வாக்காளர் பட்டியல் - உஷார்! உஷார்!! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 23, 2022

வாக்காளர் பட்டியல் - உஷார்! உஷார்!!

 மகாராட்டிரம், குஜராத் போன்று கருநாடகாவிலும் சிறுபான்மையின வாக்காளர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் வாக்காளர் உரிமையைப் பறிக்க திட்டமிட்டு, வாக்காளர்ப் பட்டியலை தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் சேகரித்து, வந்துள்ள மோசடியை காங்கிரஸ் வெளிக் கொண்டு வந்ததால் கருநாடகாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த மோசடிக்கு பாஜக மேனாள் சட்டமன்ற உறுப்பினர் நந்திசாரெட்டி ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ரூ.17 லட்சம் முன்பணமும் கொடுத்துள்ளார்.

வாக்காளர்ப் பட்டியல் முறைகேட்டில் ஆட்சியாளர்கள் தப்பிக்க, சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவும் மேனாள் முதலமைச்சர் சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார். கருநாடக சட்டப் பேரவை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

"வாக்காளர்ப் பட்டியல் முறைகேடு நகைப்புக்குரியது என்று முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். இந்த முறைகேட்டிற்கு மூளையாக செயல்பட்டவர்களை விட்டுவிட்டு, தனியார்  நிறுவனத்தில் பணியாற்றும் நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதன் மூலம்  கருநாடக பா.ஜ,க. அரசின் செயல்பாடுகள் எவ்வளவு நகைப்புக்குரியன என்பதை காவல்துறை வெளிப் படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் நாங்கள் முதலமைச்சருக்கு எதிராகவே புகார் கொடுத்துள்ளோம். ஆனால் சொற்ப ரூபாய் சம்பளம் வாங்கும் ஏழைத் தொழிலாளர்கள்மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதன் மூலம் அவர்களைப் பலிகடா ஆக்கிவிட்டு, தாங்கள் தப்பிக்க ஆட்சியாளர்கள் சதித் திட்டம் தீட்டியுள்ளனர். முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தன்னை பாதுகாத்துக்கொள்ள, இந்த வாக்காளர் முறைகேடு விவகாரத்தை ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஒப்பிட்டுள்ளார்.

ஒரு தனியார் நிறுவனத்தின் பின்னணி என்ன என்பதை ஆராயாமல், அனுமதி வழங்கியதற்கும், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மாநில அரசு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தியதற்கும் என்ன சம்பந்தம்?. இலவசமாக வாக்காளர்ப் பட்டியல் திருத்தப் பணிகளை செய்த சிலுமே நிறுவனத்தின் பின்னணி என்ன?, அதன் உரிமையாளர் யார்?, அதன் நிதி நிலை திறன் என்ன?, எத்தனை ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள்?, அந்த நிறுவனத்திற்கு நிதி எங்கிருந்து வருகிறது? என்பது போன்ற விடயங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். புகார் வந்தவுடன் அந்த நிறுவனத்திற்கு வழங்கிய அனுமதியை மாநகராட்சி ரத்து செய்துள்ளதை நான் வரவேற்கிறேன். ஆனால் நடந்துள்ள தவறுக்கு அனுமதியை ரத்து செய்த தண்டனை மட்டும் போதுமா?  அனுமதி ரத்து மூலம் அதில் தவறு நடந்துள்ளது என்பதை அரசே ஒப்புக்கொண்டு விட்டதே!  சமூக சேவைக்கு பல்வேறு வழிகள் இருக்கும்போது, அந்த நிறுவனம் தாமாக முன்வந்து வாக்காளர்ப் பட்டியல் திருத்தப் பணியை இலவசமாக செய்கிறோம் என்று கூறியபோது, மாநகராட்சி அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்திருக்க வேண்டும் - ஏன் வரவில்லை?" 

