ராஜராஜன் சர்ச்சை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 15, 2022

ராஜராஜன் சர்ச்சை

 ராஜராஜன் காலத்தில் ஹிந்துமதம் இல்லை என்ற கருத்தை ஒருவர் கூறியவுடன், சனாதனவாதிகள் ராஜராஜனை ஹிந்து என்று கூறிக்கொண்டு "ராஜராஜன் ஹிந்து இல்லை" என்று கூறியது உண்மைதானே எனக்கூறியவர்களை எல்லாம் ஹிந்து விரோதிகள் என்று கூவிக்கொண்டு நாள் தோறும் அக்கப்போர் அறிக்கைகளைக் கொடுத்துக்கொண்டே இருக்கின்றனர். 

 உண்மைகளை அறிந்தும் பாஜக சட்டமன்ற உறுப்பினரும், மகளிரணிப் பொறுப்பாளருமான ஒருவர் ராஜராஜனை ஹிந்து இல்லை என்று கூறுபவர்கள் பிறமதக் கைக்கூலிகள் என்ற பார்வையில் கருத்துத் தெரிவித்துள்ளார். 

இவர்கள் மராட்டிய மாவீரன் என்று கூறும் சத்திரபதி சிவாஜியை ”நீ சூத்திரன் - நாடாளும் தகுதிக்கு நீ சரிப்பட்டு வரமாட்டாய்” என்று இன்றைய நாக்பூர் ஆர்.எஸ்.எஸ். தலைமை மற்றும் கோட்சேவின் மூதாதைகளான சித்பவன் பார்ப்பனர்கள் கூறிய வரலாறு இன்றும் கல்வெட்டாக, நூலாக உள்ளது. 

மராட்டிய எழுத்தாளரும், வரலாற்று ஆய்வாளருமான பவாசிங் ரானா என்பவர் எழுதிய ஆங்கில நூலான "சத்திரபதி சிவாஜி" என்ற மாராட்டிய மொழி பெயர்ப்பு நூலில் ”சத்திரபதி சிவாஜி சனாதன விதிக்குள் வராதவர்” என்று சித்பவன் பார்ப்பனர்கள் கூறியுள்ளனர். அதாவது சிவாஜி ஹிந்து அல்ல என்பதுதான் இதன் பொருள்

சிவாஜிக்கு முடிசூட்டிட பார்ப்பனர்கள் யாருமே முன் வரவில்லை, காரணம்,  ”சிவாஜி சூத்திரன், சத்திரியன் அல்ல - என்பதால் முடி சூட்டிக் கொள்ளும் தகுதி அவனுக்கு இல்லை” என்று பார்ப்பனர்கள் கூறிவிட்டனர். ஏற்கெனவே அவரை  ’துல்ஜாப்பூர் பவானி கோவிலுக்குள்  உள்ளே நுழையவிடாமல்’ தடுத்து இழிவுபடுத்தியதும் இதே பார்ப்பனர்கள்தான். இருப்பினும் சிவாஜி தனக்கு முடிசூட்ட மந்திரம் சொல்லும் பார்ப்பனர்களைத் தேடிகொண்டுவாருங்கள் என்று தூதர்களுக்கு உத்தரவிட்டார். 

சிவாஜியின் தூதர்கள் அன்றைய ராமேசுவரம், பூரி மற்றும் அரித்துவார் வரை சென்றனர். ஆனால் எந்த ஒரு பார்ப்பனரும் சிவாஜிக்கு முடிசூட்ட முன்வரவில்லை. இதனை அடுத்து காசிக்குச் சென்று  தலைமைப் பார்ப்பனப் புரோகிதராக விளங்கும்  காகபட்டரிடம் உதவி கேட்கிறர்கள். 

காகபட்டர் புரோகிதர் மட்டுமல்ல? சூழ்ச்சியாளர். எதிர்கால வாழ்க்கைக்காக எதையுமே வளைக்கலாம் என்ற சாணக்கிய விதிப்படி வாழும் சூத்திரதாரி. அவர் நேராக மராட்டியத்திற்கு வருகிறார். 

மராட்டியத்தில் சிவாஜிக்குப் பெரும் புகழ் இருப்பதை கவனிக்கிறார். இதனை அடுத்து அவர் ஒரு முடிவிற்கு வருகிறார். பார்ப்பனர்களின் பிடிவாதமே  பார்ப்பனர்களுக்கு எதிராக ஆகிவிடக் கூடும். என்பதையும், சிவாஜிக்குப் பெரும் மக்கள் செல்வாக்கு இருப்பதால் அவன் எப்படியும் மன்னனாகி விடுவான் என்பதையும், அதைத் தடுத்தால் நாடு முழுவதுமுள்ள பார்ப்பனர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாவார்கள் என்பதையும் அவர் புரிந்துகொண்டார். 

