மோசடிக்கு மறுபெயர் பிஜேபியா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 7, 2022

மோசடிக்கு மறுபெயர் பிஜேபியா?

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தாலுகா, நயினார் கோவில் ஒன்றியம் போகளூர் ஊராட்சியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காவிரி கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுச் சாலையிலிருந்த பள்ளத்தில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. அதில் அந்தப் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் இறங்கி இதனை சரி செய்யுமாறு கோரிக்கை விடுத்து காட்சிப் பதிவு ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து இரு தினங்களில் புதிய குழாய் அமைக்கப்பட்டு, பள்ளமான சாலைகளும் சீர் செய்யப்பட்டன.

இந்தச் சம்பவம் நடந்து ஓராண்டு ஆன நிலையில், பி.ஜே.பி. தொழில்நுட்பப் பிரிவு மாநிலத் தலைவர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், “அடேய் உ.பிஸ் (உடன் பிறப்புகளே!) இதெல்லாம் எவ்வளவு பெரிய கேவலம் தெரியுமா?” என அந்த காட்சிப் பதிவை இணைத்துப் பதிவிட்டுள்ளார். அந்த காட்சிப் பதிவில் “முதலமைச்சர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க, பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் மனோகரன் சாலையில் நீச்சல் குளம் அமைத்து கொடுத்த திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என அந்த வாலிபர் கூறுவது போன்று இருந்தது.

இந்த காட்சிப் பதிவு கடந்தாண்டு எடுக்கப்பட்டது எனவும், காட்சிப் பதிவு வெளியாகி, இரு தினங்களில் அது சீர் செய்யப்பட்டது எனவும் சீர் செய்யப்பட்ட ஒளிப்படங்களுடன் பதிவிட்டிருக்கிறார் தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி. 

இது தொடர்பாக அவர் கூறியதாவது, “கடந்தாண்டு அக்டோபர் மாதம் காவிரி கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு. அதன் காரணமாக சாலையில் இருந்த பள்ளத்தில் தண்ணீர் தேங்கியது. அதில் அப்பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் இறங்கி முதலமைச்சர் இதனை சீர் செய்து கொடுக்கும்படி கோரிக்கை விடுத்தார். அதன் பின்னர் இரண்டு நாள்களில் குழாய் மாற்றப்பட்டு, பள்ளமான சாலையும் சரி செய்யப்பட்டது. ஆனால் பா.ஜ.க. தொழில் நுட்பப் பிரிவு மாநிலத் தலைவர் சி.டி.ஆர் நிர்மல் குமார், அந்த காட்சிப் பதிவில் குரலை மாற்றி தி.மு.க-வுக்குக் களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு பதிவிட்டுள்ளார். தற்போது பரமக்குடி சட்டமன்ற உறுப்பினராக தி.மு.க-வைச் சேர்ந்த முருகேசன் என்பவர் உள்ளார். ஆனால் நிர்மல்குமார் பதிவிட்டுள்ள காட்சிப் பதிவில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் மனோகரன் ஆணைக்கிணங்க என அந்த வாலிபர் கூறுகிறார். இதிலிருந்தே அந்த 'வீடியோ எடிட்' செய்யப்பட்டு குரலை மாற்றி வெளியிடப்பட்டுள்ளது தெளிவாக தெரிகிறது. அதன் காரணமாகத்தான் அவரது பதிவு பொய் என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

பொய்யைத் தவிர வேறு எதையும் பேசுவதில்லை - மோசடிப் பதிவைத் தவிர வேறு எதையும் பதிவு செய்வதில்லை என்று அவர்கள் நம்பும் இராமன்மீது 'சத்தியம்' செய்து ஒரு கூட்டம் புறப்பட்டுள்ளது.

இன்றைய பிரதமரும் மேனாள் குஜராத் மாநில முதலமைச்சருமான நரேந்திர மோடி முதல் அமைச்சராக இருந்தபோது, சீனாவின் ஷாங்காய் நகர் பேருந்து நிலையப் படத்தை குஜராத் மாநிலம் அகமதாபாத் பேருந்து நிலையம் என்று சமூக வலைதளங்களில் வெளியிடவில்லையா? எப்படிப் பட்ட அதி அற்புதமான ஆட்சித் தலைவரை நாம் பெற்று இருக்கிறோம். அந்த வழியில் அவரைச் சார்ந்த சங்கிகள் இந்த மோசடியைச் செய்துள்ளனர்.

'மோசடியே உன் பெயர் தான் பிஜேபியா' என்று வேண்டுமானால் பட்டப் பெயர் சூட்டி மக்களின் மத்தியில் அம்பலப்படுத்தலாம். 

No comments:

Post a Comment