கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் திரும்பி வருவார்களா என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் கிடையாது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 24, 2022

கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் திரும்பி வருவார்களா என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் கிடையாது!

மீனவ சமுதாயத்தினுடைய வாழ்க்கை என்பது, பாதுகாப்பற்ற வாழ்க்கை - மிகவும் சங்கடமான வாழ்க்கை; ஆனால், மற்றவர்களையெல்லாம் வாழ வைக்கிற வாழ்க்கை

ஜெகதாப்பட்டினத்தில் நடைபெற்ற மணவிழாவில்  தமிழர் தலைவர் ஆசிரியர்

ஜெகதாப்பட்டினம், செப்.24  கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் திரும்பி வருவார்களா என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் கிடையாது; மீனவ சமுதாயத்தினுடைய வாழ்க்கை என்பது, பாதுகாப்பற்ற வாழ்க்கை - மிகவும் சங்கடமான வாழ்க்கை; ஆனால், மற்றவர்களையெல்லாம் வாழ வைக்கிற வாழ்க்கை  என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

மணமக்கள் குமார் - சுவாதி

கடந்த 14.9.2022  அன்று  புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடி ஒன்றியம், கீழ்மஞ்சக்குடி நினைவில் வாழும் சவுரிமுத்து - செபஸ்தியம்மாள் ஆகியோரின் மகன் திராவிடர் கழக மாநில இளைஞரணி செயலாள ராகப் பொறுப்பேற்று, செயல்படக்கூடிய ச.குமார் அவர் களுக்கும், புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடி ஒன்றியம், உசிலங்காடு அருளானந்து - சகாயமேரி ஆகியோரின் மகள் சுவாதி அவர்களுக்கும் வாழ்க்கை இணையேற்பு விழாவினை நடத்தி வைத்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.

அவரது  வாழ்த்துரை வருமாறு:

பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய அருமைத் தோழர்கள் - புதுக்கோட்டை மாவட்டம், மணல்மேல்குடி வட்டம் கீழ்மஞ்சக்குடி சவுரிமுத்து - செபஸ்தியம்மாள் ஆகியோரது செல்வன் குமார் அவர்களுக்கும், புதுக் கோட்டை மாவட்டம், மணல்மேல்குடி வட்டம், உசிலங்காடு அருளானந்து - சகாயமேரி ஆகியோரின் செல்வி சுவாதி அவர்களுக்கும் நடைபெறக்கூடிய இந்த வாழ்க்கை இணையேற்பு விழா நிகழ்ச்சியில், நம் அனைவரையும் வரவேற்று உரையாற்றிய மாநில இளை ஞரணி துணைச் செயலாளர் தோழர் வெற்றிக்குமார் அவர்களே,

அறிமுக உரையாற்றியதோடு மட்டுமல்லாமல், தோழர் குமார் அவர்களை இந்த அளவிற்கு ஒரு சிறந்த கொள்கையாளராகவும், பட்டதாரியாகவும், பெரியாரியல் வாதியில் சிறந்த செயல்வீரராகவும் ஆக்கிய - முக்கிய காரணமான - அதற்கு அடித்தளம் அமைத்த கரந்தை தமிழ்வேள் உமாமகேசுவரனார்  கலைக்கல்லூரி பேரா சிரியர் சுயமரியாதை வீரர் முனைவர் எழிலரசன் அவர்களே,

திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் தோழர் ஜெயக்குமார் அவர்களே, மணல்மேல்குடி ஒன்றிய துணைப் பெருந்தலைவர் கொள்கை வீரர் அய்யா சீனியார் அவர்களே, கழக மாநில அமைப்பாளர் செயல்வீரர் ஒரத்தநாடு குணசேகரன் அவர்களே, புதுக்கோட்டை மண்டல தலைவர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு அய்யா இராவணன் அவர்களே, அறந்தாங்கி மாவட்டக் கழகத் தலைவர் தோழர் மாரிமுத்து அவர்களே,

