சனாதனத்தையும் வருணாசிரமத்தையும் தகர்ப்போம்! தந்தை பெரியார், காமராசர், புரட்சிக்கவிஞர் பிறந்த பூமி இது கோவையில் மேனாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் கோடையிடி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 22, 2022

சனாதனத்தையும் வருணாசிரமத்தையும் தகர்ப்போம்! தந்தை பெரியார், காமராசர், புரட்சிக்கவிஞர் பிறந்த பூமி இது கோவையில் மேனாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் கோடையிடி

 கோவை, அக். 22 - சனாதனத்தையும் வருணாசிரமத்தையும் தகர்ப்போம்! என்றும், தந்தை பெரியார், காமராசர், புரட்சிக் கவிஞர் பிறந்த பூமி இது என்றும் கோவையில் மேனாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் உரையாற்றினார்.

கோவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்திய நிகழ்ச்சியில் ஒன்றிய அரசின் மேனாள் நிதியமைச்சர்  

ப.சிதம்பரம் உரையாற்றுகையில், “தந்தை பெரியார், பெருந் தலைவர் காமராஜர் பண்படுத்திய இந்த மண்ணில் பெரியார் பெயரில் உணவகம் திறக்கக்கூடாது என்றால் இன்னும் வருணாசிரம ஆதிக்கம் இருக்கிறது எனவும், சனாதன வாதிகளை வீழ்த்தும்வரை நம் போராட்டம் ஓயாது” எனவும் எழுச்சிப் பேருரையாற்றினார்.

கோவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சுசி கலையரசன் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் - மேனாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆற்றிய உரை வருமாறு:-

அரசியல் சாசனத்தை, வருணாசிரமத்தை, ஜாதி பேதத்தை உடைப்ப தற்காக ஓர் ஆயுதமாக மாற்றியவர் அம்பேத்கர் அவர்கள்.

ஆனால், அந்த அரசியல் சாசனத்தை ஏற்றுக்கொண்டு 70 ஆண்டுகளுக்குப் பிறகும், இந்த வருணாசிரமத்தைப் பாராட்டக் கூடியவர்கள், சனாதனத்தைப் பாராட்டக் கூடிய வர்கள், போற்றக் கூடியவர்கள் இந்த நாட்டில் இருக்கிறார்கள் என்பதுதான் நமக்கு மிகப்பெரிய சவால்!

சனாதன வாதிகளை 

வீழ்த்தும் வரை போராட்டம்  ஓயாது!

அந்த சனாதன வாதிகளைத் தோற்கடிக்கும் வரை, சனாதனவாதி களை வீழ்த்தும்வரை நம்முடைய போராட்டம் ஓயாது என்பதை நீங்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணா மலைக்கும், மற்றவர் களுக்கும் மேடையில் நடக்கும் சர்ச்சை என்று நீங்கள் நினைக்காதீர்கள்.

இந்த சர்ச்சையைப்பற்றி அம்பேத்கர் எழுதுகிறார், மனு ஸ்மிருதியில் எழுதிய தெல்லாம் கண்டனத்திற்கு உரியது என்று நான் சொல்லமாட்டேன். அதிலே சில நல்ல கொள் கைகள் இருக்க லாம். மனு, அதுபோன்ற ஒருவர் இருந் திருந்தால், மனு என்பவர் முட்டாள் அல்ல. ஆனால், 1927 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி 9 மணிக்கு, மனு ஸ்மிருதியை ஒரு பாடையில் வைத்து நாங்கள் கொளுத்தி னோம் என்றால், அதற்குக் காரணம், மனுஸ்மிருதி என்பது எங்கள் மக்களுக்கு இழைத்திருக்கக் கூடிய மிகப்பெரிய கொடுமையின் காரணமாக கொளுத்தினேன் என்று சொல்கிறார்.

அம்பேத்கர் அவர்கள் வருணாசிரமத்தை எதிர்க்கும் பொழுது, அதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. காரணம், வருணாசிரமமம் என்பது இந்து மதத்தினுடைய ஒரு எடுக்க முடியாத, தவிர்க்க முடியாத பகுதி என்று காந்தியடிகள் எழுதினார்.

