பார்ப்பனர்களின் பொய்யழுகை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 24, 2022

பார்ப்பனர்களின் பொய்யழுகை!

பார்ப்பனர்கள் ஏதோ திருந்தி விட்டனர் என்றும், மிக மிக சாதுவானவர்கள் என்றும், அவர்களால் மற்ற ஜாதியினருக்கு எந்தவித தீங்கும் தொல்லையும் கிடையாது என்றும், மேலோட்டமாகப் பார்ப்பவர்களுக்கு 'நியாயந்தானே!' என்று நினைக்கும் அளவுக்கும் சாமர்த்தியமாகப் பேசக் கூடியவர்கள், எழுதக் கூடியவர்கள் பார்ப்பனர்களே!

'தினமலர்', 'தினமணி', 'துக்ளக்' போன்ற ஏடுகளைப் புரட்டினால் அவர்கள் யாருக்காகப் பேசுகிறார்கள். வாதாடுகிறார்கள் என்பது எளிதில் விளங்கி விடும்.

செய்திகளைத் தங்கள் பார்ப்பனப் பார்வையில் திரித்து வெளியிடுவது மட்டுமல்ல; 'உங்கள் இடம்' என்ற ஆசிரியர் கடிதங்கள் என்ற பகுதியில் வரும் கடிதங்களைப் பார்த்தாலே போதும். எடுத்துக்காட்டுக்கு இதோ ஒரு கடிதம். 

பிராமணர்களை வம்புக்கு இழுக்காதீங்க!

தி.ஸ்ரீராம் விஷ்ணு, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில், தி.மு.க., ஆட்சி நடக்கும் போதெல்லாம், ஹிந்து மதத்தையும், ஹிந்து மத வழிபாட்டு முறைகளையும், குறிப்பாக பிராமண சமூகத்தினரையும் இழிவுபடுத்தி பேசுவதை, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் வழக்கமாக வைத்திருக்கின்றனர். ஆரியம், திராவிடம் என்ற இரண்டு வார்த்தைகளை சொல்லியும் பிழைப்பு நடத்துகின்றனர்.

அத்துடன், சனாதனம், வர்ணாசிரமம், சூத்திரன் என்ற புரியாத வார்த்தைகளை பயன்படுத்தியும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தி.மு.க., - எம்.பி., - ஆ.ராஜா போன்றோர், பிராமணர்களை குறை கூறுகின்றனர். அந்த இருவரும் தெரிந்து கொள்ள வேண்டியதாவது...

* பட்டியலினத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் கொடியேற்றுவதை, எந்த பிராமணரும் தடுக்கவில்லை; அவர்களை தரையில் அமரும்படியும் சொல்லவில்லை

* தாழ்த்தப்பட்டவர்களை கோவிலுக்குள் அனுமதிக்க மறுப்பதும், இறந்தவர்களை அவர்கள் வீதி வழியாக எடுத்துச் செல்ல மறுப்பதும், 'இரட்டை டம்ளர்' முறையும், பொதுக் குழாயில் தண்ணீர் பிடிக்க தடை விதிப்பதும், ஆணவக் கொலையில் ஈடுபடுவதும் பிராமணர்கள் அல்ல.

இவற்றை செய்பவர்கள், சமூக நீதி, சமத்துவம் என்று கூறிக் கொள்ளும், உங்கள் கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சியினரே

* தமிழகத்தில் உள்ள ஆதிக்க சமூகத்தினரை விமர்சிக்க அஞ்சும் நீங்கள், அப்பாவிகள் என்பதால், பிராமணர்களை மட்டும் விமர்சிப்பது சரியல்ல. அது மட்டுமின்றி, நீங்கள் பெரும்பான்மையாக உள்ள கிராமங்களில், சிறுபான்மையாக உள்ளவர்கள் படும்பாடு இருக்கிறதே... பட்டியலினத்திலேயே சிறுபான்மையினராக இருந்து, கவுரவமாக வாழ்ந்து வரும் ஜாதியினர், உங்களிடம் படும் அவஸ்தை கொடியது.

இதை எல்லாம் தெரிந்து, அதன்பின் அரசியல் செய்யுங்கள். பொத்தாம் பொதுவாக எதற்கெடுத்தாலும், பிராமணர்களை வம்புக்கு இழுப்பதை விட்டு விடுங்கள்; அவர்கள் சபித்தால் நாடே அழிந்து விடும்.

மொத்தத்தில், ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டு மானால், 'கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே... சங்கு சுட்டாலும் வெண்மை தரும்!'

('தினமலர்' 22.9.2022 பக்.8)

எவ்வளவு நயவஞ்சமாக தளுக்காக இந்தக் கடிதம் இருக்கிறது என்பதைக் கவனிக்கத் தவறிடக் கூடாது.

ஜாதி வேறுபாடு என்பதற்கான மூலக்கரு பார்ப் பனர்கள்தான் - அவர்களின் மதம்தான் - அவர்களால் உருவாக்கப்பட்ட வேத, சாஸ்திர, இதிகாச புராணங்கள்தான். இன்றும்கூட ஹிந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் எந்த ஜாதியினராக இருந்தாலும் அர்ச்சகர்களாக - அதற்குரிய பயிற்சி பெற்றவர்கள் ஆகலாம் - என்று சட்டம் செய்தால், அதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை செல்பவர்கள் யார்?

ஒவ்வொரு ஆண்டும் ஆவணி அவிட்டம் என்ற பெயரால் பூணூலைப் புதுப்பிப்பது ஏன்? தாங்கள் துவி ஜாதியினர் (இரு பிறப்பாளர்கள்) என்பதை நிலை நிறுத்தத்தானே.

இவர்களின் மனுஸ்மிருதிப்படி சூத்திரர்கள் என்று கூறப்படும் நான்காம் வருணத்தார்க்குப் பூணூல் தரிக்க உரிமை உண்டா?

தங்களைப் பிராமணன் என்று சொல்லிக் கொள்ளுவது, மற்றவர்களை சூத்திரர்கள் என்று சுட்டிக்காட்டத் தானே! இதனை எதிர்த்துக் கேட்டால் திமுக ஆட்சி வந்தால் ஆரிய - திராவிட பேதம் என்ற வாதம் தலை தூக்குகிறது என்று மூக்கால் அழுவது யாரை ஏமாற்றிட? சாபமிடுகிறார்கள். அவர்களின் சாபமெல்லாம் பெரியாரிடம் எடுபடவில்லையே!

சுடுகாடு பற்றி தினமலர் எழுதுகிறதே! அனைவருக்கும் ஒரே சுடுகாடு என்று சொன்னபோது அதனை எதிர்த்தவர் அவர்களின் ஜெகத் குருவான சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதிதானே - தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும் ஹிந்துக்கள்தான் என்று தங்களுக்குத் தேவைப்படும் பொழுது சாமர்த்தியமாகப் பேசும் இந்தப் பார்ப்பனக் கூட்டம், கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் அவர்களுக்கு இடஒதுக்கீடு என்கிறபோது, அதனைக்  கடுமையாக எதிர்ப்பானேன்? தினமலர்க் கூட்டம் பதில் சொல்லுமா? எழுதுமா?

No comments:

Post a Comment