தஞ்சை மாநகராட்சியின் துணை மேயர் டாக்டர் அருமை அஞ்சுகம்பூபதி அவர்களே, ஒன்றியக் குழு உறுப்பினர், திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய செயலாளர் அருமைத் தோழர் சக்தி ராமசாமி அவர்களே, மாநில இளைஞரணி செயலாளர் தோழர் இளந்திரையன் அவர்களே, தேவேந்திரகுல வேளாளர் மாவட்ட அமைப்புச் செயலாளர் இராமநாதபுரம் தோழர் திரவியம் அவர்களே, புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் தோழர் அறிவொளி அவர்களே, அறந்தாங்கி மாவட்டக் கழக செயலாளர் கறம்பக்குடி முத்து அவர்களே,

தஞ்சை மாவட்ட கழக செயலாளர் அருணகிரி அவர்களே, பட்டுக்கோட்டை மாவட்ட செயலாளர் பேராவூரணி சிதம்பரம் அவர்களே, புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் அய்யா வீரப்பன் அவர்களே, கழகத் தொழில்நுட்ப அணியின் பொறுப்பாளர் வி.சி.வில்வம் அவர்களே,

காரைக்குடி மாவட்ட செயலாளர் தோழர் வைகறை அவர்களே, மார்க்சிஸ்ட் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் தோழர் கரு.இராமநாதன் அவர் களே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொகுதிச் செயலாளரும், எங்களை அன்போடு வரவேற்றவருமான கதிரழகன் அவர்களே, தஞ்சை மாவட்ட துணை செயலாளர் உத்திராபதி அவர்களே,

செல்வனேந்தல் மீனவர் சங்கத் தலைவர் - எங்கள் அன்பிற்குரியவரும், சிறப்பாக எங்களை வரவேற்று பெருமைப்படுத்தியவருமான அருமை அய்யா பால முருகன் அவர்களே, செல்வனேந்தல் கிராமத் தலைவர் பல்தசார் அவர்களே, செயலாளர் செபஸ்தியான் அவர்களே, பொருளாளர் ஏ.வி.எம். ஆரோக்கியசாமி அவர்களே, பங்கு மன்ற உறுப்பினர் அமிர்தம் அவர்களே, பொதுக்குழு உறுப்பினர் அரு.நல்லதம்பி அவர்களே, கீழமஞ்சக்குடி ஊராட்சி மன்றத் தலைவர் அருமை நண்பர் அகமது அரபு அவர்களே, குமாரின் சிறிய தந்தை அய்யா வேதமாணிக்கம் அவர்களே, இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்கின்ற பட்டுக் கோட்டை நகர தலைவர் சிற்பி சேகர் அவர்களே,

புதுக்கோட்டை மண்டல இளைஞரணி செயலாளர் வீரய்யா அவர்களே, மாவட்ட இளைஞரணி தலைவர் நாகராஜா அவர்களே, இளைஞரணி செயலாளர் காரல்மாரக்ஸ் அவர்களே, மணல்மேல்குடி ஒன்றிய தலைவர் சிவசாமி அவர்களே, அறந்தாங்கி நகர தலைவர் பன்னீர்செல்வம் அவர்களே, நன்றியுரை கூறவிருக்கக்கூடிய குழ.சந்திரகுமார் அவர்களே,

மற்றும் இந்நிகழ்வில் பங்கேற்று மணமக்களை வாழ்த்திக் கொண்டிருக்கக்கூடிய இந்தப் பகுதிவாழ் பெரியோர்களே, அருமைத் தாய்மார்களே, நண்பர்களே உங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கத்தையும், வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பயணம் செய்ய முடியாத - மேடையில் பேச முடியாத அளவிற்கு இருந்தாலும்கூட...

அருமைச் செல்வர்கள் குமார் - சுவாதி ஆகியோ ருடைய வாழ்க்கை இணையேற்பு விழாவில் கலந்து கொள்வதில் எனக்குப் பெருமகிழ்ச்சி! கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவு ஏற்பட்டிருந்தாலும், பயணம் செய்ய முடியாத, மேடையில் பேச முடியாத அளவிற்கு இருந்தாலும், இப்பொழுதுகூட என்னுடைய குரல் சரியாக இல்லாத ஒரு சூழ்நிலையில்கூட, மணமக்களைப் பார்த்து, குறிப்பாக மணமக்களுடைய பெற்றோரைப் பார்த்து, அவர்களுக்கு வாழ்த்துச் சொல்லிவிட்டு வந்தால் போதும் என்றுதான் இங்கே வந்திருக்கிறேன்.

உங்களை ஏமாற்றிவிடக் கூடாது என்பதற்காகத்தான் நான் இங்கே வந்திருக்கிறேன். இங்கே எல்லா தலைவர் களும் இருக்கிறார்கள். இது தந்தை பெரியாருக்குக் கிடைத்த பெரிய மரியாதையாகும். பெரியார் இல்லை யானால், நம்மில் யாருமே இல்லை. அந்த அளவிற்கு, இந்த கிராமம், இந்தப் பகுதிகளில் எல்லாம் அய்யா வினுடைய உழைப்பினால், இன்றைக்கு சிறந்த ஒரு வெற்றிக்கனிகளாக இந்த மணமக்கள் இருக்கிறார்கள்.

இந்தக் கொள்கை ஏன் பின்பற்றப்படவேண்டும் என்பதற்கு, குமாரும் - சுவாதியும்தான் எடுத்துக்காட்டு.

அதற்கு என்ன காரணம்?

இங்கே அன்பான வரவேற்பைக் கொடுத்திருக் கிறீர்கள். இன்னொரு நாளில், இங்கே பொதுக்கூட்டத்தில் பங்கேற்க கண்டிப்பாக நான் வருவேன். அல்லது மீனவர் நலன் பாதுகாப்பு மாநாடு என்ற தலைப்பில் இந்தப் பகுதியில் மாநாடு கண்டிப்பாக நடக்கும். ஏனென்றால், அதிகமாக பாதிக்கப்படுகின்ற ஒரு சமூகம் இருக்கிறது என்று சொன்னால், அவர்களுடைய உயிரை துச்சமாக மதித்துத் தொழில் செய்துகொண்டிருக்கக் கூடிய ஒரு சமூகம் - மீனவ சமூகமாகும்.

ஒன்று மீனவ சமுதாயத்தோடு; இன்னொன்று இஸ்லாமிய சமுதாயத்தோடு

அவர்களைப்பற்றி எனக்கு வேறு யாரும் சொல்லவேண்டாம்; நான் கடலூரைச் சேர்ந்தவன். என்னுடைய வாழ்நாளில், அதிகமான அளவிற்கு நான் பழகியது என்பது இரண்டு சமுதாயத்தி னரிடம்தான்; ஒன்று மீனவ சமுதாயத்தோடு; இன்னொன்று இஸ்லாமிய சமுதாயத்தோடுதான்.

நான் படித்த பள்ளிக்கூடம்-  தொடக்கப் பள்ளிக்கூடம் இஸ்லாமியப் பள்ளிக்கூடம்; அடுத்தப் பள்ளிக் கூடம்  கிறித்துவ பள்ளிக்கூடம். அதற்கடுத்துதான் அண்ணா மலைப் பல்கலைக் கழகம்.

எனவேதான் வேறுபாடு இல்லாமல் எல்லோரையும் புரிந்துக்கொள்ளக்கூடிய அளவிற்கு வாய்ப்பைப் பெற்றிருக்கின்றோம்.

இன்றைக்கு அதிக நேரம் பேச வாய்ப்பில்லை என்றாலும், இது ஒரு திருமண நிகழ்ச்சி என்பதினால், வாழ்வியலைப்பற்றி பேசினாலும் - இந்த வட்டாரத்திற்கு சில மாதங்களில் நிச்சயம் தேதி கொடுத்து ஒரு பொதுக்கூட்டத்தை மய்யப் பகுதியில் நடத்துவோம்.

அன்றாடம் நாங்கள் அறிக்கைவிட்டுக் கொண்டிருக்கின்றோம்

மீனவர் பிரச்சினை போன்று தீர்க்கப்படாத பிரச்சினை வேறு எதுவும் கிடையாது. அன்றாடம் நாங்கள் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கின்றோம். ‘‘மீனவர்களை விடுதலை செய்யுங்கள், மீனவர்களை விடுதலை செய்யுங்கள்'' என்று.

மீனவர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்திற்காக கடலுக்கு மீன் பிடிக்கச் செல்கிறார்கள். அப்படி செல்லும் பொழுது, எல்லைக் கோட்டைத் தாண்டினார்கள் என்று சொல்கிறார்கள். நம்முடைய கப்பற்படை, இலங்கைக் கடற்படையினரின் தொல்லைகளால் அவதியுறு கிறார்கள்.