எழுபது ஆண்டுகளாக நடைபெறும் விவாதம்!

இந்த விவாதம் என்பது அண்ணாமலை அவர்களுக்கும், மற்றவர்களுக்கும் அல்லது திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆ.இராசா அவர்களுக்கும், மற்றவர்களுக்கும் நடைபெறக் கூடிய சாதாரண விவாதம் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். இந்த விவாதம் 70 ஆண்டுகளாக நடைபெறுகிறது.

இந்தியாவின் மிகப்பெரிய தலைவர்கள் மகாத்மா காந்திக் கும், அண்ணல் அம்பேத்கருக்கும் இடையே நடைபெற்றது.

நான் கேள்விப்பட்டேன், இளை ஞர்கள் பலர் இன்று சனா தனத்தினுடைய, வருணாசிரம தர்மத்தினுடைய காவிக் கொடியைத் தூக்கிக் கொண்டு போகிறார்கள் என்று. அதிர்ச்சியடைந்தேன்.

உதாரணத்திற்கு, காரமடையில் செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதி, பெரியார் உணவு விடுதியைத் திறப்பதற்காக, மறுநாள் திறப்ப தற்காக ஒரு பெயர்ப் பலகையை வைத்து, ‘‘பெரியார் உணவகம்’’ என்று அறிவித்திருக்கிறார்கள். 14 ஆம் தேதி திறக்கப் போகிறார்கள், 13 ஆம் தேதி போர்டை மாட்டியிருக் கிறார்கள்.

அன்று இரவு, ஒரு கும்பல் வந்து, அந்தப் பெயர்ப் பலகையை உடைத்துத் தகர்த்து, பெரியார் உணவகம் என்று எப்படி நீ உணவு விடுதியைத் திறக்கலாம் என்று, பெரிய கலவரமே நடைபெற்று இருக்கிறது. அதன்பிறகு திராவிடர் இயக்கத் தோழர்கள் வந்து காவல் துறையிடம் புகார் செய்து அதே பெயரில் உணவகம்  பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் தேதி திறக்கப்பட்டது.

இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட வுடன், நான் அதிர்ச்சி யடைந்தேன். 

சுதந்திரம் அடைந்த நாடா இது?

பகுத்தறிவு வளர்ந்த நாடா இது?

சிந்தனை வளர்ந்த நாடா இது?

இந்த மண்ணிலே, பாரதியும், பாரதிதாசனும், பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரமும் பாடிய மண் இது.

இந்த மண்ணில் வருணாசிரம - 

ஆதிக்க உணர்வு இன்னும் இருக்கிறது!

இந்த மண்ணிலே, இன்னும் பெரியார் உணவகம் என்ற ஒரு பெயர்ப் பலகையை வைக்க முடியாது என்றால், எந்த அளவிற்கு, இந்த மண்ணிலே இன்னும் சனாதனதர்ம, வருணாசிரம ஆதிக்க உணர்வு இருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

ஜாதி ஒழிந்தாலன்றி, இந்தச் சமுதாயம் முன்னேறாது.

பல இடங்களில் நான் பார்த்திருக்கி றேன், ஜாதிதான் தடுப்புச் சுவராக இருக்கிறது; ஜாதிதான் அங்கே முட்டுக் கட்டையாக இருக்கிறது; ஜாதிதான் பெரிய தடையாக இருக்கிறது.

ஜாதி ஒழியவேண்டும். ஜாதியை ஒழிப்பதைத்தான் தன்னுடைய முழு முதற்கடமையாக அண்ணல் அம்பேத்கர் அவர்கள் ஏற்றுக்கொண் டார்.

ஜாதி ஒழிந்தால்தான், சனாதன தர்மம் ஒழியும்.

