நவம்பர் 26 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 15, 2022

நவம்பர் 26

மனிதனைப் பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பிப்பதை விட கொடிய மனித வதை வேறு ஒன்றும் இருக்க முடியாது.

 கேடு கெட்ட இந்த ஹிந்து மதத்தில் தான் அந்த நிலை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகத் தாண்டவமாடுகிறது.

இதனை ஒழிக்கக் கிளம்பியவர்கள் எல்லாம் ஒழிக்கப்பட்டார்கள் - ஒழிக்கக் கிளம்பிய அமைப்புகளும் அடையாளம் தெரியாமல் ஆக்கப்பட்டன.

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று கூறிய திருவள்ளுவருக்கே பூணூல்  மாட்டப் பார்க்கின்றனர். 'ஒரு குலத்துக்கொரு நீதி' சொல்லும் மனுதர்மத்தின் சாரம்தான் திருக்குறள் என்று கூறும் சங்கராச்சாரியார்களும் உண்டே!

இந்த நிலையில் ஜாதியை ஒழிக்க அதன் ஆணிவேர் வரை சென்று அறுத்தவர் தந்தை பெரியார். ஜாதியின் ஆதாரமான கடவுள், மதம், வேதம், சாஸ்திரம், புராணம், இதிகாசங்களின் வேர்களுக்கு வேட்டு வைத்தவர் தந்தை பெரியார்.

வடக்கே அண்ணல் அம்பேத்கரும் இங்கே தந்தை பெரியாரும் இந்த விடயத்தில் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் ஆவார்கள்.

இந்தியா சுதந்திரம்  அடைந்ததாகச் சொல்லப்பட்டது. அதற் கொரு அரசமைப்புச் சட்டமும் உருவாக்கப்பட்டது.

சுதந்திர நாட்டில் ஜாதி இருக்கலாமா? ஜாதி இருக்கும் நாட்டில் உண்மை சுதந்திரம் இருக்குமா? என்ற அறிவியல் வினாவை எழுப்பினார் தந்தை பெரியார்.

"சுதந்திர நாட்டிலே அந்நாட்டு மகன் சூத்திரனாக முடியுமா? சுதந்திர நாட்டிலே அந்நாட்டு மக்கள் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்படுவார்களா? சுதந்திர நாட்டிலே அந்நாட்டவர்களை அடிமைகள் என்றும், நீசர்களென்றும், இழி மக்கள் என்றும் கருதும் மதங்களும், புராணங்களும், சட்டங்களும் இருக்க முடியுமா? சிந்தித்துப் பார்த்துச் செயலாற்றுங்கள்"

('விடுதலை' 22.2.1961) என்று சுதந்திரச் சிந்தனை அறிவுத் தீயைக் கொளுத்திய பகலவன் தான் தந்தை பெரியார்.

ஜாதி ஒழிப்புக்காக எத்தனை எத்தனையோ போராட்டங்களை நடத்தியவர் தந்தை பெரியார்.

ஜாதியைக் காப்பாற்றுபவர்களுக்கு ரோஷம் வரும் என்ற எண்ணத்திலும், உலக மக்களிடம் இந்தியாவின் கேடு கெட்ட ஜாதி முறையை அம்பலப்படுத்தும் வகையிலும், 1957 நவம்பர் 3ஆம் தேதி தஞ்சையில் மாநாடு ஒன்றை நடத்தினார் தந்தை பெரியார்.

திராவிடர் கழகப் பொது (ஸ்பெஷல்) மாநாடு என்று அதற்குப் பெயர் சூட்டினார்.

தந்தை பெரியாரின் 79ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவையொட்டி அம்மாநாட்டில் எடைக்கு எடை ரூபாய் நாணயமும் அளிக்கப்பட்டது.

அம்மாநாட்டின் சிறப்பு அம்சம் ஜாதி ஒழிப்பே! நாடே கிடுகிடுக்கும் தீர்மானத்தை நிறைவேற்றினார்.