எப்பொழுதும் ஒன்றே நான் கேட்பேன் - நம்முடைய சகோதரர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லுகிறார்கள்; காற்றடித்தவுடன் அவர்கள் சென்ற படகு அந்தப் பக்கம் சென்றுவிட்டால், என்ன செய்ய முடியும்? கடலில் எல்லைக் கோடு போட்டிருக்கிறதா? இல்லையே!

மற்றவர்களையெல்லாம் வாழ வைக்கிற வாழ்க்கை

கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் திரும்பி வருவார்களா என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் கிடையாது. அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கைதான் மீனவ சமுதாய நண்பர்களின் வாழ்க்கை.

எனவே, இந்த சமுதாயத்தினுடைய வாழ்க்கை என்பது, பாதுகாப்பற்ற வாழ்க்கை - மிகவும் சங்கட மான வாழ்க்கை - ஆனால், மற்றவர்களையெல்லாம் வாழ வைக்கிற வாழ்க்கை.

மருத்துவரிடம் சென்று கேட்டீர்கள் என்றால், சத்தான உணவு சாப்பிடுங்கள் என்று சொல்வார்; ஆனால், இறைச்சி அதிகமாக சாப்பிடாதீர்கள்; காய்கறிகளைச் சாப்பிடுங்கள், அது நன்றுதான் என்பார். கோழிக்கறியை அதிகமாக சாப்பிடாதீர்கள்; அதேபோல, ஆட்டுக் கறியையும் அதிகமாக சாப்பிடாதீர்கள். ஆனால், மீன் சாப்பிடுங்கள், உடல்நலத்திற்கு மிகவும் நல்லது என்பார்.

உடல்நலத்திற்குப் பாதுகாப்பான உணவினை கொடுக்கிறவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை!

உடல்நலத்திற்குப் பாதுகாப்பான உணவினை கொடுக்கிறவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை. அவர்களுக்கு வாழ்வாதாரத்திற்கான பாதுகாப்பு இல்லை. இது ஒரு நீண்ட கால பிரச்சினையாகும். இதைப்பற்றி பேசவேண்டிய இடம் வேறு; அதற்குரிய தீர்வு காணவேண்டியதும் அவசியம்.

இந்தப் பகுதிக்கு ஏன் திராவிடர் கழகம் போன்ற அமைப்புகள் அதிகமாக வரவேண்டும் என்றால், பெரியார் அய்யா என்ன செய்தார்? திராவிடர் கழகம் என்ன செய்தது? கருப்புச் சட்டைக்காரர்கள் என்ன செய்தார்கள்? ஏன் மணமகன் குமார் அவர்கள் கருப்புச் சட்டை அணிந்துகொண்டு இருக்கிறார்? ஏன் இந்த மணவிழா இந்த முறையில் நடைபெறுகிறது என்று கொஞ்சம் யோசனை செய்து பாருங்கள்.

பெரியார் பிறந்திருக்காவிட்டால்...

பெரியார் பிறந்திருக்காவிட்டால், இந்த மேடையில் இருக்கின்ற நாங்கள் யாரும் பட்டதாரிகளாக ஆகியிருக்க முடியாது. துணை மேயராக இருக்கின்ற டாக்டர் அஞ்சுகம் பூபதி அவர்கள் டாக்டராக, அதுவும் சிறப்பான டாக்டராக இருக்கிறார். நான் எம்.ஏ., பி.எல்., படித்திருக்கின்றேன். அதேபோல, மணமகன் குமார் அவர்கள், ஓர் எளிய குடும்பத்தில் பிறந்து, எழில் போன்றவர்களுடைய துணையினால், எம்.எஸ்சி., எம்.பில்., பி.எட்.,  படித்திருக்கின்றார்.

ஒரு காலத்தில், நமக்கு எழுத்துக் கூட்டி படிக்கத் தெரியாது - நூறு ஆண்டுகளுக்கு முன்பு. ‘திராவிட மாடல்' ஆட்சி என்ன செய்தது என்பதற்கு இதுதான் அடையாளம். 

பெரியார் என்ன செய்தார் என்பதற்கு அடையாளம்; கருப்புச் சட்டை என்ன செய்தது என்பதற்கு அடை யாளம் இதுதான்.

