"சிற்றோடையில்" நனைந்த இன்பம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 24, 2022

"சிற்றோடையில்" நனைந்த இன்பம்!

நவில்தோறும் நூல் நயம் தரும் நூல்கள் வகையில் பல உண்டு; திருக்குறள், பெரியார் களஞ்சியம் போன்ற பல கடல்களும் உண்டு; வேறு சில ஆறுகளும், குளங்களும், ஏன் குட்டைகளும்கூட உண்டு!

ஓடைகளும் உண்டு. நீர் வீழ்ச்சிகளாகவும் ஓடைகளில் விழும் பல இலக்கியக் கருவூலங்களும் உண்டு.

எனவே, தான் நமது புரட்சிக் கவிஞர், "நூலைப் படி, நூலைப்படி காலையில் படி, மாலையில் படி கடும் பகலும் படி" என்று படிபடி என்ற 'படியளந்து' நமக்கு கருத்து கவிதை விருந்தளிக்கிறார்.

அப்படி ஒரு நூல்தான் பொறியாளர் தோழர் சு. பழநிராசன் B.E., D.F.M  (நிதி நிர்வாகம்) பயின்று பணியாற்றி, பன்னாட்டு அனுபவச் செல்வங் களைப் பாடமாகவும் கற்று தன் வரலாறு தீட்டித் தந்திருக்கிறார். 'ஒரு சிற்றோடையின் கதை' என்ற தலைப்பில் 120 பக்கங்கள் கொண்ட இந்த நூல்.

நூலை எனக்கு பொதுச் செயலாளர் ஜெயக்குமார் மூலம் கொடுத்த நாளில், நீண்ட பயணம் வேன், ரயில் மூலம் இருந்தது எனக்கு வசதியாயிற்று! - படித்தேன்; சுவைத்தேன்.

நல்ல தன்மான உணர்வாளர்; தமிழ் மானப் போர் மறவர்; விளம்பரமில்லா வினைஞர் தந்த நூல் இது!

அவரது 'தன் வரலாறு' மூலம் அவர் வாழ்வில் அவர் கற்றுக் கொண்ட பாடங்களும் - அதற்கு, அவர் கொடுத்த அதீதமான விலையும்கூட நமக்கு சிற்சில பக்கங்களைப் படிக்கும் போது மன வலியையும் உண்டாக்குகிறது!

வாழ்க்கைப் பாடங்களை இதுபோன்ற தன் வரலாறு நூல்களை நாம் படிப்பதைவிட, மற்றவர்களும் கற்க வேண்டியது அவசியம்.

படிப்பதை மறக்கலாம்.

கற்பதை மறக்காமல் 'நிற்க' - கடைப்பிடித்தும்

ஒழுக வேண்டும் என்பதும் அவசியம்.

அவர் தஞ்சை பூதலூர் கிராமத்திற்கு அருகில் உள்ள சித்திரக்குடி (18 கல் தூரம் தஞ்சையிலிருந்து) என்ற சிறிய கிராமத்தில் ஒரு பெரிய கூட்டுக் குடும்பத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்து, பிறகு பொறியாளராக படித்து முடித்து, பெரிய பதவிகளில் அமர்ந்து, உலகளந்து வந்து ஓய்வு பெற்று இனிப் பெரியாரின் சமூகத் தொண்டுதான் என்று முடிவு கட்டி வாழும் ஒரு கொள்கை யாளர்.

அவரது 75ஆம் ஆண்டு பவள விழாவை யொட்டி இந்நூலை அவர் வெளியிட்டுள்ளார்.

பல்வேறு இடங்களில் இந்த சிற்றோடை பாய்ந்து, தரைகளையும், பல நெஞ்சங்களையும் ஈரமாக்கவும் தவறவில்லை. அவர் எழுதிய முன் னுரை அருமையான பகுதி. அதை அப்படியே (கடைசி பத்தி தவிர) தருகிறேன். படித்துப் பார்த்தால் நூலைப் படிக்கும் அவா உங்களை உந்தித் தள்ளும்.

"நான் சாதாரணமானவன். மிகச் சாதாரண மானவன். ஆனால், ஒவ்வொரு சாதாரண மனிதனுக்கும் ஒரு தன் வரலாறு உண்டு. அந்த வரலாற்றிலிருந்து மற்றவர்கள் பாடங்கற்க நிச்சயம் நிறைய செய்திகள் இருக்கும். அவைப் பின் பற்றப்பட வேண்டியவைகளாக இருக்கலாம் அல்லது தவிர்க்கப்பட வேண்டியவைகளாக இருக்கலாம். ஆனால் நிச்சயம் சில பாடங்கள் இருக்கும். அந்த வகையில் சுமார் 75 ஆண்டு கால என் வாழ்க்கையில் நடந்த பல நிகழ்வுகளைக் கோர்த்து ஒரு தன் வரலாறாக இந்த நூலை எழுதியுள்ளேன். இதில் என் நிறை குறைகளை, படிக்கும் ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ளலாம். நான் செய்த தவறுகளை அறிந்துகொள்ளலாம். அவற்றைத் தவிர்க்க உங்களுக்கு ஒருவேளை உதவக் கூடும். நீங்கள் கற்பதற்கு சில நல்ல விடயங்கள்கூட இதில் இருக்கலாம்.

என்னைப் பொறுத்தவரை நான் ஒரு பெரிய சாதனையாளன் அல்ல. சாதிக்கத் தவறியவன் என்பதே என்னைப் பற்றிய எனது கணிப்பு. ஆனால், உயரமான மலையில் சில சிகரங்களைத் தொட்டிருக்கிறேன். நீண்ட மராத்தானில் கணிசமான தூரம் ஓடியிருக்கிறேன். படியுங்கள். நீங்கள் பயன் அடைந்தால் மகிழ்வேன்."

இவர் நூற்றாண்டு நாயகர் - பெரும் புலவர் - பெரியார் பேருரையாளர் ந. இராமநாதன் அய்யாவின் மிக நெருங்கிய உறவுக்காரர்; அவர் பதித்த தடத்தில் நடக்கத் தவறாதவர். இதைவிட வேறு என்ன முக்கிய பெருமை, தகுதி வேண்டும் - படித்துப் பயன் பெறுக!

எனக்கு மிஞ்சியது வியப்பு!

புரிந்தது பெரியார் செய்த சமூகப் புரட்சி!!

No comments:

Post a Comment