பார்ப்பனர்களின் ஜாதி ஒழிப்புப் பாசாங்கு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 28, 2022

பார்ப்பனர்களின் ஜாதி ஒழிப்புப் பாசாங்கு!

ஜாதி ஒழிப்பு வீரர்கள் போல பார்ப்பனர்கள் நீட்டி முழங்குவார்கள். எந்த இடத்தில்? எந்த சந்தர்ப்பத்தில்?

எடுத்துக்காட்டுக்கு ஒன்றைச் சொல்லலாம். 22.10.2022 நாளிட்ட 'தினமலர்' ஏட்டில் சிந்தனைக் களம் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியவர் எழுத்தாளர் என்ற மூடு திரையில் ஒளிந்து கொண்டிருக்கும் ஒரு பூணூல் திருமேனி.

என்ன எழுதுகிறார்?

"ஜாதியை தெருப் பலகைகளில் அழிப்பதற்குப் பதில், பிறப்பு, படிப்பு, வேலை என ஆரம்பித்து, அனைத்து விண்ணப்பங்களிலும் ஜாதி, மதம் பற்றி கேட்பதைத் தவிர்க்க வேண்டும். அவற்றை முளையிலேயே கிள்ளி எறியலாமே!" என்று ஜாதி ஒழிப்புக்கு எப்படிப்பட்ட கருத்துத்தானம் செய்கிறார் பார்த்தீர்களா?

கல்வி, வேலை வாய்ப்பில் ஜாதியைக் கேட்பது கூடாதாம் - விண்ணப்பப் படிவங்களில் ஜாதி பற்றிய குறிப்பு இருக்கக் கூடாதாம்!

எங்குச் சுற்றி வந்தாலும் அவர்களின் கண்களை உறுத்துவது - ஆண்டாண்டுக் காலமாகக் கல்வி, வேலை வாய்ப்பு, ஜாதியின் அடிப்படையில் மறுக்கப்பட்டவர் களுக்கு, அந்த ஜாதியின் அடிப்படையில், சமூக அடிப்படையில்  (Socially and Educationally Backward Classes of Citizens) கல்வி, வேலை வாய்ப்பு வழங்குவதன்மீதுதான்.

இதை நீக்கினால் ஜாதி ஒழிந்து விடுமாம். தெருக்களுக்கு இருக்கும் ஜாதிப் பெயர்களை நீக்குவதால் ஜாதி ஒழியாதாம்.

'சோ'வாக இருந்தாலும், குருமூர்த்தியாக இருந்தாலும், 'தினமலர்க்' கூட்டமாக இருந்தாலும் சங்கராச்சாரியார்களாக இருந்தாலும் இந்த ஒரே ராகம் - அதில் சுருதிப் பேதம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

ஆண்டுக்கு ஒரு முறை ஆவணி அவிட்டம் என்ற பெயரில் பூணூலைப் புதுப்பிக்கிறார்களே - அது என்ன ஜாதி ஒழிப்புக்கு அடையாளமா?

அக்கிரகாரத்து ஆண் பிள்ளைகளுக்குக் குறிப்பிட்ட வயதில் பூணூல் கல்யாணம் நடத்துகிறார்களே - அது என்ன ஜாதி ஒழிப்புக்கான ஏற்பாடா?

ஏன் வீண் பிரச்சினை? அரசமைப்புச் சட்ட ரீதியாக ஜாதி ஒழிக்கப்படுவதற்கு இந்தத் 'தினமலர்' சிந்தனையாளர்கள் கருத்துத் தெரிவித்தால் பிரச்சினை ஒரே வரியில் தீர்ந்து விடுமே!

சங்கராச்சாரியாரை விட்டு, "ஜாதி தீண்டாமை என்பவற்றை எல்லாம் தூக்கி எறிவீர்! மனிதத் தன்மையில் எல்லோரும் ஒரு நிலைதான்!" என்று கூறச் சொல்லலாமே!

வருண தர்மம், ஜாதி இவற்றைக் கட்டிக் காக்கும் ஸ்ருதி, ஸ்மிருதி, உபநிஷத்துகள், இதிகாசங்கள், புராணங்களை மூட்டை கட்டி நாள் ஒன்றைக் குறிப்பிட்டு எரிப்பு விழா நடத்தலாமே!

பூணூலைத் தாங்களாகவே அறுத்து எறியும் நாள் ஒன்றை அறிவிக்கலாமே!

இவற்றைச் செய்து விட்டால், கல்வி, வேலை வாய்ப்பு விண்ணப்பங்களில் ஜாதி என்ற பகுதிக்கு இடமில்லாமல் போய் விடுமே!

'தினமலர்' அறிவு ஜீவிகள் இவற்றைச் செய்வதற்கு முன் வருவார்களா? இரண்டு வரிகள் இதுபற்றி எழுதிட மனம் வருமா?

கடவுள்களுக்கே பூணூல் மாட்டி, கடவுளும் நாங்களும் ஒரு ஜாதி என்று காட்டும் கூட்டம் - கல்வி, வேலை வாய்ப்புகளை நூறு சதவிகிதம் சுளையாக விழுங்கிய கூட்டம் - இடஒதுக்கீட்டினால் முழுவதையும் 'சுவாகா' செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ள காரணத்தால் - ஜாதி ஒழிப்பு வீரர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்வதைப் புரியாத மக்கள் தமிழ் நாட்டில் இல்லை.

ஒரு நூற்றாண்டுக்காலம் சுயமரியாதை இயக்கத்தால் பக்குவப்படுத்தப்பட்ட திராவிட மண்ணில் - 'தினமலர்' களின் பார்ப்பனீயம் பலிக்காது என்பது நினைவிருக்கட்டும்!

No comments:

Post a Comment