வாக்காளர்களின் தகவல்களைத் திருடியதாக, சிறுப்பான்மை இனத்தவரின் வாக்குரிமையை ரத்துசெய்யும் முறைகேட்டில் ஈடுபட்ட தாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால், சிலுமே நிறுவனத்தின்மீது உரிய விசாரணை நடத்தும்படி கூறி மாநகராட்சி இணை ஆணையர் ரங்கப்பா, அல்சூர்கேட் மற்றும் காடுகோடி காவல் நிலையங்களில் புகார் அளித்திருந்தார்.

அதன்பேரில், சிலுமே நிறுவனத்தின் இயக்குநர் லோகேஷ் மற்றும் நிர்வாகிகள்மீது   அல்சூர்கேட் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினார்கள். இந்த நிலையில்  நேற்று முதல் நாள்  காடுகோடி காவல் நிலையத்திலும் சிலுமே நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. காவல் நிலையங்களில் வழக்குப்பதிவானதும், மல்லேசுவரத்தில் உள்ள சிலுமே நிறுவனத்தை மூடிவிட்டு, நிர்வாகிகள் ஓடிவிட்டனர். இந்த நிலையில், அல்சூர்கேட் காவல்நிலைய ஆய்வாளர் ஜக்கேஷ் தலைமையிலான காவலர்கள் அந்த நிறுவனத்தின் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்றார்கள். நிறுவனத்தில் இருந்த ஆவணங்களை பரிசோதனை செய்தனர். இந்த சோதனையின் போது பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதால், அவற்றை கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.

இதற்கிடையில், வாக்காளர்களின் தகவல்களைத் திருடிய விவகாரத்தில் சிலுமே நிறுவனத்தில் பணியாற்றிய தர்மேஷ், ரக்சித், ராகவேந்திரா உள்பட 4 ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் மேலும் தலைமறைவான சிலுமே நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

பாஜக சட்டமன்ற உறுப்பினர் நந்திசாரெட்டி முறைகேட்டில் ஈடுபட்ட நிறுவனத்திற்கு ரூ.300 கோடி நிதி ஒதுக்கி, அதில் ரூ.17 லட்சம் முன்பணமாக கொடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக நந்திசா ரெட்டியிடம் ஊடகவியாளர்கள் கேட்ட போது "நான் போட்டியிடும் தொகுதியில் என்னுடைய வெற்றி வாய்ப்பு குறித்து புள்ளி விவரம் கேட்டுத்தான் அந்த நிறுவனத்திற்கு சில லட்சங்களை வழங்கினேன், அதுவும் தேர்தல் செலவில் காட்டப்பட்டுள்ளது. மற்றபடி அந்த நிறுனத்திற்கு நான் முறைகேட்டில் ஈடுபடுங்கள் என்று கூறிப் பணம் கொடுத்தது என்பது எல்லாம் வதந்தி" என்று கூறியுள்ளார்.

20 ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் இதே போன்று வாக்காளர் பட்டியலில் மோசடிகள் செய்து பாஜக  பெரும்பாலான இடங்களை வென்றது, மோடி ஆட்சியிலும் இதே போன்று மோசடிகள் செய்து பல்லாயிரக்கணக்கான சிறுபான்மையின வாக்காளர்களின் பதிவுகள் நீக்கப்பட்ட நிலையில், தற்போதுவரை அவர்களால் வாக்குரிமையைப் பெற முடியவில்லை. தற்போது அதே போன்று பா.ஜ.க. கருநாடகாவிலும் மோசடிகளைச் செய்ய திட்டமிட்டு நடைமுறைப்படுத்தி விட்டது; ஆனால் அதற்குள் அங்குள்ள காங்கிரஸ் கட்சி விழித்துக் கொண்டு மோசடிகள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் போராட்டம் நடத்தி வருகிறது.

பிஜேபி என்றாலே முறைகேடு என்று அகராதியில் பொருள் கூறி விடலாம். 2024ஆம் ஆண்டு நடக்கும் மக்களவைத் தேர்தலுக்கு முன் என்னென்ன முறைகேடுகள் அரங்கேறுமோ என்று தெரியவில்லை. அரசியல் கட்சிகள் மட்டுமல்ல - பொது மக்களும் விழிப்பாக இருப்பது  தங்கள் எதிர்காலத்துக்கு அவசியமாகும்.

No comments:

Post a Comment