காஞ்சிபுரம்,அக்.22- காஞ்சிபுரம் மாவட்டம் சிறீபெரும்புதூர் பகுதியில் உள்ள நட்சத்திர உணவு விடுதியின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய உள்ளே இறங்கிய 3 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி நேற்று (21.10.2022) உயிரிழந்தனர்.
சிறீபெரும்புதூரில் சென்னை-பெங்களூர் சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதி ஒன்றில் மிகப் பெரிய கழிவுநீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டியை சுத்தம் செய்வதற்காக சிறீபெரும்புதூர் கீழண்டை தெரு பகுதியைச் சேர்ந்த ரங்கநாதன்(வயது51), நவீன்குமார்(வயது 30), திருமலை(வயது 25) ஆகிய 3 பேரும் உள்ளே இறங்கியுள்ளனர். அங்கு சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, விஷவாயு தாக்கி மயங்கி விழுந்துள்ளனர். மயங்கி விழுந்ததால் நீந்த முடியாமல் கழிவுநீர் தொட்டிக்குள் மூழ்கினர்.
தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கழிவுநீர் தொட்டியில் இருந்த நீரை வெளியேற்றி விட்டு சகதிக்குள் தேடி அதிலிருந்து 3 பேரின் உடல்களையும் மீட்டனர். அவற்றை சிறீபெரும்புதூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனை மற்றும் கட்சிப்பட்டு பகுதியில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுனில் தலைமையில் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டது.
இந்நிகழ்வு தொடர்பாக நட்சத்திர விடுதி உரிமையாளர் சத்தியமூர்த்தி, மேலாளர் சுரேஷ்குமார், ஒப்பந்ததாரர் ரஜினி ஆகிய 3 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, சுரேஷ்குமார், ரஜினி ஆகியோரை கைது செய்தனர். இதேபோல் 2021இல் சிறீபெரும்புதூரில் தனியார் கேட்ரிங் நிறுவன கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது 3 பேர் இறந்தனர்.
டெங்குவை தடுக்க வீடு வீடாக ஆய்வு
சென்னை,அக்.22- சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவல் வருமாறு: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொசுஒழிப்பு பணிகளை மேற் கொள்ள 2,084 சிறு வட்டங்களாகப் பிரிக்கப்பட்டு 3,271பணியாளர்கள் மூலம் பணிகள் நடக்கின்றன. ஒரு வார்டுக்கு கொசுமருந்து தெளிப்பான்களுடன் 2 பேர் என 200 வார்டுகளுக்கும் 400 பேர் பணியமர்த்தப்பட்டுள் ளனர். இவர்கள் ஒருகுழுவுக்கு 2 பேர் என நாளொன்றுக்கு ஒரு கிமீ தூரத்துக்கு கொசு மருந்து தெளிக்கும் பணிகளை செய்கின்றனர். மேலும், 247 கிமீ நீர்வழித்தடங்களில் கொசு மருந்து தெளிக்க 128 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். வீடுகளில் கள ஆய்வு மேற்கொள்ள வரும் பணியாளர்களுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
ராகவேந்திரா மடத்தில் சிலை திருட்டு
திருவள்ளூர்,அக்.22- திருவள்ளூர் ராகவேந்திரா மடத்தில் அய்ம்பொன் சிலை, 30 கிலோ வெள்ளி, 10 சவரன் தங்க நகை மற்றும் ரூ.51 ஆயிரத்தை கொள்ளை யடித்து சென்றுள்ளனர். மடத்தில் அய்ம்பொன் சிலை. பணம், தங்க நகைகள் கொள்ளை போனது குறித்து குறித்து திருவள்ளூர் நகர காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
இந்தியாவில் புதிதாக 2,119 பேருக்கு கரோனா தொற்று
புதுடில்லி,அக்.22- ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று (21.10.2022) வெளியிட்ட தகவலின்படி, நாடுமுழுவதும் புதிதாக 2,119 பேர் கரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளானார்கள். 25,037 பேர் நோய் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2,582 பேர் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டனர். ஒட்டு மொத்தமாக நாட்டில் 219.50 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில்
தமிழ்நாட்டில் நேற்று (21.10.2022) புதிதாக ஆண்கள் 127, பெண்கள் 95 என மொத்தம் 222 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 55 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்து 90,238 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 35 லட்சத்து 48,686 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 410 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழ்நாடு முழுவதும் 3,504 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழப்பு ஏதும் இல்லை. தமிழ்நாட்டில் 20.10.2022 அன்று கரோனா தொற்று பாதிப்பு 235 ஆகவும், சென்னையில் 57 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment