"எப்போதும் மனக் கதவை மூடியே வைத்திருக்காதீர்கள்!" - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 30, 2022

"எப்போதும் மனக் கதவை மூடியே வைத்திருக்காதீர்கள்!"

 "எப்போதும் மனக் கதவை மூடியே வைத்திருக்காதீர்கள்!"

வாழ்வியலுக்கு முக்கிய அடிப்படை எதையும் சகிப்புத் தன்மையுடன் ஏற்பதுதான்; அது பாராட்டத்தக்கதே என்றாலும், எல்லா நிலைகளிலும் இந்த தத்துவக் கருத்து நடைமுறைக்குப் பயன்படாது என்பதையும், யதார்த்தமாக ஒவ்வொருவரும் உணரத் தவறக் கூடாது.

அதனை ஜென் பவுத்த தத்துவ கர்த்தா ஒருவர் - 'ஜென்கோ' என்று அழைக்கப்படும் அறிவுரைகளில் ஒன்றைச் சுட்டிக்காட்டுகிறார்.

'கதவுகளைத் திறங்கள்; உங்களுக்கு நீண்ட வாழ்வும் மகிழ்ச்சியும் கிடைக்கும்' என்பதே அது!

இதன் விளக்கம் என்ன தெரியுமா? வெளிப் படையாகவும், நாணயமாகவும் எதையும் செய்தல் பல நல்ல செயல்களை நமக்கு வரவழைத்துக் கொடுக்கும் என்பதே!

மிகவும் கடினமான, சோதனையான அல்லது வேதனையான நிலைமை ஏற்படும்போது - அந்தச் சங்கடங்களை எதிர் கொள்வதில் நமக்குப் பெரும் சுமையான சூழ்நிலை உருவாகும் போது - "நம்மால் தாங்க முடியாத பாரத்தை இப்படித் தூக்கிச் சுமக்க வேண்டி உள்ளதே" என்பதனை நினைத்து மனமொடிந்து போகாமல் இருக்க, நம் சக்திக்கும், உழைப்புக்கும் மீறிய செயலில் நாம் ஈடுபட்டோமா என்று நினைத்து மனந்தளருகின்ற - மன அழுத்தம் ஏற்படும்போது, உங்கள் மனதினை மூடி வைத்திராமல், மனக் கதவை அகலமாகத் திறவுங்கள். மற்றவர் ஆதரவு -  உதவி - தேவை கிடைத்தால் இந்த சுமையின் பாரம் நம் கழுத்தை ஒடிக்காது என்று நினைத்தால் - நாமே தூக்கி சுமக்க முடியாமல் திணறும்போது, மற்றவர்களின் உதவியைக் கேட்டுப் பெறுவதற்குத் தயக்கமோ, கூச்சமோ அடையத் தேவையில்லை! இவர்களால் உதவி கிட்டும் என்று நினைத்தால் அவர்களிடம் தாராளமாக நீங்கள் மனந் திறந்தால் - உதவி கோரினால்  நமது பாரத்தை அவர்களும் கூடவே சுமப்பர் நமக்கு உதவிடும் வகையில் என்று நீங்கள் நம்பும் போது அவர்களது உதவியை நாடுவதில் தவறில்லை என்பதைவிட தேவையானதும்கூட!

சமூகத்தில் இதற்குச் சரியான உதாரணம் - எடுத்துக்காட்டு நம்மீது அக்கறை செலுத்தும் முதுமை அடைந்தவர்கள் நலனைக்காக்க, பாதுகாப்பு அளிக்க நாம் முயற்சிக்கும்போது அதில் சிற்சில சோதனைகள், இக்கட்டுகள் ஏற்படினும், அவர்கள் நம்மைக் காப்பாற்ற எப்படியெல்லாம் கஷ்டப்பட்டார்கள் என்பதை எண்ணி அவர்களது இயலாமையைப் போக்க நாம் முயற்சிப்பதும், முன் வருவதும் தானே முறை - அப்படிச் செய்து அவர்கள் முதுமைச் சுமையை - முதுமைத் துன்பங்களை பெரிதும் குறைத்தும், அவர்களுக்கும் மகிழ்ச்சியைத் தந்து நமக்கும் இன்பத்தை வரவழைத்துக் கொள்ளலாமே!

நம் அப்பா, அம்மா போன்றவர்கள் எதையும் எதிர்பார்க்காமல் -  தங்கள் துன்பங்களை தூரத்தில் வைத்து நம்மை நாளும் காப்பாற்ற எப்படி உழைத்தனர் என்பதை எண்ணிப் பார்த்தால் நம் உதவியின் முக்கியத்துவம் எளிதில் புரியும்!

அலுவலகத்தில் ஏற்படும் கசப்பான சூழல், அளவுக்கு  அதிகமான வேலைப் பளு, மற்றவர்களால் ஏற்படும் பிரச்சினைகள், மோதல்கள், அதனால் வெடித்த பிரச்சினைகள் - இவற்றால் ஏற்படும் துன்பத்தை, துயரத்தை எதிர்கொள்ள முடியாதபோது, மற்றவரின் உதவி நாடி மனந்திறந்து பேசி - பிரச்சினையைக் கூறி, விடியலைத் தேட விடை காணுவது தவறல்லவே; தேவையல்லவா?

இம்மாதிரி நேரத்தில், 'ஆம்புலன்ஸ்' உதவி தேவைப்படும் அவசர சிகிச்சை நோயாளிபோல், நாம் மற்றவர் உதவியைக் கேட்டுப் பெறுவதில் சிறிதும் யோசிக்க வேண்டிய அவசியமே இல்லை.

தன் அடக்கம், எவரிடமும் எதையும் கேட்டு எனக்குப் பழக்கமில்லை - என்பவை நல்ல பண்புகள் என்றாலும் இம்மாதிரி சிக்கலான சந்தர்ப்பங்களில் அவற்றை ஒதுக்கி வைத்து, நாம் மற்றவர்களின் உதவியைக் கேட்பது நியாய மானதும் - முக்கியமானதும்கூட!

மற்றவரிடம் - நம் பாரத்தை இறக்கி வைத் தாலே, அது நமக்கு பலவகையில் நிவாரணம் - தேடித் தருவது உறுதி!

துன்பங்களைத் தாங்கிப் பழக்கப்படுத்தல் நல்லதுதான்; ஆனால், அதற்கும் சில விதி விலக்குகள் உண்டே! அதை ஏன் மனிதர்கள் மறக்க வேண்டும்? அல்லது மறுக்க வேண்டும்?

எனவே அப்போது உங்கள் மனக் கதவை மூடி வைத்திராது - திறந்து உதவியைக் கேட்டுப் பயனடைவீர்களாக!

No comments:

Post a Comment