“திடீர்ச் சாமியார்கள், மந்திரவாதிகள்'' போன்ற 'நவீன 420' பேர்வழிகள் உருவாகாமல் தடுக்க - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 14, 2022

“திடீர்ச் சாமியார்கள், மந்திரவாதிகள்'' போன்ற 'நவீன 420' பேர்வழிகள் உருவாகாமல் தடுக்க

மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்றுவது அவசர அவசியம்!

திடீர்ச் சாமியார்கள், மந்திரவாதிகள் போன்ற ‘நவீன 420' பேர்வழிகள் உருவாகாமல் தடுக்க மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்றுவது அவசரம், அவசியம் ஆகும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

பெரியார் மண்ணான இந்தத் ‘திராவிட பூமி'யில் மூடநம்பிக்கைகளும், அதன் காரணமாக மோசடிகளும், உயிர்ப்பலிகளும்கூட, முன்பு எப்போதும் இல்லாது, அங்கொன்றும், இங்கொன்றுமாக நடைபெற்று வருவது வேதனை அளிக்கிறது!

‘பில்லி சூன்யம்' என்ற பெயராலும், ‘மந்திரவாதிகள்' என்னும் ‘சாமியார்கள்' என்ற பெயரிலும் பழைய கிரிமினல்களும், புதிய கிரிமினல்களும் அப்பாவி மக்களை ஏமாற்றி நரபலி வரைக்கும் செல்லுகின்றனர்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் 

மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டினோம்

சொந்தக் குழந்தையைக்கூட நரபலி கொடுத்த சம்பவங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் சில மாதங் களுக்குமுன்பு நடந்ததையொட்டியே திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்டம் முழுவதும் கிராமங்கள் உள்பட சுமார் 15 நாள்களுக்குமேல் தொடர் பிரச்சாரம் செய்யப்பட்டு, மக்களுக்கு நல்ல விழிப்புணர்வை ஊட்டினோம்.

விராலி மலையில் மிகப்பெரிய பொதுக்கூட்டத்தில் நான் கலந்துகொண்டு, மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச் சாரத்தை நிகழ்த்தியதை, கட்சி வேறுபாடின்றி அனைத்துக் கட்சியினரும் வரவேற்றுப் பாராட்டி நன்றி கூறினார்கள்!

முதலமைச்சருக்கு நமது வேண்டுகோள்!

தமிழ்நாட்டில் இதற்கு ‘திராவிட மாடல்' ஆட்சி முன் னுரிமை தந்து, மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் ஒன்றைத் தனியே சட்டமன்றத்தில் நிறைவேற்றி, செயல்படுத்த முன்வரவேண்டும்  என்று நமது முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

ஆன்-லைன் ரம்மி போன்ற சூதாட்டங்கள் - போட்டி விளையாட்டுகள் தடைச் சட்டம் நிறைவேற்றுவது எப்படி வரவேற்கப்படுகிறதோ, அதேபோல, இந்த மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டம் (Eradication of Superstition  Bill and promoting Rationality) என்ற ஒரு சட்டத்தை நிறைவேற்ற வேண்டியது அவசர அவசியமாகும்.

தமிழ்நாடுதான் முந்திக் கொண்டிருக்கவேண்டும்!

இம்மாதிரி சட்டத்தை கருநாடக மாநிலத்தில் சித்த ராமய்யா அவர்கள் முதலமைச்சராக முன்பு பதவியில் இருந்தபோது, இப்படி ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டு அமலில் உள்ளது.

அதேபோல, மதவெறியர்களால் சுட்டுக் கொல்லப் பட்ட மராத்திய மாநிலத்தின் மாபெரும் பகுத்தறிவாள மனிதநேயர் டாக்டர் நரேந்திர தபோல்கர் அவர்களது தொடர் முயற்சி காரணமாக மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் மராத்திய மாநிலத்தில் நிறைவேற்றப்பட்டது!

தமிழ்நாடுதான் இதில் முந்திக் கொண்டிருக்க வேண்டும்; பரவாயில்லை, சற்றுக் காலந்தாழ்ந்தது என்றாலும், முற்போக்கு மனிதர்களை, மூடநம்பிக்கை நோய் தாக்காமல் தடுக்க இப்படி ஒரு சட்டத்தை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற முன்வருதல் அவசியம்.

ஆட்சிப் பொறுப்பில் நம் நாட்டில் உள்ள அனைவரும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி உறுதிமொழி ஏற்கிறார்கள்.

அரசமைப்புச் சட்டம் கூறும் 

அடிப்படைக் கடமைகள் என்ன?

‘‘அந்த அரசமைப்புச் சட்டத்தில் 51-ஏ பிரிவு அடிப்படைக் கடமைகள் (Fundamental Duties)  கூறுவது என்ன?

ஒவ்வொரு இந்தியக் குடிமகனும்,

1. அறிவியல் மனப்பான்மை

2. கேள்வி கேட்டு சிந்திக்கும் தன்மை

3. மனிதநேயம்

4. சீர்திருத்தம்

இவற்றை அனைவருக்கும் பரப்பவேண்டும். இதுதான் ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள அடிப்படைக் கடமை'' என்று கூறுகிறது.

மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்றுக!

எனவே, அரசு அதனை அமல்படுத்திடும் வகையில், மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை இந்த சட்டசபைக் கூட்டத் தொடரிலோ அல்லது அடுத்த பட்ஜெட் ‘செசனிலோ' நிறைவேற்றிட முன்வரவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்!

உடல்நோய்த் தடுப்பும் (Physical Immunity) - உடலில் நோய்கள் புகாவண்ணம் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெருக்குவதும் எவ்வளவு முக்கியமோ, அதுபோன்றதே, Mental Immunity - மன ரீதியாகவும் மூடநம்பிக்கை புகாவண்ணம் எதிர்ப்பு சக்தியை ஒவ்வொருவருக்கும் ஏற்றுவதே இதுபோன்ற தனிச் சட்டமாகும். அதனை வெறும் ஏட்டுச் சுரைக்காயாகவே வைத்திராமல், செயல்வடிவம் தர தனி காவல் பிரிவையும், ‘க்யூ' பிராஞ்ச் மாதிரி உருவாக்கவும் வேண்டும்!

அவசரம், அவசியம் ஆகும்!

திடீர்ச் சாமியார்கள், மந்திரவாதிகள் போன்ற ‘நவீன 420' பேர்வழிகள் உருவாகாமல் தடுக்க இதுபோன்ற முயற்சிகளை - அறிவியல் மனப்பான்மையை ‘திராவிட மாடல்' ஆட்சி வளர்ப்பதும் அவசரம், அவசியம் ஆகும்!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

ஈரோடு

14.10.2022


No comments:

Post a Comment