ரூ.30 கோடி ஆக்கிரமிப்பு அரசு நிலம் மீட்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 11, 2022

ரூ.30 கோடி ஆக்கிரமிப்பு அரசு நிலம் மீட்பு

  சென்னை, நவ.11 கேளம்பாக்கம் அருகே ரூ.30 கோடி மதிப்புள்ள அரசுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலத்தை அதிகாரிகள் மீட்டனர். செங்கல்பட்டு மாவட்டம், பழைய மாமல்லபுரம் சாலையில் நாவலூரில் இருந்து மாமல்லபுரம் வரை 6 வழி சாலையாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு கட்டமாக கேளம்பாக்கம் அடுத்த படூர் பகுதியில் இருந்து கேளம்பாக்கம் வரை ஒரு புறவழிச் சாலையும், பாலவாக்கத்தில் இருந்து திருப்போரூர் வழியாக ஆலத்தூர் வரை மற்றொரு புறவழிச்சாலையும் அமைக் கப்பட்டு வருகிறது. 

கேளம்பாக்கம் அருகே தையூர் கிராமத்தில் பழைய மாமல்லபுரம் சாலையில் அரசுக்கு சொந்தமான சுமார் 2.12 ஏக்கர் நிலத்தை கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் நிறுவனம் ஒன்று ஆக்கிரமிப்பு செய்திருந்தது. இந்த நிலையில், நெடுஞ்சாலைத்துறையினர் சாலை அமைப்பதற்காக அந்த இடத்தை கையகப்படுத்த சென்றனர். இதை எதிர்த்து தனியார் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த வழக்கில் ஆக்கிரமிப்பை அகற்ற தடை இல்லை என உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்தது. 

இதைதொடர்ந்து, திருப்போரூர் வட்டாட்சியர் பூங்கொடி, வட்டார வளர்ச்சி அலுவலர் பூமகள்தேவி தலைமையில், நில அளவையர், கிராம நிர்வாக அலுவலர் உள்பட அரசு வருவாய்த்துறை அதிகாரிகள் 10-க்கும் மேற்பட்டோர் சம்பந்தபட்ட தனியார் நிறுவன ஆக்கிரமிப்பில் இருந்த 2.12 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்ட கட்டடங்களை இடித்து தரைமட்டமாக்கி மீட்டனர். ஆக்கிரமிக்கப்பட்டிருந்த அந்த இடத்தின் தற்போதைய மதிப்பு சுமார் ரூ.30 கோடி மேல் இருக்கும் என அதிகாரிகள் கூறினர்.


No comments:

Post a Comment