ஒரு தலைவனைப் பின்பற்றுவது என்பது ஒன்று; ஆனால், ஒரு தலைவ னுடைய எண்ணங்களை, கொள்கை களை ஏற்றுக்கொண்டு, அதன்படி நடந்துகொள்வது என்பது ஒன்று.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினு டைய அருமைத் தொண்டர்களை நான் அன்போடு, பணிவோடு கேட்டுக் கொள்வது, திருமாவளவன் பேசுவதைக் கேட்பது, எழுது வதைப் படிப்பது என்பதோடு நின்றுவிடாமல், அவருடைய கொள்கைகளை ஆழ மாகச் சிந்தித்து, உள்வாங்கி, அவர் வெளிப்படுத்துகின்ற, அமல்படுத்து கின்ற கொள்கைகளைத் தொடர்ந்து, கடைசி நாள் வரை நீங்கள் பின்பற்றவேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

முழுமையான சுதந்திரம் 

இன்னும் கிடைக்கவில்லை!

காரணம் என்னவென்றால், 75 ஆண்டுகள் சுதந்திரம் பெற்றிருந்தாலும், இன்னும் முழுமையான சுதந்திரம் எல்லோருக்கும் கிடைக்க வில்லை. 140 கோடி மக்களுக்கும் சுதந்திரம் கிடைத்துவிட்டதாக நீங்கள் நம்பினால், உங்களைப் பார்த்து நான் பரிதாபப்படுவதைத் தவிர, வேறு எதுவும் சொல்ல முடியாது.

140 கோடி மக்களுக்கும் முழுமை யாக சுதந்திரம் இன்னும் கிடைக்க வில்லை.

பல பேருக்குப் பேசுவதற்குச் சுதந்திரம் கிடையாது; எழுது வதற்குச் சுதந்திரம் கிடையாது; போராடுவ தற்குச் சுதந்திரம் கிடையாது. பல பேர் உணவில்லாமல் சுதந்திரம் மறுக்கப்படு கிறார்கள்.  பல பேர் இருக்க இடமில்லாமல் சுதந்திரம் மறுக்கப் படுகிறார்கள். பல பேர் சட்டத்தால் அச்சுறுத்தப்பட்டு, சுதந்திரம் மறுக்கப்படுகிறார்கள்.

அமெரிக்காவில் கருப்பின 

மக்கள் போராட்டம் தொடர்கிறது!

இன்னும் சொல்லப்போனால், ஏழைகள், ஒடுக்கப்பட்ட வர்கள், தலித் மக்கள், சிறுபான்மையினர் - அதில் மிகமிகப் பெரும்பகுதி உண்மை யிலேயே சுதந்திரம் மறுக்கப்பட்ட மக்களாகத்தான் இன்றும் இருக்கின் றார்கள்.

ஆக, இந்தப் போராட்டம் இன்றோ, நாளையோ முடிந்து விடும் என்று நினைக்காதீர்கள். இது நீண்ட போராட்டம். இந்தப் போராட்டத்தில், உதாரணமாக அமெரிக்காவில் கருப்பின மக்கள் தங்களுக்கான உரிமைகளைப் பெறுவதற்காக, 200 ஆண்டுகளுக்கு மேலாகப் போராடு கிறார்கள்.

200 ஆண்டுகள் கழித்துகூட அனைத்துக் கருப்பின மக்களுக்கும் சுதந்திரம் கிடைத்துவிட்டதாக சொல்ல முடியாது. ஆக, இந்தப் போராட்டம் என்பது நீண்ட போராட்டம்.

நிச்சயமாக நான் நம்புகிறேன், என் வாழ்நாளுக்குப் பிறகும் இந்தப் போராட்டம் நடைபெறும்.

100 ஆண்டுகள் திருமாவளவன் வாழ்ந்தாலும், அவரு டைய வாழ்நாளுக்குப் பிறகும் இந்தப் போராட்டம் நடை பெறும்.

ஆனால், ஒவ்வொரு தலைமுறை யும், ஒரு தலைவனைத் தரும்; இந்தப் போராட்டத்திற்கு அந்தத் தலைவன் தலைமை யேற்பான். இந்தத் தலை முறைக்கு, திருமா என்ற தலைவன் கிடைத்திருக்கின்றான். அவரை சிக்கெனப் பற்றிக் கொள் ளுங்கள்; சிக்கெனப் பற்றிக்கொண்டு, அவரு டைய வழியிலே தொடர்ந்து நடை போடுங்கள்; தொடர்ந்து போரா டுங்கள் என்று உங்களை அன்போடு கேட்டு, அவரை நான் வாழ்க, வாழ்க என வாழ்த்துகிறேன்.