"ஜாதி ஒழிய தெளிவான பரிகாரமோ, விளக்கமோ இன்று முதல் 15 நாள் வாய்தாவுக்குள் இந்த அரசாங்கம் மக்களுக்கு அளிக்காவிட்டால், இந்திய அரசியல் சட்டத்தை எதிர்த்து ஒழிக்கும் முயற்சியின் அறிகுறியாக 1957 நவம்பர் 26ஆம் தேதி அன்று மாலையில் இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு பார்ப்பனரல்லாத திராவிடராலும், இச்சட்டம் நெருப்பிலிட்டுக் கொளுத்தத்தக்கது என்று இம்மாநாடு பொது மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறது" ('விடுதலை" 5.11.1957)

இதுதான் அந்தத் தீர்மானம். தந்தை பெரியார் ஏன் நவம்பர் 26 அய்த் தேர்வு செய்தார்? அந்த நாளில்தான் 1949ஆம் ஆண்டு இந்திய அரசமைப்புச் சட்டம் முழு ஒப்புதல் பெற்ற நாள். 

என்ன செய்தது அன்றைய ஒன்றிய அரசாங்கம்? நியாயமான கோரிக்கையைப் பத்து லட்சம் மக்கள் மத்தியில் தீர்மானமாக முதுபெரும் தலைவர், தமிழ்நாட்டின் தந்தை என்று மதிக்கப்படும் தலைவர் நிறைவேற்றிக் கொடுத்துள்ளாரே என்று ஒரு கணம் நிதானமாக யோசித்திருக்க வேண்டாமா?

சட்டத்தை எரிப்பவர்களுக்குக் கடும் தண்டனை கொடுப்பதில்தான் தீவிரம் காட்டினார்கள். என்ன வேடிக்கை என்றால், சட்டத்தை எரித்தால் என்ன தண்டனை என்று சட்டத்திலேயே இடமில்லை.  அப்படியொரு போராட்டத்தை அறிவித்தார் தந்தை பெரியார் - உலக வரலாற்றிலேயே கேள்விப்பட்டிராத போராட்டம் இது.

அவசர அவசரமாக சென்னை மாநில சட்டமன்றத்தில் ஒரு சட்டத்தை நிறைவேற்றினார்கள். தேசிய அவமதிப்புத் தடுப்பு மசோதா (Prevention of insult to national Honour - 1957) ஒன்றைக் கொண்டு வந்து நிறைவேற்றினார்கள்.

தேசிய கவுரவச் சின்னங்களை அவமதித்தால் மூன்றாண்டு வரை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்ற மசோதா நிறைவேற்றப்பட்டது (11.11.1957)

அதைக் கண்டு எல்லாம் கருஞ்சட்டைத் தோழர்கள் அஞ்சுவார்களா? குடும்பம் குடும்பமாக ஆண்களும், பெண்களுமாக கைக் குழந்தைகளுடன், கர்ப்பிணிப் பெண்களும் பத்தாயிரம் தோழர்கள் கொளுத்தி சாம்பலை உள்துறை அமைச்சர் திரு எம். பக்தவச்சலத்துக்கு அனுப்பி வைத்தனர்.

சிறையில் பலர் மாண்டனர், சிறையில் நோய் வாய்ப்பட்டு வெளியில் வந்த சில நாட்களிலேயே மரணத்தைத் தழுவியவர்களும் உண்டு.

ஆம் ஜாதியை ஒழிக்க மேற்கொள்ளப்பட்ட அந்தச் சட்ட எரிப்புநாளை நினைவூட்டும் வகையிலும் - போராட்டக் களத்திலே உயிர் நீத்த தோழர்களுக்குவீர வணக்கம் செலுத்தும் தன்மையிலும் - ஜாதி ஒழிப்பு உணர்வை மக்கள் மத்தியில் மேலோங்கச் செய்யும் வகையில்தான் சட்ட எரிப்புப் போராட்ட நாளான வரும் நவம்பர் 26ஆம் நாளன்று தமிழ்நாடெங்கும் திராவிடர் கழகப் பொதுக் கூட்டங்கள் நடத்திட அறிவிக்கப்பட்டுள்ளது.

வரலாற்றை நினைவு கூரவும், புதிய தலைமுறையினருக்கு எழுச்சி ஊட்டவும், ஆணவக் கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், நவம்பர் 26ஆம் தேதி பொதுக் கூட்டத்தை எழுச்சியுடன் நடத்துவீர்! நடத்துவீர்!!

No comments:

Post a Comment