆயிரம் பிற்படுத்தப்பட்டோருக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்பு தட்டிப் பறிக்கப்பட்டது. 6 லட்சத்து 30,000 பட்டியலின மக்களின் வாய்ப்பு தடை செய்யப்பட்டது.

எல்லா வகைகளிலும் தந்திர முறைகளையும், சூழ்ச்சிகளையும் கையாண்டும் இடஒதுக்கீட்டை ஒழிக்க முடியவில்லை என்ற நிலையில்தான் இப்பொழுது பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு என்று நாடாளுமன்றத்தில் தங்களுக்குள்ள ஆதிக்கத்தைப் பயன்படுத்தி சுனாமி வேகத்தில் சட்டத்தை நிறைவேற்றி செயல்படுத்தவும் தொடங்கி விட்டனர். 

தாங்கள் நினைத்ததையும் சாதித்துக் கொண்டு விட்டனர். மாதம் 66 ஆயிரத்து 667 ரூபாய் சம்பாதிக்கும் உயர் ஜாதியினர் ஏழைகளாம். 5 ஏக்கர் வரை அவர்களுக்கு நிலம் இருக்கலாமாம். 1000 சதுர அடி அளவுக்கு வீடும் இருக்கலாமாம். இத்தகையவர்கள் பா.ஜ.க. என்ற பார்ப்பனர் ஜனதா கட்சி ஆட்சியில் ஏழைகளாம்.

ஆண்டுக்கு இரண்டரை இலட்சம் வருமானம் வந்தால் அவர் வருமான வரி கட்ட வேண்டும் என்பது  கட்டாயம். இந்த நிலையில் ஆண்டு ஒன்றுக்கு 8 லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் உயர் ஜாதியினர் எப்படி ஏழைகள் ஆவார்கள்?

மனு நீதி எங்கே இருக்கிறது என்று  கேள்வி கேட்போருக்குப் பதில், மனுநீதி 103ஆம் அரசமைப்புச் சட்டத்தில் (ணிகீஷி) இதோ இருக்கிறதே - என்ன பதில்?

No comments:

Post a Comment