 இதனை அடுத்து மராட்டிய மண்ணில் பார்ப்பனர்கள் தங்கள் செல்வாக்கைத் தொடர்ந்து தக்க வைப்பதற்காக முக்கிய  பார்ப்பனர்களோடு கூடி ஆலோசனை நடத்தினார். 

ஆலோசனையின் இறுதியில் காகபட்டர், யாகம் ஒன்றை நடத்தி அதன் மூலம் சூத்திரனான சிவாஜியை சத்திரியனாக மாற்றி அதன் பிறகு அவருக்கு முடிசூட்டலாம்  என்றார். இதற்கு சித்பவன் பார்ப்பனர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். "அதெப்படி சூத்திரனை யாகம் செய்து சத்திரியனாக மாற்றலாம்? இது வேதத்தில் கிடையாதே" என்றார்கள். இருப்பினும் காகபட்டர் நிதானமாக "அப்படிச் செய்யாவிட்டால் நாடு முழுவதுமுள்ள பார்ப்பனர்கள் உழைத்து வாழ வேண்டி இருக்கும் - உங்களால் ஒட்டுமொத்த பார்ப்பனர்களுமே பாதிக்கப்படுவார்கள். சிவாஜியை சத்திரியனாக்கித்தானே விடுகிறோம் அவரை என்ன பிராமணனாக்கி பூணூலா போடப்  போகிறோம்? சிவாஜியை சத்திரியனாக்கிவிட்டால் நாம் மீண்டும் அரச சபையில் அனைத்து வசதிகளோடும் வாழலாம்" என்று கூறி அவர்களை இணங்க வைக்கிறார். ('சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்' என்ற அண்ணாவின் நூலைக் காண்க).

அவர்களின் சம்மதத்தைப் பெற்றார். ஆனால் சித்பவன் பார்ப்பனர்கள் யாகத்தில் கலந்து கொள்ள முடியாது என்றார்கள். அதற்கும் காகபட்டர் ஏதோ ஒரு கதை எழுப்பி - சித்பவன் பார்ப்பனர்கள் மீது சிவாஜியின் கருணை அப்படியே இருக்கும் படி செய்து  - யாகம் நடத்தி சிவாஜிக்கு மராட்டிய மன்னனாக முடிசூட்டி வைக்கிறார்.  இந்த யாகத்திற்குப் பிறகு பார்ப்பனர்களுக்கு பொன்னும் வெள்ளியும் - பசுவும் பட்டாடைகளும் - நிலப்புலன்களும் வாரி வழங்கி பார்ப்பனர்களை அரண்மனையின் முக்கிய பொறுப்புகளில் அமர வைக்கிறார்.  இது சரித்திரத்தில் நடந்த உண்மை! சிவாஜியின் கஜானா காலியானது இந்த வகையில்!

இன்று அந்த சிவாஜி தான் ஹிந்துத்துவ ஆதிக்கத்தின் மராட்டிய முகம்!

காவிகளுக்கு இங்கே தமிழ்நாட்டில் அப்படி எந்த முகமும் வரலாற்று ரீதியாக இல்லை, கிடைக்கவும் வழியில்லை. எனவே கிடைத்ததை வைத்து ஒப்பேற்ற முயல்கிறார்கள், அது தான் ராஜராஜ சோழன் ஹிந்து என்ற பொய்யான பரப்புரை! அடை யாளத் திருட்டு காவிகளுக்குப் புதிதல்ல. சில ஆண்டுகளுக்கு முன்னர் திருவள்ளுவருக்குக் காவி உடை தரித்து திருட முயன்று தோல்வியடைந்தனர். இப்போது ராஜராஜனிடம் வந்து நிற் கின்றனர். ஆரம்பத்திலேயே இதை அடித்து நொறுக்கிவிட வேண்டும்!

'இந்து' என்பது, வெள்ளைக்காரன் கொடுத்த பெயர் என்று காஞ்சி சங்கராச்சாரியாரே ஒப்புக் கொண்ட நிலையில்,  தமிழன்  - சோழன் ராஜராஜன் எப்பொழுது 'ஹிந்து' ஆனான்?


No comments:

Post a Comment