குற்றவாளியே நீதிபதியா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 30, 2022

குற்றவாளியே நீதிபதியா?

கருநாடக மாநிலம் கட்டக்கில் உள்ள அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒருவர் - முகமது நபி பற்றி  எழுதச் சொன்னதாகக் கூறி - ஹிந்து அமைப்புகள் அவரை தாக்கி அவர் மதமாற்றம் செய்ய முயல்கிறார்  - என்று புகார் அளித்தனர். இது குறித்து விசாரணை நடத்த கருநாடக கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாம்.

கருநாடக மாநிலத்தில் மதம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் சமீப காலமாக அளப்பரிய அளவில் கிளம்புகின்றன. ஹிஜாப் பிரச்சினை மிகவும் தீவிரமாக இருந்த ஒரே தென்னிந்திய மாநிலமாக கருநாடகா இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் ஒரு இஸ்லாம்-இந்து மத பிரச்சினையுடன் வந்துள்ளது கருநாடகம். 

 கருநாடகமாநிலம் கட்டக்கில் உள்ள நாகவி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர், சீர்திருத்தவாதிகள் மற்றும் மதங்களைத் தோற்றுவித்த வர்கள் குறித்த கட்டுரைப் போட்டிக்கு ஏற்பாடு செய் திருந்தார், அதில் நபிகள் நாயகம் கட்டுரையும் வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. காரணம் அவரும் ஒரு மதத்தை தோற்றுவித்தவர் ஆவார். ஆனால் இந்த விவகாரம் வெளியே தெரிந்த உடன் கருநாடகாவில் வன்முறையைத் தூண்டிவிடும் ஹிந்து அமைப்புகளின்  சில்லறை அமைப்பான ராம்சேனா, பள்ளியில் நுழைந்தது, பள்ளி நடந்துகொண்டு இருக்கும் போதே தலைமை ஆசிரியர் அறைக்குச்சென்று அவரை தாக்கியுள்ளனர்.

 அங்கு படித்துவரும் மாணவரின் தந்தையான ஹிந்து அமைப்பைச்சேர்ந்த சரணப்ப கவுடா ஹப்லாட்  என்பவர் கூறுகையில், ''கட்டுரைப் போட்டி நடத்தி, 5,000 ரூபாய் பரிசுத் தொகை தருவதாக பள்ளி அறிவித்து, மாணவர்களின் மனதில் ஹிந்துமதத்தின்மீது வெறுப்பைத் திணிக்க பள்ளி தலைமையாசிரியர் முயற்சி செய்வதாக அறிந்தேன். சிறுவர், சிறுமியர் ரூ.5,000  பரிசுத் தொகையை வெல்வதற்காக கட்டுரை எழுத வைக்கப்பட்டனர். அதில் பல மத மாணவர்கள் உள்ளனர், அவர்கள் மத நம்பிக்கைகள் இதன் மூலம் மாறக்கூடும். மாணவர்களை மதமாற்றம் செய்வதே இவர்களது நோக்கம். அதனால்தான் ராம் சேனா அமைப்பிடம்  இந்த விஷயத்தை தெரிவித்தேன். முகமது நபி பற்றிய கட்டுரைப் போட்டியை நடத்துவதன் நோக்கம் என்ன என்பதை அறிய விரும்புகிறேன். விசாரணை தீவிரமாக நடைபெற வேண்டும்", என்று கூறினார்.

நபிகள் நாயகம் குறித்து கட்டுரை எழுதச் சொன்னதாக கூறி பள்ளி தலைமை ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி பள்ளி நடந்துகொண்டு இருக்கும் போதே சுமார் 20-க்கும் மேற்பட்ட ஹிந்து அமைப்பினர் 'ஜெய் சிறீராம் பாரத் மாதாகி ஜே' என்று கூச்சல் போட்டுக் கொண்டு பள்ளியில் நுழைந்தனர். அவர்களை தடுத்து நிறுத்த முயன்ற பள்ளி பணியாளர்களைத் தள்ளிவிட்டு நேரடியாக தலைமை ஆசிரியர் அறைக்குச் சென்று அவரை சரமாரியாக தாக்கத் துவங்கினர்  கண் முன்பே  நடந்த வன்முறையால் பள்ளி மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

கல்வித்துறை அதிகாரியான விருபாக்சப்பா நடுவினா மணி - தலைமை ஆசிரியர் ஹிந்து அமைப்பிரனால் தாக்கப்பட்டது பற்றி கூறுகையில்,  "ராம் சேனாவிடம் இருந்து  மதம் மாற்றம் தொடர்பான புகாரைப் பெற்றுள் ளோம்.  தலைமை ஆசிரியர் மீது விசாரணை நடத்த  அறிக்கை அனுப்பி உள்ளேன்" என்று கூறினாராம்.

தாக்கப்பட்ட தலைமை ஆசிரியர் நபிகள் நாயகம்பற்றி மட்டும் கட்டுரைப் போட்டி நடத்தவில்லை. சீர்திருத்தவாதிகள், மதங்களைத் தோற்றுவித்தவர்கள் பட்டியலில் நபிகள் நாயகமும் இடம் பெற்றுள்ளார்.

இதில் என்ன தவறு இருக்கிறது? இந்தியாவின் அதிகார பீடத்தில் பிஜேபி அமர்ந்தாலும் அமர்ந்தது, தலை கால் புரியாமல் ஹிந்து மதவாத வெறி தலை கொழுத்த வண்ணமாக நிர்வாண ஆட்டம் போடுகிறது. இது நாட்டுக்கு நல்லதல்ல.

இதில் விபரீதமான வேடிக்கை என்னவென்றால், கல்வி  அதிகாரி தலைமை ஆசிரியர்மீது விசாரணை நடத்திட அறிக்கை அனுப்பியுள்ளாராம்!

குற்றவாளியே நீதிபதியாகும் கதையாக அல்லவா இருக்கிறது.


No comments:

Post a Comment