தமிழ்நாட்டிலே மட்டுமல்ல, இந்தியா முழுவதும் ஒரு விவாதம் நடைபெறுகிறது.

கோவைக்கு வந்து, இந்த சிவானந்த காலனியிலே பேசும் போது, அந்த விவாதத்தைத் தவிர்த்துவிட்டுப் பேச முடியாது.

அந்த விவாதம், இன்று சனாத னத்திற்கும், சனாதனத்தை எதிர்ப்ப வர்களுக்கும் இடையே நடைபெறக் கூடிய போராட்டம்.

இதிலே, நாம் எந்தப் பக்கம் இருக்கிறோம் என்பது நமக்குத் தெளிவாகத் தெரிகிறது. அவர்கள் எந்தப் பக்கம் இருக்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெளிவாகத் தெரிகிறது.

அண்ணல் அம்பேத்கர் 

உலகெங்கும் ஆற்றிய உரை!

இந்தப் போராட்டம், இன்று, நேற்று தொடங்கிய போராட் டம் அல்ல. இந்தப் போராட்டம் ஆயிரம் ஆயிரம் ஆண்டு காலமாக நடைபெறு கிறது. இந்தப் போராட்டத்தினுடைய உண்மைகளையெல்லாம் விளக்கி, உடைத்துச் சொல்லி, இந்திய மக்கள் மத்தியில் மட்டுமல்ல, உலக அரங்கிலே, லண்டனிலே, அமெரிக்கா விலே மற்ற நாடுகளில் எல்லாம் இதை உடைத்துச் சொன்னவர் பேரறிஞர் டாக்டர் அம்பேத்கர் அவர்கள்.

அம்பேத்கர் அவர்கள், தெளி வாகவே சொன்னார்கள் - அதில் எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் சொன்னார்கள்.

மனுஸ்மிருதியை நான் எதிர்க்கி றேன் என்று சொன்னார்கள். மனுஸ் மிருதியினுடைய ஆதாரம் வருணா சிரமம். அமெரிக்க மக்கள் மத்தியில் அவர் பேசும்பொழுது சொன்னார்,

இந்து மதம் எப்படிப்பட்ட மதம் தெரியுமா? அதனுடைய வருணாசிரம அடிப்படை எப்படி தெரியுமா?

பல மாடிக் கட்டடம் - ஒவ்வொரு மாடியிலும் ஒரு ஜாதி இருக்கிறது, ஒரு வருணம் இருக்கிறது. ஆனால், ஒரு மாடியிலிருந்து, இன்னொரு மாடிக்குப் போவதற்குப் படிக்கட்டு கள் கிடையாது.

நன்றாக யோசித்துப் பாருங்கள், நான்கு, அய்ந்து மாடி கட்டடம் கட்டுகிறோம். முதல் தளத்திலிருந்து, இரண்டாவது தளத்திற்கு, இரண்டா வது தளத்திலிருந்து, மூன்றாவது தளத்திற்குப் போவதற்குப் படிக்கட்டு கள் இல்லையென்றால், ஒவ்வொரு மாடியிலும் இருப்பவர்கள், காலம் முழுவதும் அதே மாடியில்தான் இருக்கவேண்டும். மேலே போகவே முடியாது.

என்னுடைய இந்து மதம், இந்தியா வில் இருக்கும் இந்து மதம், இந்த வருணாசிரம தர்மம் இருக்கிறதே, அது பல மாடிக் கட்டடம் - ஆனால், ஒரு மாடியிலிருந்து இன்னொரு மாடிக்குப் போவதற்குப் படிக்கட்டு கள் கிடையாத கட்டடம் என்று சொன்னார்; அப்போதுதான் புரிந்தது எல்லோருக்கும்.

இந்து மதத்தைப் போன்று 

பேதங்கள் வேறு எதிலும் இல்லை!

