மாநில அரசின் கருத்துக்கு ஆளுநர் உடன்பட்டால்- சமூகப் பாதுகாப்பு-நலன் - பெரும் பயனை விளைவிக்கும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 8, 2022

மாநில அரசின் கருத்துக்கு ஆளுநர் உடன்பட்டால்- சமூகப் பாதுகாப்பு-நலன் - பெரும் பயனை விளைவிக்கும்!

 ‘ஆன்-லைன்' சூதாட்டத்திற்குத் தடைச் சட்டம் என்பது வெறும் சட்டமல்ல - 

உயிர்களை - இளைஞர்களைக் காக்கும் இன்றியமையாத சட்டமாகும்!

முதலமைச்சருக்கும், அமைச்சரவைக்கும் பாராட்டு!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

‘ஆன்-லைன்' சூதாட்டத்திற்குத் தடைச் சட்டம் என்பது வெறும் சட்டமல்ல - உயிர்களை - இளைஞர் களைக் காக்கும் இன்றியமையாத சட்டமாகும்!  மாநில அரசின் கருத்துக்கு ஆளுநர் உடன்பட்டால்- சமூகப் பாதுகாப்பு - நலன் - பெரும் பயனை விளை விக்கும்;  அவசரச் சட்டம் இயற்றிய முதலமைச் சருக்கும், அமைச்சரவைக்கும் பாராட்டு என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

அண்மைக்கால அறிவியல் சாதனைகள் நம்மை வியக்க வைப்பவை; விந்தையானவைதான்!

மனித குலத்திற்கு ஏற்படும் இன்னல்களும், இக்கட்டுகளும் ஏராளம்!

ஆனால், எப்படி விஞ்ஞானம் கண்டுபிடித்த அணு குண்டு, மக்களை அழிக்கவும் பயன்பட்டதோ, அது போல இப்போது விஞ்ஞானக் கண்டுபிடிப்பினைத் தவ றாகப் பயன்படுத்தி, குறுக்கு வழிகளில் - கோணல் முறை களைக் கையாளுவதால் மனித குலத்திற்கு ஏற்படும் இன்னல்களும், இக்கட்டுகளும் ஏராளம், ஏராளம்!

அதில் ஒன்று, உயிர்க் கொல்லியாகிவிட்ட ‘‘ஆன்-லைன் சூதாட்டமும்'' ஆகும்!

பொதுவாக சூதாட்டம் என்பது வடக்கே ஆண்ட புராண- இதிகாச கால மன்னர்களின் வாழ்வில் மிக முக்கியமாக இடம்பெற்ற ஒரு தீய வழக்கமாகி, அது பிறகு சாதாரண மக்களுக்கும் பயன்படப் பரப்பப்பட்டன.

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் ஒரு திரைப்படத்தில், ‘‘முதல்லே கலையிலே தாங்க ஆரம் பிக்கும்; அது பிறகு ஒரு நிலையில் நிற்காதுங்க'' என்பார்! அது சூதாட்டத்திற்கு மிக மிகப் பொருத்தம். பிறவி பேதம், ஜாதியைக் கண்டித்த திருவள்ளுவர், சூதாட்டத் தினைக் கண்டித்து ஒரு தனி அத்தியாயமே - 10 குறள் களை எழுதியுள்ளார்!

பண்பாட்டுப் படையெடுப்பை எதிர்க்கும் நூல்தான் குறள் என்பதற்கு இதுவுமோர் சான்றாவணம் ஆகும்!

நாம் தொடக்கம் முதலே 

எழுதியும், பேசியும் வந்தோம்!

அறிவியலைப் பயன்படுத்தி ‘ரம்மி' சீட்டு விளை யாட்டினை ‘ஆன்-லைனில்' நடத்திட முன்வந்ததின் விளைவு! நாளும் அது குடித்த உயிர்கள் பல நூறு ஆகும் - தற்கொலை! தற்கொலை!! என்பதே தீராத வேதனை!

லாட்டரியைத் தடை செய்வதைவிட இது முன்னுரிமை பெற்று தடை செய்யப்படவேண்டிய ஒன்று என்று நாம் தொடக்கம் முதலே எழுதியும், பேசியும் வந்தோம்.

முந்தைய அ.தி.மு.க. அரசு செய்த ஒரு சட்டம்; சரியாகச் செய்யப்படாமல், சட்ட ஓட்டைகள் நிறைய இருந்ததாக அமைந்ததால், அது உச்சநீதிமன்றத்தால் செல்லாது என்று ஒரு தீர்ப்பில் கூறப்பட்டது.

அவசரச் சட்டமும் - ஆளுநர் ஒப்புதலும்!

அதற்குப் பிறகு தி.மு.க. ஆட்சி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்து, நாளும் சரித்திர சாதனைகளை நிகழ்த்திக் கொண்டுவரும் நிலையில், ‘ஆன்-லைன்' சூதாட்டத்திற்குத் தடைச் சட்டம் கொண்டு வருவது - செய்வன திருந்தச் செய்வதாக அமைந்தால்தான், சட்ட ஓட்டைகளில், சந்து பொந்து களில் புகுந்து சூதாடுவோரின் பணம் பறிபோவதை, கொள்ளையடிப்பதைத் தடுக்க முடியும் என்று உணர்ந்து, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு தனிக் கமிட்டியை நியமித்து, அறிக்கையை வாங்கி, அவ்வறிக்கையின் பரிந்துரைப்படி சட்டம் இயற்றுமுன், அவசரச் சட்டத்தை சட்ட அமைச்சர்மூலம் நிறைவேற்றி, நமது முதலமைச்சர் ஆளுநரின் ஒப்புதலும் பெற் றுள்ளார்.

பொதுமக்களிடம் கருத்துகள்  கேட்கப்பட்டதா? என்ற சட்டக் கேள்விக்கும் தக்க விடை கண்டே இந்த அவசரச் சட்டம் வந்துள்ளது!

ஏன் தாமதம் என்று சில அறியாமை அவதாரங்களின் அரசியல் உள்நோக்கக் கேள்விகளுக்கும் இதுவே பதிலாகும்!

இளைஞர்களைக் காக்கும் 

இன்றியமையாத சட்டம்!

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடர் வரும் 17 ஆம் தேதி கூடவிருப்பதால், அத்தொடரிலேயே இது தனிச் சட்டமாக நிறைவேறும் வாய்ப்பும் சிறப்பாக உள்ளது!

இது வெறும் சட்டம் அல்ல; உயிர்களை - இளைஞர் களைக் காக்கும் இன்றியமையாத சட்டம்!

இதனை தக்க வகையில் தயாரித்த தமிழ்நாடு முதல மைச்சருக்கும், சட்ட அமைச்சருக்கும், அமைச்சர வைக்கும் நமது பாராட்டுகள்.

இதுபோன்ற சமூகநலன் சார்ந்த சட்டங்களுக்கு எவ்வித குறுக்குசாலும் ஓட்டாது ஆளுநர் ஒப்புதல் அளிப்பது அவரது அரசமைப்புச் சட்டக் கடமையை சரிவரச் செய்கிறார் என்ற எண்ணத்தை உருவாக்கும். 

ஆளுநர் - அரசமைப்புச் சட்ட நெறிப்படி, மாநில அரசின் கருத்துக்கு உடன்பட்டால் விளையும் சமூகப் பாதுகாப்பு, நலன் - மக்களாட்சியில் பெரும் பயனை விளைவிக்கும் என்பது இதன்மூலம் புரியட்டும்!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

8.10.2022

No comments:

Post a Comment