அன்றைக்கு நம்மவர்கள் எல்லாம் கைநாட்டுப் பேர்வழிகளாக இருந்தார்கள். இந்த சமுதாயத்தைப் பொறுத்தவரையில், நான் யாரையும் பிரித்துப் பார்ப்பது இல்லை. எல்லோரும் நம்முடைய சகோதரர்கள். எங் களுக்கு யாருடைய அடையாளமும் தெரியாது. இந்தப் பகுதித் தோழர்கள் திரும்பத் திரும்ப சொன்னதினால் அவரை அடையாளம் தெரிந்தது. இல்லையென்றால், எத்தனை ஆண்டுகள் ஆனாலும், எங்களுக்கு ஜாதீய அடையாளமோ, மத அடையாளமோ கிடையாது. எங்களுக்கு மனிதயே அடையாளம்தான் மிக முக்கியமானது.

எப்படி இவ்வளவு பட்டங்களை மணமகன் வாங்கியிருக்கிறார். திராவிட ஆட்சியினால்தானே!

இங்கே அழகாக சொன்னார் சக்தி இராமசாமி அவர்கள். இன்றைக்கு சனாதனம் என்கிற வார்த்தையை பயன்படுத்துகிறார்கள் என்று.

நம்முடைய காலைப் பிடித்து இழுக்கவேண்டும் - வெட்டவேண்டும் என்று நினைக்கிறார்கள்!

இன்றைக்கு நாம் வளர்ந்து வருகிறோம் என்பதினால், நம்முடைய காலை வெட்டவேண்டும் என்று நினைக் கிறார்கள். மேலே ஏறிப் போகிறார்கள் என்பதற்காக நம்முடைய காலைப் பிடித்து இழுக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்.

அதைத் தடுப்பதற்குத்தான் இந்த இயக்கங்கள் தேவை. உங்களுடைய வளர்ச்சி தேவை.

மணமகள் சுவாதி அவருடைய பெற்றோரை நாம் பாராட்டவேண்டும். ஏனென்றால், காலங்காலமாக நமக்கு வலை இருக்கிறது; நிலம் இருக்கிறது; நமக்கு இரண்டு தோணி இருக்கிறது என்று நினைக்காமல், கல்வி அறிவுதான் மிகவும் என்று நினைத்து, தம்முடைய பிள் ளையைப் படிக்க வைத்திருக்கிறார்களே, அதற் காகத்தான்.

இங்கே வந்திருக்கின்ற தாய்மார்களுக்கு, சகோதரி களுக்கு நான் சொல்லிக் கொள்வது என்னவென்றால், உங்களுடைய  பிள்ளைகளை நன்றாகப் படிக்க வையுங்கள்; பணத்தைப்பற்றி கவலைப்பட வேண்டாம்; நம்முடைய முதலமைச்சர் அவர்கள் ஒரு திட்டத்தை ஆரம்பித்திருக்கிறார் - அதுதான் புதுமைப் பெண் திட்டம். இதுவரையில் பழைமை பெண்ணாகவே இருந்ததை, மாற்றிக் காட்டுகின்ற ஆட்சிதான், ‘திராவிட மாடல்' ஆட்சி. பெரியார் கண்ட புதுமைப் பெண்.

மாதம் ஆயிரம் ரூபாய் அரசாங்கம் கொடுக்கப் போகிறது

நம்முடைய மணமகன் குமாரிடம் கேட்டேன், மணமகள் சுவாதி அவர்கள் காரைக்குடியில் பி.எட். படித்துக் கொண்டிருக்கிறார்; அடுத்த ஆண்டு முடிக்கப் போகிறார். அடுத்த மாதத்திலிருந்து மணமகள் சுவாதிக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் அரசாங்கம் கொடுக்கப் போகிறது.

நாம் எவ்வளவு காலம் சரசுவதியைக் கும்பிட்டோம்; எவ்வளவு காலம் ஆயுத பூஜை இருந்தது; சரசுவதிக்குத் தெரியாத விஷயம், ஸ்டாலினுக்குத் தெரிந்திருக்கிறது. ஏனென்றால், அவர் பெரியார் பள்ளிக் கூடத்தில் படித்திருக்கிறார்.                                             (தொடரும்)

No comments:

Post a Comment