இதைப்போன்ற ஒரு பேதங்கள் எந்த மதத்திலும் கிடையாது; எந்த நாட்டிலும் கிடையாது. இன வேறுபாடு, டிரைப் என்று சொல்லுகி றோமே, கூட்ட வேறுபாடு - பல நாடுகளில் இருக்கிறது. ஆனால், இந்தியாவில் இருக்கின்ற வேறுபாடு களைப்போல, பேதங்களைப் போல எந்த மதத்திலும் கிடையாது; எந்த நாட்டிலும் கிடையாது.

இதை உடைத்தெறியவேண்டும் என்பதற்காகத்தான், அம்பேத்கர் அவர்கள் வாழ்நாள் முழுவதும் போராடினார். அரசியல் சாசனத்தில் தன்னுடைய கருத்தை அழுத்தமாகப் பதிய வைத்தார்.

அரசியல் சாசனம், வருணா சிரமத்தை, ஜாதி பேதத்தை உடைப்ப தற்காக ஓர் ஆயுதமாக மாற்றியது அம்பேத்கர் அவர்கள்.

ஆனால், அந்த அரசியல் சாசனத்தை ஏற்றுக்கொண்டு, 70 ஆண்டுகளுக்குப் பிறகும், இந்த வருணாசிரமத்தைப் பாராட்டக்  கூடியவர்கள்,  சனாதனத் தைப் பாராட்டக் கூடிய வர்கள், போற்றக் கூடியவர்கள் இந்த நாட்டில் இருக்கிறார்கள் என்பதுதான் நமக்கு மிகப்பெரிய சவால்!

அந்த சனாதனதர்மவாதிகளைத் தோற்கடிக்கும் வரை, சனாதனவாதி களை வீழ்த்தும்வரை நம்முடைய போராட்டம் ஓயாது என்பதை நீங்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த சர்ச்சை ஏதோ பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலைக்கும், மற்றவர்களுக் கும் மேடையில் நடக்கும் சர்ச்சை என்று நீங்கள் நினைக்காதீர்கள்.

இந்த சர்ச்சை ஏறத்தாழ, 60, 70 ஆண்டுகளுக்குமுன்னால், பேரறிஞர் அம்பேத்கர் அவர்களுக்கும், மகாத்மா காந்தியடி களுக்கும் இடையே நடந்தது.

மகாத்மா காந்தியும், அம்பேத்கரும் 

தங்கள் கருத்துக்களை பதிய வைத்தார்கள்!

மகாத்மா காந்தியை நான் வணங்கு கிறேன். மகாத்மா காந்தி இந்த தேசத்தின் தந்தை என்பதை, எல்லோ ரையும் போல நானும் ஏற்றுக்கொள்கி றேன். மகாத்மா காந்தியைப் போன்ற ஓர் உத்தமர் இந்த நாட்டிலே தலைவராகப் பிறந்தது கிடையாது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

பல நேரங்களில், ஏதாவது மனதில் அய்யம் ஏற்பட்டால், மகாத்மா காந்தி இதைப்பற்றி என்ன சொன்னார் என்று நான் புத்தகங்களை எடுத்துப் புரட்டிப் பார்க்கிறேன்.

பல நேரங்களில் மகாத்மா காந்தி சொன்னதுதான் உண்மை, சரி என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், மகாத்மா காந்தி, சனாதன தர்மத்தைப்பற்றி, வருணாசிரம தர்மத்தைப் பற்றி சொன்னதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.

நான் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுகூட முக்கியமல்ல; பேரறிஞரான அம்பேத்கர் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

அம்பேத்கர் அவர்களும், மகாத்மா காந்தியும் தங்கள் தங்கள் பத்திரிகைகளில், தங்கள் கருத்துகளை ஆழமாகப் பதிய வைத்தார்கள்.

காந்தியடிகள் வருணாசிரமத்தை ஆதரித்தார்; 

காந்தியடிகள் என்ன எழுதினார்?

இந்து மதத்திலே உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பேதம் கிடையாது. காந்தி மனதிலே பேதம் இல்லாமல் இருக்கலாம்; ஆனால், நடைமுறையில் இந்து மதத்திலே அந்தப் பேதம் இருந்தது.

அம்பேத்கர் அவர்கள் வருணா சிரமத்தை எதிர்க்கும் பொழுது, அதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. காரணம், வருணாசிரமம் என்பது இந்து மதத்தினுடைய ஓர் எடுக்க முடியாத, தவிர்க்க முடியாத பகுதி என்று காந்தியடிகள் எழுதினார்.

