தகுதி - திறமை? 80 ஆண்டுகளுக்கு முன் பனகல் அரசர் போட்ட உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 26, 2022

தகுதி - திறமை? 80 ஆண்டுகளுக்கு முன் பனகல் அரசர் போட்ட உத்தரவு

மதுரையில் சமஸ்கிருத மாநாடு நடைபெற்றது. அன்றைய மெட்ராஸ்  மாகாண முதல்வராக இருந்த பனகல் அரசர் மாநாட்டின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

பார்ப்பனரல்லாதோர் இயக்கமாக உருவெடுத்த நீதிக்கட்சியின் சார்பில் முதல்வரானவர் அவர்.

மாநாட்டுக்கு அவரை அழைத்த பார்ப்பனர்கள், திட்டமிட்டு தமிழில் பேசுவதைத் தவிர்க்கிறார்கள்.

முதல்வருக்கு சமஸ்கிருதம் தெரியாதே என்ற எண்ணத்தில், பனகல் அரசரைப் பற்றி கேலியும், கிண்டலுமாக சமஸ்கிருதச் சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன.

எல்லோரும் கை கொட்டிச் சிரிக்கிறார்கள்.

அமைதியாக அமர்ந்திருக்கிறார் பனகல் அரசர்.

நிறைவாக முதல்வர் பேசுவார் என்று அறிவிக்கப்படுகிறது. பனகல் அரசர் தனது பேச்சை ஆரம்பிக்கிறார்.

தமிழில் அல்ல,  தெளிவான சமஸ் கிருதத்தில்.

அதுவரை பேசியவர்களை விடச் சிறப்பாக, அவர்களுக்கு பதில் சொல்வது போல், இலக்கியத் தரம் வாய்ந்த சொற்பொழிவை  ஆற்றி முடிக்கிறார்.

முதல்வர் சமஸ்கிருதத்தில் எம்.ஏ., படித்தவர் என்ற தகவல் அவர்களுக்குத் தெரியாததால், அவமானப்படுத்த நினைத்தவர்கள், அவமானப்பட்டு போகிறார்கள்.

அந்த மாநாடு முடிந்த பிறகு, ஓர் உத்தரவை பிறப்பிக்கிறார் முதல்வர்.

அதுவரை மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வில் பாடமாக இருந்த, சமஸ்கிருதத்தை நீக்கும் உத்தரவு அது.

ஆங்கிலத்தில் படிக்கப் போகும் மருத்துவக் கல்விக்கும் சமஸ்கிருதத்திற்கும் என்ன சம்பந்தம்? என்ற கேள்வி முதல்வருக்கும் எழுந்திருக்கிறது.

சமஸ்கிருதம் தெரிந்தவர்கள் மட்டும் தான், அதாவது பார்ப்பனர்கள் மட்டும் தான், மருத்துவக் கல்வி படிக்க வேண்டும்.

மற்றவர்கள் படிக்கக் கூடாது  என்ற பரந்த உணர்வே அதற்குக் காரணம் என்பதை உணர்ந்தார் முதல்வர். அதனால் சமஸ்கிருதத்தை நுழைவுத் தேர்வில் இருந்து நீக்குகிறார்.

முதல்வரின் முடிவுக்கு எதிர்ப்பு வருகிறது.

மருத்துவத் துறையில் தகுதி, திறமை போய் விடும் என்கிற கேள்விகள் எழுகிறது. அதைப் புறந்தள்ளுகிறார் முதல்வர்.

அதன்பிறகு பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், முசுலீம்கள், கிறித்துவர்கள் என்று நிறையப் பேர் மருத்துவக் கல்வி படிக்கிறார்கள்.

இன்று, இந்தியாவிலேயே மிகச் சிறந்த மருத்துவர்களைக் கொண்ட ஊர் என்ற பெயரை பெற்றிருக்கிறது சென்னை.

வெளிநாட்டினர் கூட இங்கு வந்து இதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்டு போகும் நிலைமை உருவாகியிருக்கிறது.

80 ஆண்டுகளுக்கு முன் பனகல் அரசர் போட்ட உத்தரவு, செரியன், சாலமன் விக்டர் போன்ற உலகப் புகழ் பெற்ற மருத்துவர்கள் உருவாவதற்குக் காரணமாக இருந்தது என்றால், அது மிகையாகாது.

No comments:

Post a Comment