அதற்கு அம்பேத்கர் பதில் எழுதினார்.

வருணாசிரமத்தை ஒழிக்காமல் 

இந்து மதத்தை சீர்படுத்த முடியாது!

மனுஸ்மிருதியினுடைய அடிப்ப டையே இந்த வருணா சிரமம்தான். இந்து சமுதாயத்தில், இந்து மதத்தில் இருக்கக்கூடிய ஏற்றத் தாழ்வுகளை ஒழிக்கவேண்டும் என்றால், இந்த அடித்தளத்தை ஒழிக்காமல், இந்து சமுதாயத்தினுடைய வேறுபாடுகளை, ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க முடியாது. இந்த அடித்தளத்தைத் தகர்த்துவிட்டு, இன்னொரு புதிய அடித் தளத்தில் இந்து மதம் எழுந்தால், அதை நான் ஏற்றுக்கொள்வேன், பாராட்டுவேன்.

ஆனால், இந்த அடித்தளத்தை ஒழிக்காமல், வருணாசிரமம் என்ற அடித்தளத்தை ஒழிக்காமல், இந்து மதத்தை சீர்திருத்த முடியாது என்று சொன்னார்.

பிறகு, ஜாதியை ஒழிப்போம் என்று அவர் ஆற்றாத உரை நூலாக வடித்துத் தந்தபொழுது, அதிலே இந்த வருணா சிரமத்தை ஒழிக்கவேண்டிய கட்டா யத்தை, அவசியத்தை, தேவையை, மிக மிகத் தெளிவாக, 1, 2, 3 என்று காரணங்களைச் சொல்லி, அம்பேத்கர் அவர்கள் விளக்கினார்கள்.

இதைப்பற்றி ஒவ்வொருவரும் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். ஜாதி பேதம் ஒழிந்துவிட்டதா?

இங்கே வேல்முருகன் அவர்கள் சொன்னது உண்மைதான். ஒரு காலத்தில், சட்டை போடக்கூடாது; மீசை வைக்கக் கூடாது; குதிரையில் போகக்கூடாது; தண்ணி அடிக்கக் கூடாது; நீ தீண்டத்தகாதவன், உன் நிழல்கூட என்மீது பதியக்கூடாது என்றெல்லாம் இருந்தது.

அதுபோன்ற தீண்டாமைக் கொடுமை இன்று இல்லை என்பதை, பெரும்பகுதி இந்தியாவில் இல்லை என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், இந்தியாவின் சில பகுதிகளில் இன்னும் தீண்டாமை இருக்கிறது. இன்னும் பல கோவில்களில் தலித் மக்களை அனுமதிக்கமாட்டார்கள். இன்னும் பல இடங்களில் தலித் மக்கள், சக மனிதர்களாக மதிக்கப்பட மாட்டார்கள்.

எல்லா மனிதர்களுக்கும் 

ஒரே மதிப்பு இருக்கிறதா?

எல்லோருக்கும் வாக்குரிமை வந்து விட்டது என்பதற்காக, சுதந்திரம் கிடைத்துவிட்டது என்று நினைக் காதீர்கள்.

ஒரு மனிதன் - ஒரு வாக்கு  என்பதைத் தந்துவிட்டீர்கள்;  ஆனால், ஒரு மனிதன், ஒரே மதிப்பு  என்று எப்பொழுது தரப் போகிறீர்கள் என்று கேட்டார்.

எல்லா மனிதர்களுக்கும் ஒரே மதிப்பை இந்திய சமுதாயம் இன்னும் தந்துவிடவில்லை. அதைத் தராதவரை இந்தப் போராட்டம் நடைபெறும். இந்தப் போராட்டம் சனாதன தர்மத்திற்கும், அதை ஒழிப்பவர்களுக்கும் இடையே நடை பெறும் போராட்டம். இதில்,  இளைஞர்கள், படித்தவர்கள், சிந்திப்பவர்கள் எல்லாம் எந்தப் பக்கம் இருக்கிறார்கள் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

பெரியாரை மறந்துவிட்டு, பெருந்தலைவர் காமராசரை மறந்து விட்டு, கக்கன்ஜியை மறந்துவிட்டு, புரட்சிக்கவிஞர் பாரதிதாசனை மறந்துவிட்டு, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தை மறந்துவிட்டு, கலைஞரை மறந்துவிட்டு, இவர்களை யெல்லாம் மறந்துவிட்டு, தமிழ்நாட்டில் ஓர் இளைஞர் கூட்டம் இருந்து, சனாதன தர்மத்தை ஏற்றுக் கொள்ளும் என்றால்,  அவர்களைப் பார்த்து பரிதாபப்படுவதைத் தவிர, நான் சொல்வதற்கு எதுவும் கிடையாது.

இந்த மண் என்பது, திராவிடமும், தேசியமும் தழைத்த மண். 

இந்த மண் என்பது தந்தை பெரியாரும், பெருந்தலைவர் காமராசரும் பண்படுத்திய மண்.

இந்த மண்ணிலே, பாரதியும், பாரதிதாசனும், பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரமும் பாடிய மண் இது.

இந்த மண்ணிலே, இன்னும் பெரியார் உணவகம் என்ற ஒரு பெயர்ப் பலகையை வைக்க முடியாது என்றால், எந்த அளவிற்கு, இந்த மண்ணிலே இன்னும் சனாதனதர்ம, வருணாசிரம ஆதிக்க உணர்வு இருக்கிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

ஆதிக்க உணர்வை 

உடைத்தெறிய வேண்டும்!

இந்த ஆதிக்க உணர்வை உடைத்தெறியும் வரை - இந்த ஆதிக்கச் சக்திகளையெல்லாம் ஒழிக்கும் வரை நமக்கு ஓய்வில்லை. தொடர்ந்து உழைக்கவேண்டும்; தொடர்ந்து போராடவேண்டும். நம்முடைய காலத்திலே முழு வெற்றி கிடைக்கா விட்டாலும், நமக்கு அடுத்த தலைமுறை, அடுத்த தலைமுறை, அதற்கடுத்த தலைமுறை நிச்சயமாக முழு வெற்றியை அடையும் என்ற நம்பிக்கையோடு நீங்கள் உழைக்கலாம்.

இந்த சமுதாயத்தில்கூட, உயர்ந்த ஜாதி என்று நினைத்துக் கொள்ப வர்கள் - அவர்களிலும் நல்லவர்கள் இருக்கிறார்கள், இல்லை என்று சொல்ல முடியாது.

அண்ணல் அம்பேத்கர் அவர்க ளுக்கு, ஆரம்ப காலத்தில், பள்ளிக் கூடத்தில், தீண்டாமைக் கொடுமையை அவர் அனுபவித்தபொழுது, அவருக்கு உதவி செய்தவர்கள், இரண்டு ஆசிரியர்கள். இரண்டு பேரும் ‘பிராமணர்'கள்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தினுடைய மிகப்பெரிய தலைவர்களில் ஒருவரான பாலகங்காதர திலக், சனாதன தர்மத்தை ஆதரித்தவர். ஆனால், அவருடைய மகன், சனாதன தர்மத்தை எதிர்த்தவர். அவர் அம்பேத்கருக்கு உதவி செய்திருக்கி றார்.

ஆக, எல்லா ‘பிராமணர்'களையும் நாம் எதிர்க்கவில்லை என்று அம்பேத்கர் அவர்களே எழுதியிருக்கி றார். நாம் ‘பிராமணர்'களை எதிர்க்க வில்லை, பிராமணியத்தை எதிர்க்கி றோம். அவருடைய வரலாற்றில், ‘பிராமணர்'கள் அவருக்கு பல உதவிகளை செய்திருக்கிறார்கள்.

நாம் எதிர்ப்பது எதை; 

என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்!

நாம்  பிராமணியத்தை  எதிர்க்கும் பொழுது, பிராமணர் களை எதிர்ப்ப தாக நினைக்கக் கூடாது.

வருணாசிரமத்தை எதிர்க்கும் பொழுது, குறிப்பிட்ட சமுதாயத்தை எதிர்ப்பதாக நினைக்கக் கூடாது.

சனாதன  தர்மத்தை  எதிர்க்கும் பொழுது, அதில் இவரை, அவரை எதிர்ப்பதாக நினைக்கக் கூடாது.

காந்தியடிகளின்  கொள்கையை நாம் ஏற்றுக்கொள்ள வில்லை என்று சொல்லும்பொழுது, காந்தியடிகளை நாம் மதிக்கவில்லை என்று பொருள் அல்ல. காந்தியடிகளை மதிக்கிறேன், வணங்குகிறேன்.

ஆனால், சனாதன தர்மம் என்று வரும்பொழுது, வருணாசிரமம் என்று வரும்பொழுது, இந்தப் பேதங்கள் என்று வரும்பொழுது, இந்த ஏற்றத் தாழ்வுகள் என்று வரும்பொழுது, அந்த ஏற்றத் தாழ்வுகளைக் கடுமை யாக நான் எதிர்க்கிறேன்; அதை எதிர்த்துக் கடுமையாகப் போராட வேண்டும் என்று உங்களை அழைக்கிறேன்.

சனாதன தர்மம் ஒழிந்தால், ஜாதி ஒழியும் - நான் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், ஜாதி ஒழிந்தால்தான், சனாதன தர்மம் ஒழியும்.

ஜாதியை எதிர்க்கவேண்டும்; ஜாதி உணர்வுகளை எதிர்க்கவேண்டும்; ஜாதி பேதங்களை எதிர்க்கவேண்டும்; சனாதன தர்மத்தை ஒழிக்கவேண்டும் என்பதிலே, மிகமிக உறுதியாக இருக்கவேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இந்த நிகழ்ச்சியின் அழைப்பிதழில், இதைத்தான் அருமை நண்பர் திருமா அவர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

இந்துத்துவம் என்பது 

சனாதன சங்கத்துவம்!

இந்துத்துவம் என்பதை சனாதன சங்கத்துவம் என்று அடையாளப்  படுத்துவதே பொருத்தமாகும். மதச் சார்பற்ற தேசியத்தைக் கட்டமைக்கும் அம்பேத்கர் சட்டத்தை சிதைக்க வேண்டும் என்பதே அவர்கள் நோக்கம் என்பதைப் புரிந்துகொள்ளு வோம். புரட்சியாளர் அம்பேத்கர் சட்டத்தைப் பாதுகாப்பதும், அவரது கனவு தேசத்தைக் கட்டமைப்பதுமே நம் முன் உள்ள பெரிய சவாலாகும். அச்சவாலை எதிர்கொள்வோம் என்று எழுதியிருக்கிறார்.

இந்த அழைப்பிலே இருந்த வாசகங்கள்தான் என்னை ஈர்த்தன. ஆகவேதான், இந்த விழாவிலே நான் கலந்து கொள்ளவேண்டும் என்பதற்காக நான் வந்திருக்கின்றேன். இந்தப் போராட்டத்திலே உங்களுக்கு நாங்கள் துணை நிற்போம். எங்களுக்கு நீங்கள் துணை நிற்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

திருமாவளவன் நடத்தும் 

போராட்டத்தில் ஒன்றிணைவோம்!

உங்களுக்கு நாங்கள் தொடர்ந்து துணை நிற்போம் - எங்களுக்கு நீங்கள் துணை நிற்கவேண்டும் என்று கேட்டு, அருமை நண்பர் திருமாவளவன் அவர்கள் இந்தப் போராட்டத்திற்குத் தலைமையேற்றால், தலைமையேற்று வழிநடத்தினால், அவரைப் பின்பற்று வதற்கு நானும் தயார் என்று சொல்லி, இந்தப் போராட்டம் வெல்லுவ தற்காக - அனைத்துத் தமிழ் ஜாதியினரும் ஒன்று சேரவேண்டும் என்று உங்களையெல்லாம் அன்போடு கேட்டு, அவர் வாழ்க, அவருடைய போராட்டம் வெல்க என்று சொல்லி, விடைபெறுகிறேன்.

இவ்வாறு ப.சிதம்பரம் உரையாற்றினார்.

No comments:

Post a Comment